என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் கலெக்டர்  ஆய்வு
    X

    காவேரிப்பட்டணத்தில் கலெக்டர் ஆய்வு

    • கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகள், உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.
    • பாலக்கோடு செல்லும் சாலையின் இருபுறமும் காய்கறிகள் கடைகள் வைத்துள்ளதால், அதனை கடந்து நுகர்வோர் சந்தைக்கு வருவதில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் பாலக்கோடு சாலையில் உழவர் சந்தை கடந்த 2009-ம் ஆண்டு கட்டப்பட்டது. உழவர் சந்தை பயன்பாட்டிற்கு வந்து சில மாதங்களில் மூடப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக விவசாயிகள், உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் 26-ந் தேதி நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், காவேரிப்பட்டணம் உழவர் சந்தையை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும். அரசியல் காழ்புணர்ச்சியால் உழவர் சந்தை திறக்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

    இதற்கு அதிகாரிகள் தரப்பில், கிராமபுறங்களில் உள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து, உழவர் சந்தை பயன்படுத்திட வேண்டும் வலியுறுத்தப்பட்டது. உழவர் சந்தையில் விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை கொண்டு வந்தாலும், நுகர்வோர் வருகை குறைவாகவே உள்ளது. பாலக்கோடு செல்லும் சாலையின் இருபுறமும் காய்கறிகள் கடைகள் வைத்துள்ளதால், அதனை கடந்து நுகர்வோர் சந்தைக்கு வருவதில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது என்றனர்.

    இதனை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கே..எம்.சரயு தெரிவித்தார். அதன்படி, காவேரிப்பட்டணம் உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள், வேளாண்மை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    உழவர் சந்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு உண்டான சாத்தியக் கூறுகளை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையம், வீரிய ஒட்டு தென்னை மையங்களின் செயல்பாடுகளை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநர் காளிமுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர் சம்பத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×