என் மலர்
கிருஷ்ணகிரி
- வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் போத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி பள்ளிக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீடடை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிைலயத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
- கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
- பார்வையாளர்களை கவருவதற்கு, சமையல் போட்டிகள் மற்றும் இதர போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 'பி.என்.ஐ. வளம் 2023' என்ற தொழில் கண்காட்சி வருகிற 26-ந்தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பான, நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, அதியமான் கல்விக்குழும தலைவரும், ராஜ்யசபை உறுப்பினருமான டாக்டர் மு.தம்பிதுரை கலந்துகொண்டு பேசியதாவது:-
"இந்தியா வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் காண வேண்டும். தென்னிந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் என அதிகளவில் உருவாகின்றனர். மேலும் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர்.
வட மாநிலங்களில் தொழில் முனைவோர், வர்த்தகத் துறையினர் அதிக அளவில் உருவாகின்றனர். முன்னாள் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் ஒசூரில் தொழிற்சாலைகள் வருவதற்கு வித்திட்டார். இங்கு அசோக் லேலண்ட், டி.விஎஸ், டைட்டான் போன்ற தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தார். அவரால் ஒசூரில் தொழில் வளர்ச்சி பெற்றது. உலக அளவில் தொழில் புரட்சியில், சீனா மிரள வைக்கும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
எனவே மேக் இந்தியா திட்டத்தில், உற்பத்தித் துறையில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைய வேண்டும். தரமான, உற்பத்தி சார்ந்த பெரிய மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் வர வேண்டும்" .இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பி.என்.ஐ. செயல் இயக்குநர் பத்மநாபன், வருகிற மே 26 முதல் 28-ந் தேதி வரை ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் பி.என்.ஐ வளம் 2023-என்ற தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பெரிய நிறுவனங்களான அசோக் லேலண்ட், டிவிஎஸ், டைட்டான், டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களும் மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பார்வையாளர்களை கவருவதற்கு, சமையல் போட்டிகள் மற்றும் இதர போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்". இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், பி.என்.ஐ தர்மபுரி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முனிவரி பத்மநாபன், வளம் 2023 திட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணன், பி.என்.ஐ. ஒருங்கிணைப்பாளர் லதா ரவி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சாட்டிலைட் இந்த ஆண்டு விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
- மனிதர்கள் இல்லாத சேட்டிலைட்டிகளை விண்ணில் அனுப்பி சோதனை முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் மனிதனை வைத்து ககன்யான் சாட்டிலைட் விண்ணில் ஏவப்படும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில், ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் . கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விளையாட்டு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, இஸ்ரோ துணை இயக்குனர் எஸ். வி. சர்மா கலந்து கொண்டு 57 மாணவ மாணவியர்களுக்கு, ஒரு கோடியே 4 லட்சத்து 97 ஆயிரத்து 950 ரூபாய் உதவி தொகைகளை வழங்கி விழாவில் பேசினார்.
அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "சந்திராயன் -3 திட்டப்பணிகள் மேம்பட்ட நிலையில் உள்ளது. அது சம்பந்தமான தகவல்களை கொடுக்க துறையும் உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் சந்திராயன்-3 விண்ணில் ஏவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான தேதி மற்றும் நேரம் ஆகியவை விரைவில் ஆன்லைனில் அறிவிக்கப்படும்.
இந்தியா சார்பில், முற்றிலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 117 சாட்டிலைட்டுகள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரோ சார்பில் வெளிநாடுகளுக்கு சொந்தமான 398 சாட்டிலைட்டுகள், பி.எஸ். எல்.வி ஏவுகணை வாகனம் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வணிகரீதியாக இந்த சேட்டிலைட்டுகள் இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இஸ்ரோவும் நாசாவும் இணைந்து என். ஐ. சார் என்ற சாட்டிலைட்டை தயாரித்து வருகிறது. இதுவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. இந்த சாட்டிலைட்டும் விண்ணில் ஏவப்படும் தகவல்கள் விரைவில் வெளியாகும் .
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சாட்டிலைட் இந்த ஆண்டு விண்ணில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மனிதர்கள் இல்லாத சேட்டிலைட்டிகளை விண்ணில் அனுப்பி சோதனை முயற்சிகள் மேற்கொண்ட பின்னர் மனிதனை வைத்து ககன்யான் சாட்டிலைட் விண்ணில் ஏவப்படும், அது குறித்த தகவல்களும் விரைவில் இஸ்ரோ மூலம் வெளியாகும்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது, பள்ளியின் தாளாளர் அஸ்வத் நாராயணா, பள்ளி முதல்வர் சங்கீதா பல்லால் ஆகியோர் உடன் இருந்தனர்.
- இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.
- மனம் உடைந்து போன கோமாது நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் கோமாது (வயது48). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் எந்தவித பலன் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போன கோமாது நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
- தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்த இருந்த கண்டுபிடிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, சப் -இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி, நேரு ஆகியோர், ஓசூர் அடுத்த கும்மளாபுரரம் சோதனை சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கார் டிரைவரான கர்நாடக மாநிலம் ஆனேக்கலை சேர்ந்த அல்லாபகஸ்(வயது26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்த இருந்த கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரிசி மற்றும் கார் உரிமையாளரான மத்திகிரியை சேர்ந்த மாமூத்(எ)முகமதை தேடி வருகின்றனர்.
இதே போல், இந்த குழுவினர் காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு வந்த இருசக்கர வாகனத்தில் ஒருவர் அரிசி மூட்டையை எடுத்து வந்ததை நிறுத்தி சோதனை செய்தனர். அது ரேஷன் அரிசி என கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்த அரிசியை எடுத்து வந்தவர், கருக்கன்சாவடி, நரிமேடு, முனியப்பன்கொட்டாய், போத்தாபுரம்
பகுதியில் இருந்து வாங்கி வந்து, அதை காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள நிப்பட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அவ்வாறு வாங்கி வந்து பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசியை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை வாங்கி வந்த நரிமேடு பகுதியை சேர்ந்த வேடியப்பன்(55) என்பவரையும், அரிசியை வாங்கி வர கூறிய கருக்கன்சாவடி மேல்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(48) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி வட்டாரத்தில் தென்னையில் பூச்சி நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சூளகிரி வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தென்னையில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் காணப்பட்டுள்ளது.
அதனால் குறிப்பிடத்தக்க அளவு மகசூல் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக கருந்தழைப்புழு, ரூகோஸ், சுருள் வெள்ளை ஈக்கள் மற்றும் காண்டா மிருக வண்டு போன்ற பூச்சிகளும் கேரளா வேர் வாடல் நோய் மற்றும் தஞ்சாவூர் வாடல்நோய் அதிகளவில் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சூளகிரி வட்டாரத்திற்குட்பட்ட மாரண்டபள்ளி, பாத்தகோட்டா, காமன்தொட்டி, ஆழியாலம் ஆகிய கிராமங்களில் கருந்தழைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட வயல்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து அதை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு தொழில்நுட்பங்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
மேலும் மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள்( நீளம் 3 அடி, அகலம் 1 அடி) ஏக்கருக்கு 10 என்கிற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் தங்கவைத்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் ஒட்டுண்ணிகள் பிராக்கான் பிரிவிகார்னிஸ் 1800 எண்கள் ஏக்கர் வீதம் மரத்தின் ஓலையின் அடிப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்று விளக்கி கூறினார்.
இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர், ஸ்ரீ திவ்யா, இணை பேராசிரியர் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் முனியப்பன் பால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
- விற்பனைக்காக, இவர்கள் குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிந்தது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜுஜுவாடி செக்போஸ்ட் அருகே நேற்று மாலை சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெங்களூரில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் சுமார் 207 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து காரில் இருந்த 2 பேரை போலீசார் விசாரித்ததில், மதுரை, ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) மற்றும் சுடுதண்ணி வாய்க்கால் ரோட்டை சேர்ந்த மணிராஜ் என்பது தெரிய வந்தது.
மேலும் விற்பனைக்காக, இவர்கள் குட்கா பொருட்களை கடத்திவந்ததும் தெரிந்தது. இதை தொடர்ந்து கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- (மே 1ம் தேதி) மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் நாளை மூடப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி நாளை (1ம் தேதி) திங்கட்கிழமை மதுபானக் கடைகள் மூடப்படும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003&12வது விதியின் படி, உலக தொழிலாளர் தினமான மே தினத்தையொட்டி நாளை (மே 1ம் தேதி) மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் நாளை மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
- தாங்கள் நிலுவையில் உள்ள கட்டிடப் பணியை விரைந்து முடித்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
- கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் நிறைவேற்றித் தரப்படும்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி தவுலதாபாத் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் சார்பில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது :-
கிருஷ்ணகிரி நகராட்சி புதுப்பேட்டை பகுதியில் சேலம் சாலையில் கடந்த 1911 ஆம் ஆண்டு முதல் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி ஜமாத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வந்தது.
அந்தக் கட்டிடம் சுமார் நூறு ஆண்டிற்கும் மேலான பழமையான கட்டிடமாக இருந்ததால் அதை இடித்து புதிய கட்டிடம் கட்ட ஜமாத் கமிட்டி மூலம் நன்கொடை மூலம் முயற்சி நடந்தது.
ஆனால் சிலர் கட்டிடம் கட்ட தடையாக இருக்கிறார்கள். இதனால் கட்டிட வேலை பாதியில் நிற்கிறது. இந்தப் பள்ளியில் சுமார் 150 முஸ்லிம் மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் . தற்போது கட்டிட வசதி இல்லாததால் அருகில் உள்ள சப்- ஜெயில் சாலையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தற்காலிகமாக நான்கு அறைகள் மட்டும் ஒதுக்கப்பட்டு மிகவும் சிரமத்துடன் பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளிக்கு எல்லாம் தனியாக கட்டிட வசதியோ கழிப்பறை சத்துணவு கூடம், விளையாட்டு இடம் போன்ற எந்த அடிப்படையில் வசதியும் இல்லாமல் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். புதுப்பேட்டை பகுதியுள்ள 1500 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உள்ள நிலையில் பள்ளி இடம் மற்றும் கட்டிட வசதி இல்லாததால் முஸ்லிம் பெண் குழந்தைகள் கல்வியறிவு பெற தடையாக உள்ளது. ஆகவே தாங்கள் நிலுவையில் உள்ள கட்டிடப் பணியை விரைந்து முடித்து, நகராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நிரந்தர இட வசதி மற்றும் கட்டிட வசதி செய்து தருமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மதியழகன் எம்.எல்.ஏ. பள்ளி கட்டிடப் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகள் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது முன்னாள் நகராட்சி கவுன்சிலரும் தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான அஸ்லம், கவுன்சிலர் பிர்தோஷ்கான், முன்னாள் கவுன்சிலர் கராமத், சித்திக் முனீர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கூட்டத்தில் முன்னதாக வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது.
- இக்கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், சாதாரண மன்ற கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னதாக வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு மன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து (1.35 கோடி மதிப்பில் புதிதாக பேரூராட்சிக்கு அலுவலகம் கட்ட அரசுக்கு கருத்துரு அனுப்பட்டு உள்ளதாகவும், கோடையில் 18 வார்டுகளில் சீரான குடிநீர் வினியோகம், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். உடன் மன்ற உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- நகராட்சி எல்லையில் நாள்தோறும் ஒன்றரை டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.
- கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.13கோடியே 62லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் பரிதாநவாப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை இன்று 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள் செலுத்துபவர்களுக்கு 5சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தமிழக முதல் -அமைச்சருக்கு நகராட்சி மன்ற தலைவர் என்ற முறையிலும் நகராட்சி மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ரூ.19 கோடியே 72லட்சம் தொகை நிலுவை இருந்தது. கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.13கோடியே 62லட்சம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் உரிய முறையில் சொத்து வரியை செலுத்தி உள்ளார்கள். இதற்காக நகராட்சி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி நகராட்சி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இன்றும் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. நகராட்சி எல்லையில் நாள்தோறும் ஒன்றரை டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.
இது மக்கும் மக்காத பிளாஸ்டிக் என தரம் பிரித்து வருகிறோம். கிருஷ்ணகிரி பிளாஸ்டிக் இல்லாத நகரம் ஆக்கிட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு நகராட்சி தலைவர் பரிதா நவாப் கூறினார். அப்போது நகராட்சி ஆணையாளர் வசந்தி உடன் இருந்தார்.
- சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது.
- பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜமைதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது76). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சுகவனம் என்ற மகன் உள்ளார்.
தந்தைக்கும், மகன் சுகவனத்திற்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகவனத்தை கைது செய்தனர்.
இதேபோல் சுகவனம் போலீசாரிடம் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின்பேரில் தந்தை பால்ராஜ், தாய் தனலட்சுமி ஆகியோர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






