என் மலர்
உள்ளூர் செய்திகள்

சூளகிரி பகுதியில் தொடர்ந்து 3 மணிநேரம் இடி, மின்னலுடன் கனமழை
- சூளகிரி சுற்று வட்டாரங்களான பேரிகை, காமன்தொட்டி ஆகிய பகுதிகளில் நள்ளிரவு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
- கனமழை பெய்ததாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் உள்ள சுற்றுவட்டாரத்தில் 2 மாதங்களாக அதிக வெயிலால் பொதுமக்கள் அவதிபட்டு வந்தனர்.
இந்நிலையில் மரம், செடி ,கொடிகள் காய்ந்து காணப்பட்ட நிலையில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலைப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து சூளகிரி சுற்று வட்டாரங்களான பேரிகை, அத்திமுகம், காளிங்காவரம், சென்னப்பள்ளி, உத்தனப்பள்ளி, காமன்தொட்டி ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு இரவு 1 மணிக்கு திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது.அப்பகுதியில் 15 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. திடீரென்று பெய்த கன மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்தும், இடி, மின்னலுடனும் பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழை, இன்று அதிகாலை 5 மணி வரை பரவலாகவும், விட்டு விட்டும் பெய்தவாறு இருந்தது.
இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்? என்று மக்கள் அச்சம் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கனமழை பெய்ததாலும், குளிர்ந்த காற்று வீசி வருவதாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






