என் மலர்
கிருஷ்ணகிரி
- ஷாம், ஆனந்த் ஆகிய 2 வாலிபர்கள் நகைகளை வாங்க வந்தனர்.
- 2¼ பவுன் நகையை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெலகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது29). இவர் அதே பகுதியில் தனியார் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது நகை கடைக்கு சம்பவத்தன்று திருவண்ணாமலை செங்கம் அருகே காத்தமடுவு பகுதியைச் சேர்ந்த சாமய்யா என்கிற ஷாம் (25), ஆனந்த் (19) ஆகிய 2 வாலிபர்கள் நகைகளை வாங்க வந்தனர். சிறிது நேரத்தில் சாமய்யா என்கிற ஷாம் கடைக்கு வெளியே சென்று அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு புறப்பட தாயராக இருந்தார். அப்போது ஆனந்த் 2¼ பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு புறபட தயராக இருந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர். உடனே ராஜாராம் திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு மோட்டார் சைக்கிள் பின்னால் ஓடி சென்றார். அப்போது 2 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் வேகதடையில் மோதி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் கீழே விழுந்து கிடந்தனர். ராஜாராமின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மோட்டார் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஆனந்த் என்பவரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சாமய்யா என்கிற ஷாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ராஜாராம் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் ஆனந்தை ஒப்படைத்தனர். நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சாமய்யாவை தேடி வருகின்றனர்.
பட்டபகலில் நடந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 8 மணிக்கு சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது.
- சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகில் உள்ள பொன்மலை சீனிவாச பெருமாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், பந்தல் கால் நடும் நிகழ்ச்சியும் நடந்தது. 1-ந் தேதி இரவு கோ பூஜை, வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவை நடந்தன.
நேற்று காலை 9 மணிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றன. தொடர்ந்து 10.15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சாமிக்கு ரக்ஷாபந்தனம், தாயாருக்கு கவுரி பூஜை, சாமிக்கு காசி யாத்திரை, வரபூஜை, மாங்கல்ய தாரணம், மகா தீபாராதனையுடன் திருக்கல்யாணம் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் கல்யாண சீனிவாச பெருமாள் அருள் பாலித்தார்.
மதியம் திருக்கல்யாண விருந்தும், மாலை 4 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், மாலை 6 மணிக்கு தாயார் சமேத சாமி கோவில் திருசுற்று பல்லக்கு சேவையும், பிரசாத வினியோகமும் நடைபெற்றன. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
- தென்பெண்ணை ஆற்றில் அதிகளவிலான ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதக்கிறது.
- நுரை காற்றில் பறந்து செடி கொடிகளை சேதப்படுகிறது.
ஓசூர்,
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று விநாடிக்கு 750 கனஅடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 640 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அணைக்கு விநாடிக்கு 530 கன அடி நீர் வந்தது. விநாடிக்கு 640 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.
இதனையடுத்து தென்பெண்ணை ஆற்றில் அதிகளவிலான ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதந்து சென்றும், நுரை காற்றில் பறந்து அப்பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மீதும், அந்த வழியாத செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது படர்வதாலும், விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் அதிருப்தியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
- டிராக்டர் கொண்டு 10 இன்ச் பைப் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகிறார்.
- ஏரி நீரை வெளியேற்றி வருவது அப்பகுதி விவசாயிகளை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திருவணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திருவணப்பட்டி பூங்காநகர் ஏரி சுமார 26.57 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் வருடந்தோரும் மீன்பிடி ஏலம் நடத்தப்பட்டு, அதன்மூலம் ஒப்பந்ததாரர் மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் சின்னகாமாட்சிபட்டி கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி என்பவர் இந்த ஆண்டு மீன்பிடி ஏலம் எடுத்துள்ளார். ஒப்பந்தகாலம் முடிவடைந்து வரும் நிலையில், ஒப்பந்ததாரர் தீர்த்தகிரி ஏரியில் உள்ள மீன்கள் முழுவதையும் பிடிப்பதற்காக, கடந்த இரண்டு நாட்களாக டிராக்டர் கொண்டு 10 இன்ச் பைப் மூலம் ஏரியிலுள்ள நீரை வெளியேற்றி வருகிறார். இந்த ஏரி மூலம் 1000த்திற்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறுவதுடன், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் மீன்பிடி ஒப்பந்ததாரர் தன்னிச்சையாக எவ்வித அனுமதியும் பெறாமல் ஏரி நீரை வெளியேற்றி வருவது அப்பகுதியில் உள்ள விவசாயிகளை மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமலைராஜனிடம் கேட்டபோது, தற்போது ஜமாபந்தி நடப்பதால் கிராம நிர்வாக அலுவலரை நேரில் அனுப்பி விசாரித்து, அவரிடமிருந்து புகார் மனு பெற்று ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
- சம்பவத்தன்று தனது நிலத்தில் இருந்த மரத்தில் ஒன்று மீது ஏறி அரிவாளல் கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.
- திடீரென்று மரத்தின் மீது இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தில் இருந்த மரத்தில் ஒன்று மீது ஏறி அரிவாளல் கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று மரத்தின் மீது இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து மணியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமசாமிக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
- மனவேதனை யடைந்த ராமசாமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோரகுறுக்கி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது40). கூலித்தொழிலாளி.
இவரது மனைவி ஷோபா (35). ராமசாமிக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதன் காரணமாக ராமசாமிக்கு வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிசசை பெற்று வந்தும் அவருக்கு பலன் அளிக்கவில்லை.
இதனால் மனவேதனை யடைந்த ராமசாமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ேஷாபா பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்த பி.குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (38). டிரைவர். இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த பிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அக்கா பிரமிளா பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
- ஓசூரில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் தனது சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றார்.
ஓசூர்,
கொல்கத்தா கூப்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெய் தேவ் ரவுத் (53). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சமூக ஆர்வலரான ஜெய் தேவ் ரவுத், பொதுமக்களிடம் ரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2022 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய அவர், தெலங்கானா, ஆந்திரா மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக நேற்று ஓசூர் வந்தடைந்தார். ஓசூரில், அவருக்கு, சமூக ஆர்வலர் டாக்டர் சண்முகவேல், ஆகியோர் தலைமையில், ஜெய்தேவ் ரவுத்துக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு வரவே ற்பு அளிக்கப்பட்டது. மேலும் நிதியுதவியும் வழங்கப்பட்டது. இதில், அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தற்போது வரை, சைக்கிளில் ஜெய் தேவ் ரவுத் 16,000 கி.மீ. பயணத்தை கடந்துள்ளார். மொத்தம் 25,000 கி.மீ. தூரம் விழிப்புணர்வு பயணத்தை, அவர் மேற்கொள்ள உள்ளார். செல்லும் இடங்களில் பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். வருகிற அக்டோபர் 23-ம் தேதி அஸ்ஸாமில் தனது பயணத்தை அவர் நிறைவு செய்ய உள்ளார். ஓசூரில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர், அவர் தனது சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டு சென்றார்.
- 281 பள்ளிகளில், 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கின்றனர்.
- மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், புத்தகபைகள் அனுப்பும் பணியும் ஓரிரு நாளில் தொடங்கும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், புத்தக பைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அந்தந்த பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் உள்ள, 172 பள்ளிகள், ஓசூர் கல்வி மாவட்டத்தில், 109 பள்ளிகள் என மொத்தம் மாவட்டத்தில் உள்ள, 281 பள்ளிகளில், 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கின்றனர். இவர்களுக்கான பள்ளி பாடப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வந்துள்ளன. பள்ளி பாட புத்தகங்களை பொறுத்தவரை கடந்த ஜனவரி முதல் வரத் தொடங்கி மே முதல் வாரத்தில் முழுவதுமாக வந்து விட்டன. அவற்றை கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மே 13-ந் தேதி முதல் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.
அதே போல் புத்தகப்பை கடந்த மேல், 30-ந் தேதி 13 ஆயிரமும், இன்று 10,880 புத்தகபைகளும் வந்துள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மற்ற புத்தகப்பைகளும் வந்துவிடும். அதன் பின்னர், அனைத்து பள்ளிகளுக்கும் புத்தக பைகள் வாகனங்கள் மூலம் அனுப்பப்படும். அதேபோல மாவட்ட தொடக்கப் பள்ளிகளுக்கு புத்தகங்கள், புத்தகபைகள் அனுப்பும் பணியும் ஓரிரு நாளில் தொடங்கும். அரசு பள்ளி மாணவர்கள், ஜூன் 7-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது முதல் நாளிலேயே அவர்களுக்கான பாட புத்தகங்கள், புத்தக பைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- குப்பையினை, மக்கும் குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையினை, நுண்ணுர மையங்களில் செயலாக்கம் செய்து உரம் தயாரிக்கப்படுகிறது.
- இந்த சிறப்பு ஆர்.ஆர்ஆர் மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பையினை, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையினை, நுண்ணுர மையங்களில் செயலாக்கம் செய்து உரம் தயாரிக்கப்படுகிறது. மக்கா குப்பையினை மேலும் தரம் பிரித்து ரெடியுஸ், ரீசைகிள், ரீயூஸ் (ஆர்.ஆர்.ஆர்) என மறுசுழற்சிக்குட்படுத்த வளமீட்பு மையங்களில் சேமிக்கப்படுகிறது.
அவ்வாறான வள மையம், ஓசூரில் மூக்கண்ட பள்ளி எம்.எம்.நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. வீடு வீடாக பெறப்படும் மறுசுழற்சிக்கான பொருட்கள் இங்கே சேகரிக்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையற்ற துணிகள், காலணிகள், பொம்மைகள், புத்தகங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகிய பொருட்களை இந்த சிறப்பு ஆர்.ஆர்ஆர் மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாங்களே கொண்டு வந்து கொடுத்து, பதிவு புத்தகத்தில் பதிவு செய்யலாம் . இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
- நதியா கணவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- அவர் மாமியார் வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி நதியா (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இதனால் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கரிகாளிப்பட்டியில் உள்ள தனது தாய்வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு கணவர் இறந்த துக்கத்தில் இருந்த நதியா சற்று மனநிலை சரியில்லாமல் காணப்பட்டார்.
கடந்த 22-ந் தேதி நதியா கணவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுகுறித்து நதியாவின் தாயார் விசாரித்தபோது, அவர் மாமியார் வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர் நதியாவை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் நதியா கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இது குறித்து நதியாவின் தாயார் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நதியாவை தேடிவருகின்றனர்.
- பல்சர் பைக்கில் அதிவேகமாக வந்த இருவர் கலைச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று விட்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த தாசம்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று விட்டு திரும்பி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் காவேரிப்பட்டணம் வரும் பொழுது திம்மாபுரம் அருகே பல்சர் பைக்கில் அதிவேகமாக வந்த இருவர் கலைச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி சென்று விட்டனர்.
இது குறித்து கலைச்செல்வி காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி அவர்களிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் இதுபோல அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்களும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.இதனையடுத்து உடனடியாக காவேரிப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகள், உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.
- பாலக்கோடு செல்லும் சாலையின் இருபுறமும் காய்கறிகள் கடைகள் வைத்துள்ளதால், அதனை கடந்து நுகர்வோர் சந்தைக்கு வருவதில்லை.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பாலக்கோடு சாலையில் உழவர் சந்தை கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்டது. உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்களில் மூடப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகள், உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 26-ந் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும். அரசியல் காழ்புணர்ச்சியால் உழவர் சந்தை திறக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.
இதற்கு அதிகாரிகள் தரப்பில், கிராமபுறங்களில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, உழவர் சந்தை பயன்படுத்திட வேண்டும் வலியுறுத்தப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை கொண்டு வந்தாலும், நுகர்வோர் வருகை குறைவாகவே உள்ளது. பாலக்கோடு செல்லும் சாலையின் இருபுறமும் காய்கறிகள் கடைகள் வைத்துள்ளதால், அதனை கடந்து நுகர்வோர் சந்தைக்கு வருவதில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது என்றனர்.
இதனை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கே..எம்.சரயு தெரிவித்தார். அதன்படி, காவேரிப்பட்டணம் உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள், வேளாண்மை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
உழவர் சந்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு உண்டான சாத்தியக் கூறுகளை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையம், வீரிய ஒட்டு தென்னை மையங்களின் செயல்பாடுகளை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் காளிமுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






