என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சூளகிரி சுற்று வட்டாரங்களான பேரிகை, காமன்தொட்டி ஆகிய பகுதிகளில் நள்ளிரவு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • கனமழை பெய்ததாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் உள்ள சுற்றுவட்டாரத்தில் 2 மாதங்களாக அதிக வெயிலால் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் மரம், செடி ,கொடிகள் காய்ந்து காணப்பட்ட நிலையில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலைப்பட்டு வந்தனர்.

    இதனையடுத்து சூளகிரி சுற்று வட்டாரங்களான பேரிகை, அத்திமுகம், காளிங்காவரம், சென்னப்பள்ளி, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு இரவு 1 மணிக்கு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.அப்பகுதியில் 15 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இதனால் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. திடீரென்று பெய்த கன மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தும், இடி, மின்னலுடனும் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழை, இன்று அதிகாலை 5 மணி வரை பரவலாகவும், விட்டு விட்டும் பெய்தவாறு இருந்தது.

    இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்? என்று மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கனமழை பெய்ததாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • நீரா அல்லது நுரையா என்று சந்தேகப்படும் அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரிலிருந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.

    ஓசூர்:

    கர்நாடகா நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, வரத்தூர் ஏரி வழியாக பெங்களூரு மாநகரத்தின் கழிவுநீர் கலந்தும் தென்பெண்ணை ஆற்றின் எல்லையோரமாக உள்ள தொழிற்சாலைகளின் ரசாயான கழிவுநீர் கலந்தும் தமிழகத்தின் கெலவரப்பள்ளி அணைக்கு ரசாயன கழிவுகளுடன் கருநிறத்தில் நீர் வருகிறது

    கடந்த 1 வார காலமாக, கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் நீரில் நுரை அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடகா மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று விநாடிக்கு 640 கனஅடி வந்தது.

    அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக 640 கனஅடிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆற்றில் வெளியேற்றப்படுவது நீரா அல்லது நுரையா என்று சந்தேகப்படும் அளவிற்கு 2 அடி உயரத்திற்கு நீரிலிருந்து நுரை பொங்கி காட்சியளிக்கிறது.

    துர்நாற்றத்துடன் நீர் கருநிறத்திலும், ரசாயன நுரை பனிக்கட்டிகளை போன்று காட்சியளித்து குமட்டலை ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரியின் பின்பகுதி சாய்ந்து விழுந்தது
    • அந்த வழியாக போக்குவரத்து ஏதும் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    காவேரிப்பட்டினம் 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பைபாஸ் தேசிய நெடுஞ்சா லையில் மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் இருந்து கொச்சிக்கு இரும்பு கம்பிகள் பாரத்துடன் லாரி சென்றது. கிருஷ்ண கிரி தருமபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தேசிய நெடுஞ் சாலையில் உள்ள பாலத்தின் மீது லாரியின் பின்பகுதி சாய்ந்து விழுந்தது. அந்த வழியாக போக்குவரத்து ஏதும் இல்லாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த காவேரிப் பட்டணம் போலீசார் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார்
    • காலியாக இருந்த பதவிக்கான பணி ஆணையினை, மாநகராட்சி மேயர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்..

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தூய்மைபணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முரளி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி உயிரிழந்தார்.

    இதையடுத்து, அவரது மகள் எம்.சூர்யா என்பவருக்கு கருணை அடிப்படையில், காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிக்கான பணி ஆணையினை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்..

    அப்போது, ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மண்டலத் தலைவர் ரவி, பணி நியமனக்குழு தலைவர் வெங்கடேஷ் மற்றும் நாகராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் க கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வைட்டார்.
    • மழைநீர் தேங்காத வண்ணம், கால்வாய்களை தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், கிருஷ்ணகிரி சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, ஆகிய பகுதிகளல் தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தம், கழிப்பறை வசதிகளை பார்வையிட்டு, பஸ் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கவும், மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம், மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 15 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணிகளை பார்வையிட்டு, நூலக கட்டிடத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து, பழையபேட்டையிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் சாலையில் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் உடனடியாக தூர்வார வேண்டும். புதிய கால்வாய்கள் கட்ட கருத்துரு தயார் செய்ய வேண்டும். புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலையத்தை புதிய வண்ணம் பூசவும், கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கவும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை சீராக பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கடைகளை அமைக்க வேண்டும். மேலும், கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக விற்க வேண்டும். காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், சின்ன ஏரியை அழகுபடுத்தும் பணிகளுக்கு ஏற்கனவே கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மீண்டும் கருத்துரு தயார் செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக புறநகர் பஸ் நிலையத்தை பார்வையிட்டு, பஸ்கள் பராமரிப்பு, இட வசதி குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.79 லட்சம் மதிப்பில் பாப்பாரப்பட்டி, தாசாகவுண்டன் ஏரியில் சுற்றுசுவர் மற்றும் வேலி அமைக்கும் பணிகளையும், ஏரியைச் சுற்றி சுகாதார தூய்மை பணிகளையும், மேலும் பொதுமக்கள் ஏரியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் வசந்தி, நகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், இளநிலை அலுவலர் அறிவழகன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இளங்கோவுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது.
    • வங்கி கணக்கில் 6 வங்கிகள் மூலம் ரூ.1 ேகாடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820-யை செலுத்தி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் மீனாட்சி ரோடு பகுதிதையச் சேர்ந்தவர் இளங்கோ (வயது73). இவர் ஓசூரில் ஏற்றுமதி இறக்குமதி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இளங்கோவுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அமெரிக்காவில் இருந்து புற்றுநோயுக்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் அனுப்பிவைப்பதாக தகவல் வந்தது. இதனை நம்பி இளங்கோ அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் மெலிசியா கிப்சன் என்பவர் பேசியதாகவும், பணம் முதலீடு செய்தால், அதற்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் உடனடியாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இதனை நம்பி இளங்கோ அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 6 வங்கிகள் மூலம் ரூ.1 ேகாடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820-யை செலுத்தி உள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் கூறியப்படி பொருட்களை எதுவும் அவர் ஏற்றுமதி செய்து அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து மீண்டும் இளங்கோ அந்த மர்மநபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

    ஆனால், போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தெரியவந்தது. உடனே இதுகுறித்து இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 2 கோடி வரை மர்மநபர்கள் பணமோசடி செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஒட்டர்பாளையம் கிராமத்தில் எல்லை காக்கும் முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.
    • பூஜையில் பக்தர்கள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சூளகிரி ஒன்றியம் மருதாண்டப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் எல்லை காக்கும் முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் வாரத்திற்கு ஒரு முறை பூஜை நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர்.

    இந்த பூஜையின் போது உடைத்து வைக்கபட்ட தேங்காய் சாமிக்கு படைக்க பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்தில் தேங்காயானது அசைந்து பக்தர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

    • பணம் முதலீடு செய்தால் அமெரிக்காவில் இருந்து புற்றுநோயுக்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் அனுப்பிவைப்பதாக தகவல் வந்தது.
    • முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 2 கோடி வரை மர்மநபர்கள் பணமோசடி செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் மீனாட்சி ரோடு பகுதிதையச் சேர்ந்தவர் இளங்கோ (வயது73). இவர் ஓசூரில் ஏற்றுமதி இறக்குமதி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இளங்கோவுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அமெரிக்காவில் இருந்து புற்றுநோயுக்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் அனுப்பிவைப்பதாக தகவல் வந்தது. இதனை நம்பி இளங்கோ அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் மெலிசியா கிப்சன் என்பவர் பேசியதாகவும், பணம் முதலீடு செய்தால், அதற்கான மருந்துகளின் மூலப்பொருட்கள் உடனடியாக அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். இதனை நம்பி இளங்கோ அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் 6 வங்கிகள் மூலம் ரூ.1 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரத்து 820-யை செலுத்தி உள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் கூறியப்படி பொருட்களை எதுவும் அவர் ஏற்றுமதி செய்து அனுப்பி வைக்கவில்லை. இதுகுறித்து மீண்டும் இளங்கோ அந்த மர்மநபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார்.

    ஆனால், போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தெரியவந்தது. உடனே இதுகுறித்து இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவரிடம் ஆன்லைன் மூலம் ரூ. 2 கோடி வரை மர்மநபர்கள் பணமோசடி செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 6 இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வுகளுக்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ். ஏ. சத்யா தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் எம். எல். ஏ. வழிகாட்டுதலின்படி, நேற்று ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், ஒசூர் மாநகரில் டி.வி.எஸ். நகர், ராயக்கோட்டை சாலை, பாகலூர் சாலை, சானசந்திரம், நஞ்சப்பா நகர், கலைஞர் நகர், ஆகிய 6 இடங்களில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வுகளுக்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ். ஏ. சத்யா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் தொகுதி மேற்பார்வையாளர் வேலூர் ரமேஷ் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. கிரீஷ் பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். முகாமில்,பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, கட்சியில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர்.

    • மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் அவர்களை 12 மணி நேரம் பணியாற்ற வைக்க சட்டம் இயற்றினார்.
    • இதனை கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அ.தி.மு.க.வும் எதிர்த்தது.

    ஓசூர்,

    ஓசூர் ஜூஜூவாடியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நேற்று நடந்த மே தின விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க . கொள்கைபரப்பு செயலாளரும், எம்பியும், மக்களவையின் முன்னாள் துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தாமிரபரணியில் மணல் கொள்ளை, பாலாற்றில் மணல் கொள்ளை, பல ஆறுகளில் எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளையாக இந்த ஆட்சியில் நடந்து வருகிறது.

    இந்த மணல் கொள்ளையை தடுக்க வந்தால் அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள், மணல் கொள்ளையானது, மனித கொலைகளாக மாறி கொண்டிருக்கின்றன.

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஸ்டாலின் கூறுகிறார். இப்போது மணல் கொள்ளைகளும், மனித கொலைகளும் நடந்து கொண்டிருப்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    கருணாநிதி, தனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்ததற்கு காரணம் ரஷ்ய புரட்சியாளர், உழைப்பாளர்களின் தலைவராக இருந்து ஸ்டாலின் நினைவாகத்தான் அந்த பேரை நான் வைத்தேன் என்று சொன்னார்.

    ஆனால், அந்த மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் அவர்களை 12 மணி நேரம் பணியாற்ற வைக்க சட்டம் இயற்றினார்.

    இதனை கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அ.தி.மு.க.வும் எதிர்த்தது. இதனால் பயந்த ஸ்டாலின், அந்த சட்டத்தை வாபஸ் பெற்றார். இது போன்ற சட்டங்களை கொண்டு வந்தால் கவர்னர் எப்படி கையெழுத்து போடுவார்?

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும்.
    • பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    மே தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கிராம வளர்ச்சி திட்டம் 2023-24 தயாரித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்க திட்ட செயல்பாடுகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான்முதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தபட வேண்டிய திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மே மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மாலை 2 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயில் படும் இடங்களை தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் தாக்கம் அதிகமானால் உயர் ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற உடலில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதேப்போல கால்நடைகளையும் நிழலில் பராமரிக்க வேண்டும். மேலும் வரும் 15-ந் தேதி வரை நமது கிராமங்களை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாலை 6 மணிக்கு தூய்மைப்படுத்திட வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும். பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் தலைமையில் எங்கள் கிராமம் எழில் மிகு கிராமம் என்ற உறுதி மொழியை பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மே தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்துகொண்டு, கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு, கூட்டத்தில் பேசினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஓசூர் ஜூஜூவாடியில் நேற்று மே தின விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக, கட்சியின் கொள்கைபரப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான டாக்டர் மு.தம்பிதுரை எம்.பி.கலந்துகொண்டு, கொட்டும் மழையிலும் குடைபிடித்தவாறு, கூட்டத்தில் பேசினார்.

    மேலும் இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ. பர்கூர் சி.வி.ராஜேந்தி ரன், ஆகியோர் பேசினர்.

    மேலும் இதில், மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர், தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×