என் மலர்
கிருஷ்ணகிரி
- தண்ணீர் தொட்டியில் யானைகள் காலை, மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.
- அப்பகுதி வழியாக செல்வோர் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, ஓசூர், அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம் வனப்பகுதிகளில் இருந்து யானைகள் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவதை தடுக்க வனத்துறையினர் ஆங்காங்கே தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டிகளில் யானைகள் காலை, மாலை நேரங்களில் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன.
இந்த நிலையில் உரிகம் வனப்பகுதியான உடுபராணி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் யானைகள் காலை, மாலை நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. இதனை அப்பகுதி வழியாக செல்வோர் செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட சீனிவாசன் வீட்டில் விஷம் குடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சீபம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது.
இதில் மனமுடைந்து காணப்பட்ட சீனிவாசன் வீட்டில் விஷம் குடித்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை சாஸ்தா என்னும் அய்யனார் சிலை கிடைத்ததில்லை.
- ஒரு முழுமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா குன்னத்தூர் ஊராட்சி பாம்பாறு ஆற்றின் கரை அருகே உள்ள முத்தாகவுண்டனூர் கிராமத்தில், மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் கள ஆய்வினை மேற்கொண்டனர்.
அங்குள்ள இடிந்து போன சிவன் கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து புதிதாக கோவிலைக் கட்டி அதன் அருகே வைத்திருக்கின்றனர்.
இந்த சிலைகள் பற்றி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
இந்த இடத்தில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கர்கள் காலத்திய வட்டெழுத்து நடுகற்கள் இரண்டு காணப்படுவதை வைத்தும், இந்த சிலைகளின் அமைப்பை ஆராய்ந்த போதும், இவை 1000 ஆண்டுகள் பழமையான சிலைகள் என்று தெரிய வருகிறது.
மஹிஷாசுர மர்த்தினி சிலையின் பின்கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை பிடித்தவாறும், முன் கைகளில் சூலம் கொண்டு, எருமை உடல் கொண்ட அரக்கனை வதம் செய்யக்கூடிய காட்சி சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.
அடுத்துள்ள விஷ்ணு துர்க்கை சிலையின் பின் கைகளில் சங்கு சக்கரம், முன் வலது கையை அபய முத்திரையாகவும், இடது கையை தொங்கவிட்டும், நேராக நிற்கும் நிலையில் உள்ளது.
அடுத்தது பிரம்மசாஸ்தா உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை சாஸ்தா என்னும் அய்யனார் சிலை கிடைத்ததில்லை. இதுவே முதன் முறை. இந்த இடத்தில் ஒரு முழுமையான சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.
அந்த கோவிலின் சிலைகள் தான் இது. அதேபோல், வட்ட வடிவ ஆவுடையார், சதுர ஆவுடையார், உடைந்த நந்தி ஆகியனவும் காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுப்பணியில் தலைவர் நாராயணமூர்த்தி, சதாநந்தகிருஷ்ணகுமார், ஒருங்கிணைப்பார் தமிழ்செல்வன், பிரகாஷ், விஜகுமார், உள்ளூரைச் சேர்ந்த ராஜேஸ், பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 17 வயது சிறுவன் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வேப்பனப்பள்ளி -ஜங்கிரிப்பள்ளி சாலையில் மணவாரனப்பள்ளி அருகில் வாகன சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.
அப்போது சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 41 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையில் மொத்தம் 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது.
விசாரணையில் அந்த அரிசி, கங்கலேரி, கங்கலேரி கூட்டு ரோடு, வடுகம்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாங்கி கர்நாடகாவில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தாளப்பள்ளி அருகே திருச்சிப்பட்டியை சேர்ந்த அரிசி மற்றும் வாகனத்தின் உரிமையாளர் மாரிமுத்து (21), செம்படமுத்தூரை சேர்ந்த லட்சுமணன் (27), மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர்.
- மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், முழுவதும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி, ஓசூர், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், மகராஜகடை உள்பட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,700 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அநத வகையில் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்ததாக மாவட்டம் முழுவதும் 6 பேரை கைது செய்த போலீசார், ரூ.1200 மற்றும் லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1,630 பறிமுதல் செய்யப்பட்டது.
- நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்துள்ள பெருமாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது50). இவர் நேற்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது மரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே மாதையன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள சீபம் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது25). இவர் இருசக்கர வாகனத்தில் ராயக்கோட்டை-உலகம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த பிக்கப் வேன் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கியுள்ளார்.
- சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒகேனக்கல்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அவளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் தர்ஷன் (வயது15) பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார்.
தனது குடும்பத்தினருடன் நேற்று பஸ்ஸில் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் ஊட்டுமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் குடும்பத்தினருடன் குளித்தனர்.
அப்போது தர்ஷன் ஆழமான பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷன் ஆற்றில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் உடனடியாக தர்ஷனை மீட்டனர்.
அதிக அளவில் தண்ணீர் குடித்ததால் மயங்கிய நிலையில் இருந்த தர்ஷனை உடனடியாக மீட்டு ஊட்டமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் பெங்களூர் நகரை சேர்ந்த தேவராஜ் மகன் சேவியர் (18). இவர்பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் நான்கு பேருடன் நேற்று ஒகேனக்கல் வந்துள்ளார்.
அப்போது கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்த போது சேவியர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சேவியரை தேடி வருகின்றனர்.
- ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- விரைவில் நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் சின்டெக்ஸ் மின் டேங்க் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொடமாண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழ்சந்தம்பட்டி கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளது.
இக்கிராமத்தில் 2013ம் ஆண்டு 30,000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த ஓராண்டிற்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேற்பகுதியில் உள்ள மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.
அதை அப்புறப்படுத்திய ஊராட்சி நிர்வாகம், புதிய மேற்கூரை போடாமல் தார்பாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மூடி வைத்து, குடி தண்ணீர் வினியோகம் செய்து வந்தது.
தற்போது தார்பாய் முற்றிலும் கிழிந்து நீர்த்தேக்க தொட்டியினுள் தொங்கியபடி உள்ள நிலையில், பறவைகள் அதன் எச்சங்கள், பறவைகள் தூக்கிக்கொண்டு வரும் கழிவுகள் இத்தொட்டியினுள் விட்டு செல்வதால், தொட்டியினுள் புழுக்கள் உருவாகி சுகாதாரம் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பற்ற குடி தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சுகாதாரமற்ற தண்ணீரையே இக்கிராம வேறு வழியின்றி பருகி வருகின்றனர். ஊராட்சி தலைவரிடம் பல முறை முறையிட்டு ஒரு நாள் கூட நேரில் வந்து பார்க்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாதுகாப்பற்ற முறையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், காகங்கள் எச்சில்கள், கழிவுகளை போட்டு விட்டு செல்கிறது.
அதனால் பூச்சி, புழுக்கள் உருவாகிறது. அந்த தண்ணீரை கிராம மக்களுக்கு குழாய்கள் மூலம் வினியோகிக்கும்போது வேறு வழியின்றி பூச்சி, புழுக்கள் இருக்கும் குடி நீரை வடிகட்டி குடிப்பதால் அடிக்கடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும், ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினர்.
இதுகுறித்து கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல் அவரிடம் கேட்டதற்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், விரைவில் நீர்த்தேக்க தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் சின்டெக்ஸ் மின் டேங்க் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக தெரிவித்தார்.
மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி அவரிடம் கேட்டதற்கு, பழுதான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருப்பதாகவும், விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு மாற்று வழியில் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். கடந்த ஓராண்டாக சுகாதாமற்ற குடிநீர் வழங்கி வருவது குறித்த கேட்டபோது, அவர் பதில் அளிக்கவில்லை.
- தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கூறியுள்ள ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட வகையில் வி.ஏ.ஓ.,வை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், கட்சி வளர்ச்சி குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும், மேதின விழாவை நடத்துவது குறித்தும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. அசோக்குமார் உறுப்பினர் சேர்க்கை புத்தகம் வழங்கி ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்தில், கட்சி அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்வது.
கிழக்கு மாவட்டத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நாளை (மே1) கட்சி சார்பில் மே தின விழாவை கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்த சிறப்பான முறையில் நடத்த வேண்டும்.
தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கூறியுள்ள ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையில் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி உள்ள தொழிலாளர்கள் விரோத தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது.
தி.மு.க., ஆட்சியில், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட வகையில் வி.ஏ.ஓ.,வை அலுவலகத்திலேயே கொலை செய்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மக்பூல், ஐ.டி., பிரிவு செயலாளர் வேலன் உள்பட பலர் பங்கேற்றனர்.
- அவருக்கு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- மனம் உடைந்து போன சங்கர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி சிட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது45). கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவருக்கு கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் எந்தவித பலன் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போன சங்கர் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






