என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.
    • சேதம் அடைந்த நெற்பயிர்களை விரைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

    மத்தூர்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலான காவேரிப்பட்டினம், போச்சம்பள்ளி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக நீர் நிலைகள் மற்றும் குளங்கள் ஏரி என அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் தண்ணீர் நிரம்பி உபரி நீரானது வெளியேறி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகளவு வெளியேறிவரும் நிலையில் விவசாயத்திற்கு தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதால் இப்பகுதி விவசாய மக்கள் தங்களது விவசாயி பணிகளை தொடங்கி விவசாய பணிகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெல், ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிர் செய்யப்பட்ட நிலையில் போச்சம்பள்ளி, சந்தூர், மகாதேவகொல்ல அள்ளி, தட்டக்கல், அனகோடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பெய்த கனமழைக்கு சாய்ந்து வயல்களிலே படுத்து கிடக்கிறது.

    இதில் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியும் அறுவடை செய்ய முடியாமலும் விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர்.

    மேலும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் நெல் பயிரிளேயே முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நெல் பயிர் செய்த விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் சேதம் அடைந்த நெற்பயிர்களை விரைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நெல் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முள்ளங்கி கிலோ ரூ.5-க்கு கீழ் குறைந்து கொள்முதல் செய்யபப்டுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
    • விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்

    ஓசூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை பெரும் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய சூழலில் முள்ளங்கி கிலோ ரூ.5-க்கு கீழ் குறைந்து கொள்முதல் செய்யபப்டுவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு வரக்கூடிய கூலி செலவு கூட கிடைக்காத முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் அறுவடை செய்த முள்ளங்கிகளை குவியல் குவியலாக சாலை ஓரங்களில் விவசாயிகள் கொட்டி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட இடங்களில் தகுந்த வெப்பம் நிலை நிலவுவதால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, அவரை, முள்ளங்கி, கேரட், குடைமிளகாய், உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாகவே முள்ளங்கி அதிகப்படியாக விளைந்து பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

    • சில மாதத்திற்கு முன்பு நள்ளிரவு ராட்சத குழாய் அமைத்து வழி பாதை அமைத்துள்ளார்.
    • ஏரியை ஆக்கிரமித்து வழி பாதையில் புதைத்து இருந்த ராட்சத குழாயை ஜே.சி.பி., கிரைன் மூலம் அகற்றினர்.

    சூளகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாக மேலுமலை ஊராட்சியை சார்ந்த பெரிய ஏரி 20 ஏக்கர் அரசு நிலத்தில் அமைந்துள்ளது.

    இந்த ஏரியில் ஒருவர் சில மாதத்திற்கு முன்பு நள்ளிரவு ராட்சத குழாய் அமைத்து வழி பாதை அமைத்துள்ளார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதன் பேரில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில் நேற்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபால கிருஷ்ணன், விமல்ரவிக்குமார், சூளகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மதன்மோகன், சிவக்குமார், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் ராமர், ஒன்றிய பொறியாளர் சுமதி, துணை பி.டி.ஒ.க்கள் முருகன், உமாசங்கர், விவேகானந்தன், வெங்கடேசன், ஊராட்சி செயலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    ஏரியை ஆக்கிரமித்து வழி பாதையில் புதைத்து இருந்த ராட்சத குழாயை ஜே.சி.பி., கிரைன் மூலம் அகற்றினர். அரசு நிலத்தை மீட்ட மாவட்ட கலெக்டர், அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

    • அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம் 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் காவேரிப்பட்டினம் பேரூராட்சி மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    கண் சிகிச்சை முகாமினை காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தொடங்கி வைத்தார். முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்புரை அறுவை சிகிச்சை, கண்ணில் குறைபாடு, மாறுகண், கண்ணில் நீர் வடிதல், கருவிழி பாதிப்பு உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவசமாக சங்கர கண் மருத்துவ பணியாளர்கள் பரிசோ தனை செய்து ஆலோசனை வழங்கி மேல் சிகிச்சை வழங்க பரிந்துரை செய்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
    • வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், நேற்று நடைபெற்றது.

    ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முரளி, சந்தியா கோபி ஆகியோர் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து காரசாரமாக பேசினர்.

    இதேபோல், தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

    கூட்டத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளை இடித்து அகற்றுதல் உள்ளிட்ட 26 தீர்மானங்கள், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

    மேலும், வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • டாக்டர் சி.சவுந்தரராஜின் தந்தை டாக்டர் டி.சின்னராஜூவின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • டி.சி.ஆர். சர்க்கிளில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சி.சவுந்தரராஜின் தந்தை டாக்டர் டி.சின்னராஜூவின் 90-ம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சேலம் - சென்னை பைபாஸ் அருகில் உள்ள டி.சி.ஆர். சர்க்கிளில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது.
    • விபத்தில் சாலையில் கவிழ்ந்த பேருந்தை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஒகேனக்கல் மலைப்பகுதியில் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இன்று காலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர்.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறை யினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை பேருந்துக்குள் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 20 பேரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையில் பேருந்து கவிழ்ந்ததால் ஒகேனக்கல்லுக்கு செல்லும் போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டது. பேருந்து சாலையில் கவிழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பின்றி காயங்களுடன் உயிர் தப்பித்தனர். பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.

    விபத்தில் சாலையில் கவிழ்ந்த பேருந்தை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மனைவி இறந்ததால் குடிப்பழக்கம் அதிகம் ஏற்பட்டது.
    • மனவிரக்தியில் இருந்த சின்னராஜ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை அருகே உள்ள ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி இறந்ததால் குடிப்பழக்கம் அதிகம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மனவிரக்தியில் இருந்த சின்னராஜ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கட்டிக்கான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது25). இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அதேபோல் மாடச்சந்திரம் அருகே உள்ள குரள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

    அந்த வழியாக சென்ற வர்கள் பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு பெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து குருபரப்பள்ளி போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் கிருஷ்ணகிரி, அட்கோ பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தொடுதே பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் ரமேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மன வேதனையில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நடுப்பையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதன். இவரது மனைவி அமுதா (வயது30). இருவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளது.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மன வேதனையில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது மண் எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அமுதா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஜே.ஆர். நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது50). கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு திருவண்ணாமலை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலி நிலங்கள் மற்றும் சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்
    • மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது

    ஓசூர்,

    கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கெயில் நிறுவனம் குழாய்கள் மூலம் எரிவாயு கொண்டு செல்லவுள்ளது.

    இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ராயக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், ஓசூர் அருகேயுள்ள நாகொண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு நடுவே எரிவாயு குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் பல இடங்களில் குழாய்களை இறக்கியுள்ளது.

    இதனைப்பார்த்து, அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் வீடுகளுக்கு அருகே எரிவாயு குழாய்களை பதித்து சென்றால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படும் எனக்கூறி எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தங்கள் குடியிருப்புக்கு நடுவே எரிவாயு குழாய்களை அமைக்க கூடாது என்றும், அந்த பணிகளை உடனடியாகதடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒசூர் உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு இந்த பணிகளை நிறுத்தி, குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள காலி நிலங்கள் மற்றும் சாலைகள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க விட்டால் குடியிருப்பில் வாழும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×