என் மலர்
கிருஷ்ணகிரி
- பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- பள்ளியில் படித்த சென்னகேசவன் என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை.
மத்தூர்,
தருமபுரி மாவட்டம், இருமத்தூர் ஐ.வி.எல். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2022-2023-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த பள்ளியில் படித்த சென்னகேசவன் என்ற மாணவர் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், அறிவுக்கரசி என்ற மாணவி 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ம் இடமும், மாணவர் பிரத்திஷ் 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.
மேலும் பள்ளியில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 47 மாணவர்களும் 450 மதிப்பெண்களுக்கு மேல் 55 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவரும், தாளாளருமான கோவிந்தராஜ், பொருளாளர் விஜயலட்சுமி கோவிந்தராஜ், செயலாளர் ஜெயந்தி வெங்கடேசன், முதல்வர் சண்முகவேல், துணை முதல்வர் அசோக் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.
- பள்ளியில் படித்த மாணவி சைலஜா 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
- பள்ளியில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவி, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த பள்ளியில் படித்த மாணவி சைலஜா 600-க்கு 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
நிரஞ்ஜனா மற்றும் நவீன் ஆகியோர் 590 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 62 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
வேதியலில் 7 பேரும், கணினி பயன்பாட்டியலில் 2 பேரும், கணினி அறிவியலில் ஒருவரும், பொருளியலில் ஒருவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் தமிழில் 27 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், இயற்பியலில் 16 பேரும், வேதியியலில் 30 பேரும், உயிரியலில் 19 பேரும், கணித பாடத்தில் 10 பேரும், கணினி அறிவியலில் 10 பேரும், கணக்கு பதிவியலில் 7 பேரும் 100-க்கு 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பள்ளியில் சிறப்பிடம் பெற்று பெருமை சேர்த்த மாணவி, மாணவிகளுக்கு பள்ளியின் நிறுவனர் மணி பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.
மேலும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலர் டாக்டர் சந்தோஷ், பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா ஆகியோர் பாராட்டினார்கள்.
- ஆத்திரமடைந்த சிவானந்தா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்தார்.
- ரத்த வெள்ளத்தில் வெங்கட்ரமணப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரிகையை அடுத்த திப்பேப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா (வயது90). இவர் தனது சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தார்.
இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகனும், மகளும் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்தநிலையில் தனது மகள்களில் ஒருவரான சாலம்மா என்பவரது வீட்டில் தங்கி இருந்து வந்தார். இதன்காரணமாக சாலம்மாவின் மகளான அணிலாவிற்கு தனது சொத்தில் இருந்து 6 ஏக்கர் நிலத்தினை எழுதி வைத்தார். இந்த நிலையில் வெங்கட்ரமணப்பாவை அவரது மகன்களில் ஒருவரான சிவானந்தா என்பவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். நேற்று காலை சிவானந்தா தனது தோட்டத்திற்கு தந்தை வெங்கடரமணப்பாவை அழைத்து சென்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பேத்தி அணிலாவுக்கு எழுதி கொடுத்த நிலத்தை திரும்பவும் உங்களது பெயருக்கே மாற்றி எழுதி வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.
கழுத்தை அறுத்து கொலை
இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவானந்தா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தையின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கட்ரமணப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அப்போது அங்கிருந்து சிவானந்தா தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வெங்கட்ரமணப்பாவின் பேரன் ஹரிஷா என்பவர் சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கட்ரமணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிவானந்தாவை தேடி வருகின்றனர்.
- குறைந்த பணம் முதலீடு செய்த பிறகு, பகுதி நேர வேலைக்கான உயர் கமிஷனுடன் அதிக பணம் கிடைக்கும் என்று வந்தது.
- நம்பிய சுரேஷ் பழனி ரூ.7லட்சத்து 73 ஆயிரத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ெதாட்டகிரி சாலை நரசிம்ம நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பழனி. இவர் கெலமங்கலத்தில் உள்ள கிரானைட்ஸ் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது செல்போனில் உள்ள சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராமுக்கு ஒரு குறுஞ்செய்தி கடந்த 16-ந் தேதி அன்று வந்தது. அதில் குறைந்த பணம் முதலீடு செய்த பிறகு, பகுதி நேர வேலைக்கான உயர் கமிஷனுடன் அதிக பணம் கிடைக்கும் என்று வந்தது. இதனை நம்பிய சுரேஷ் பழனி ரூ.7லட்சத்து 73 ஆயிரத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு செலுத்தியுள்ளார். அதன்பின்னர் அவருக்கு குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் தன்னை மர்ம நபர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுரேஷ் பழனி கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.640 பறிமுதல் செய்யப்பட்டது.
- அவர்களிடம் இருந்து ரூ.5,800 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.
அந்த வகையில் கஞ்சா வைத்திருந்ததாக ஊத்தங்கரை பாரதிபுரம் ஜீவித்குமார் (21), வரமலைகுண்டா வெங்கடேசன் (42), ஓசூர் தேர்பேட்டை நாகராஜ் (22), சூளகிரி தாலுகா அகரம் வெங்கடேஷ் (45), ஓசூர் சிப்காட் அரசு (24), சின்ன பேளகொண்டப்பள்ளி நாகராஜ் (52), மிடுதேப்பள்ளி கரிசித்தப்பா (45), கிருஷ்ணேபாளையம் தொட்டி தாமரை செல்வன் (20), போச்சம்பள்ளி சேகர் (29) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.5,800 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல தடை செய்யப்பட்ட குட்கா விற்ற ஊத்தங்கரை தாலுகா செங்கல்நீர்பட்டி சட்டமுத்து (50), சிங்காரப்பேட்டை சதாத் அலி (71), கூர்சம்பட்டி மாதப்பன் (52), கிருஷ்ணகிரி லைன்கொல்லை ராமசாமி (78), காவேரிப்பட்டணம் அருள்குமார் (47) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.640 பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல கனகமுட்லு பகுதியில் லாட்டரி விற்ற பெரிய மோட்டூரை சேர்ந்த முருகன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.
- மத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மருத்துவமுகாம் நடந்தது.
- மருத்துவர் கார்த்திகேயன் பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையம் சார்பில் சேலம் சரக டி.ஐ ஜி. ராஜேஸ்வரி உததரவின் பேரில், மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அறிவுறுத்தலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தோல், தொண்டை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை முகாம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மருத்துவர் கார்த்திகேயன் பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினார்.
இம்முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, நாசர், பள்ளியின் தலைமையாசியை ஆரோக்கியமேரி, ஆசியரியர் திருமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
- உதவி கலெக்டர் இதில் தலையிட்டு, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யுள்ள கூமன்தொட்டி மற்றும் புடுமன்ன தொட்டி ஆகிய 2 கிராமங்களில் வசிக்கும் இருளர் மற்றும் போயர் இனத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று நேரில் திரண்டு வந்து, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகத்திடம், ஒரு கோரிக்கை மனு அளித்தனர்,
அதில், கூடுமன்தொட்டி மற்றும் புடுமன்ன தொட்டி ஆகிய 2 கிராமங்களிலும், மூதாதையர்களை தொடர்ந்து பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் சுமார் 50 குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, உதவி கலெக்டர் இதில் தலையிட்டு, எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக ்கொள்ளப்பட்டுள்ளது.
- 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர் வி.ஏ.பாலமுரளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சிக்கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஓசூர்,
ஓசூரில் ம.தி.மு.கவின் 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஓசூர்-பாகலூர் சாலையில் கே.சி.சி, நகர் சந்திப்பில் நடந்த விழாவிற்கு, ஓசூர் நகர பொறுப்பாளர் ஈழம் குமரேசன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் வி.ஏ.பாலமுரளி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கட்சிக்கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக, ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 376 மனுக்களை கொடுத்தனர்.
- மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.
இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, விலை–யில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 376 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பதறிப்போன அவரது உறவினர்கள் மாதேரெட்டியை பல இடங்களில் தேடிபார்த்தனர்.
- எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அத்தலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதேரெட்டி (வயது44). தொழிலாளியான இவர் கடந்த 4-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் மாதேரெட்டியை பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து மாதேரெட்டியின் மனைவி ரத்தினம்மா தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாதேரெட்டியை தேடிவருகின்றனர்.
- பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
- பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிருஷ்ணகிரி,
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்&ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு, 508 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். விபூதி அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன், தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்த பேட்டா ஞான விநாயகர் கோவில், டான்சி விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்தி நகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
- மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
- யானைகள் இரவு நேரத்தில் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் இரவு வெளியே வர வேண்டாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ககிரி அணை அருகே முகாமிட்டிருந்த 2 யானைகள் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரம் ஏரிக்கு வந்தன. அங்கு ஆனந்த குளியல் போட்ட யானைகள் இரவு அந்த பகுதியிலேயே முகாமிட்டன.
நேற்று முன்தினம் அதிகாலை அந்த யானைகள் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம், ராயக்கோட்டை மேம்பாலம், புதிய பஸ் நிலையம் மற்றும் நகருக்குள் வந்தன. பின்னர் கொத்தபெட்டா, சிப்பாயூர் வழியாக சாமந்தமலை பகுதியை அடைந்தன.
அங்கு விவசாயி பெருமாள் என்பவரை யானைகள் தாக்கி தந்தத்தால் குத்தியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் சாமந்தமலை பகுதியில் மாந்தோப்பில் முகாமிட்டிருந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் அந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து யானைகள் மெல்ல நகர்ந்து, மகராஜகடை பகுதிக்கு சென்றன. அங்கு வனப்பகுதியையொட்டி அந்த யானைகள் சுற்றி வருகின்றன. அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். யானைகள் இரவு நேரத்தில் வெளியே வர வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் யாரும் இரவு வெளியே வர வேண்டாம் என்றும், யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் யானை தாக்கி உயிர் இழந்த விவசாயி பெருமாள் வீட்டிற்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, அவைத் தலைவர் கிருஷ்ணன் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.






