என் மலர்
கிருஷ்ணகிரி
- மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை காலி செய்ய வேண்டுமென கூறுகிறார்கள்.
- 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் எம்.ஜி.ஆர் மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சாதிக் பாஷா தலைமையில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., மார்கெட் பின்புறம் சந்தைப்பேட்டையில், கடந்த, 2005-ம் ஆண்டு முதல் 250-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, பெரியவெங்காயம் மற்றும் உருளைகிழங்கு வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென வந்து இங்கு வணிக வளாகம் கட்ட இருப்பதால் உடனடியாக நீங்கள் கடைகளை காலி செய்ய வேண்டுமென கூறுகிறார்கள். அதிகாரிகளின் இந்த செயலால் அதிர்ச்சி யடைந்துள்ளோம். இதையே நம்பி வாழந்து வரும் எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு வேறு இடமாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
- தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது58). இவரது மகன் சிரஞ்சீவி (32).
ஆடிட்டரான இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஜின்சுபள்ளி அருகே சென்றார்.
அப்போது திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிரஞ்சீவி தலையில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து சிரஞ்சீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஸ்வினி வேலை செய்யும் வீடுகளில் நகைகள் திருடு போனதாக தகவல் கிடைத்தது.
- வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெரியஎலசகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அஸ்வினி (வயது21). இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் அஸ்வினி வேலை செய்யும் வீடுகளில் அடிக்கடி நகைகள் திருடு போனதாக அவரது கணவருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த அஸ்வினி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அஸ்வினி திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து அஸ்வினி தாயார் பாக்கியம்மா ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில் அஸ்வினி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் ஓசூர் போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாத் விசாரணை நடத்தி வருகிறார்.
- வருகிற 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
- பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில்,புதிய ஏழுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ஏற்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவில் எதிரே நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை முன்னிலை வகித்தார். இதில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் நாகராஜ், மாநகராட்சி மண்டல் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாநகராட்சி பொதுசுகாதாரக் குழுதலைவர் மாதேஸ்வரன், வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக பணிகள், ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தின்போது, கோவில் வளாகத்தில் மலர் அலங்காரம், மின் விளக்கு அமைப்பு விழா நடைபெறும் 3 நாட்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல் குடிநீர் விநியோகம்....உள்ளிட்ட பணிகளுக்கு தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டன. மேலும் இந்த கூட்டத்தில், பா.ஜ.க. நிர்வாகிகள்,மாநகராட்சி கவுன்சிலர்கள், , இந்து அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் கவுண்டர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- 720 மதிப்பெண் களுக்கு 661 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
- தாளாளர் கூத்தரசன் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் 2023-ல் நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
இதில் 720 மதிப்பெண் களுக்கு 661 மதிப்பெண் பெற்று அகாடமியில் முதல் இடத்தை பிடித்த மாணவர் வண்ணநிலவன், 635 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த மாணவர் பாசில், 593 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்கள் ஹேமந்த் மற்றும் பிரமோத் ஆகியோரை வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் பாராட்டி, பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி, வாழ்த்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில், வேளாங்கண்ணி அகாடமி யில் படித்து தேர்வு எழுதிய மாணவர்களின் 100 மாணவர்களுக்கு மேல் அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், பொறுப்பாளர் யுவராஜ், ஒருங்கிணைப்பாளர் வேமுலா சந்திரசேகர் மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.6.39 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை, கலெக்டர் சரயு ஆய்வு மேற்கொண்டார்.
- பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியத்தில், ரூ.6.39 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குந்துமாரனப்பள்ளி ஒன்றியத்தில் 30 லட்சத்தில் ஊராட்சி. ஒன்றிய துவக்கப்பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள் ரூ.5.32 லட்சத்தில் சமையலறை கட்டுமான பணிகள், டி.தாமந்தரபள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.30 லட்சத்தில் மறுசீரமைப்பு பணிகள், கெல மங்கலத்தில், ரூ.3.10 கோடி மதிப்பில் ஒன்றிய அலுவலக கட்டுமான பணிகள், அனுசோனையில் ரூ.30.25 லட்சத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
மேலும், கெலமங்கலம் ஒன்றியம், வரகனப்பள்ளியில் ருக்குமணி என்பவரின் வீட்டில் ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறை கட்டுமான பணி, நீலகிரி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மறுசீரமைப்பு பணிகள், திம்ஜேப்பள்ளி ஊராட்சி, உள்ளுக்குறுக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ.5.07 லட்சம் மதிப்பில் சமையலறை கட்டுமான பணிகள் என ரூ.6 கோடியே 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்ட பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, கெலமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் மாது, பிடி.ஓ.,க்கள் பயாஸ், சாந்த லட்சுமி, உதவி பொறியா ளர்கள் முருகேசன், தமிழ், ஊராட்சி மன்ற தலைவர் முரளி, சுஜாதா மாரப்பா, கிருஷ்ண மூர்த்தி, மணிவண்ணன், சம்பங்கி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 1695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
- தாலுகா அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், கடந்த 2-ம் தேதி ஜமாபந்தி துவங்கியது. ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இறுதி நாளான நேற்று வரை 1695 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். அதில் 850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
நேற்று தாலுகா அலுவ லகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் இயற்கை மரணஈமச்சடங்கு நிதி, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா, இலவச வீட்டுமனைப்பட்டா என மொத்தம் 151 பயனாளி களுக்கு ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தாசில்தார் சரவணமூர்த்தி, தனி தாசில்தார் மோகன்தாஸ், வட்ட வழங்கல் அலுவலர் பேபி, மண்டல துணை தாசில்தார்கள் மதன்ராஜ்,ராஜாகண்ணு, சர்வேயர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஐயப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு சென்றுள்ளார்.
- சித்தூர் போலீசார் கடந்த 13-ந் தேதி ஐயப்பனை ஆந்திராவில் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் புளியாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது40). இவரது மனைவி அருணா (30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
பிரபல நகை திருடனான ஐயப்பன் தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனது கைவரிசை காட்டியுள்ளார். இதனால் அந்தந்த மாநிலங்களில் ஐயப்பன் மீது பல்வேறு நகை திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் ஐயப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவிற்கு சென்றுள்ளார். அப்போது ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு நகைகடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளது. இதுகுறித்து சித்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், ஐயப்பன் தான் இந்த நகைகளை திருடியது தெரியவந்தது.
இதுதொடர்பாக சித்தூர் போலீசார் கடந்த 13-ந் தேதி ஐயப்பனை ஆந்திராவில் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 700 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள 300 கிராம் தங்க நகைகள் எங்கே பதுக்கி வைத்துள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மீதமுள்ள நகைகளை தனது சொந்த கிராமத்தில் பதுக்கி வைத்துள்ளாரா? என கருதி ஆந்திர மாநில போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே புளியாண்டபட்டியில் உள்ள ஐயப்பன் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஐயப்பன் வீட்டில் சோதனை செய்ததில் நகைகள் ஏதும் கிடைக்காததால், இந்த நகை திருட்டு வழக்கில் தொடர்பு உள்ளதாக ஐயப்பனின் மனைவி அருணா, 7 வயது மகன் மற்றும் உறவினர்களான 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதுகுறித்து ஐயப்பனின் மற்ற உறவினர்கள் உடனே மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, ஆந்திரா போலீசார் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட 7 பேரையும் உடனடியாக மீட்டு தரவேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு போலீசார் திருட்டு வழக்கில் தான் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஆந்திரா போலீசாரிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் 7 பேரையும் ஆந்திரா போலீசார் கைது செய்து அழைத்து சென்று 3 நாட்களாகியும் எந்தவித தகவலும் கிடைக்காததால் ஆத்திரத்தில் உறவினர்கள் நேற்று நள்ளிரவில் மீண்டும் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஐயப்பனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆந்திரா போலீசாரால் கைதான 7 பேரின் உறவினர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமியருக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தமிழகத்தில், 1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜுவாடியில் உள்ள மாநகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கு வந்த சிறுவர் சிறுமியருக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி, வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில், மாநகராட்சி கவுன்சிலர் அசோகா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்த ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பள்ளிக்கு வந்த சிறுவர்,சிறுமியரை வாழ்த்தி வரவேற்றனர். தொடர்ந்து இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது.
மேலும் இதில், தலைமையாசிரியர் பிரகாஷ் மற்றும் ஆசிரிய ஆசிரியையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில், துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
- திட்டப் பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெத்ததாளப்பள்ளி ஊராட்சி துறிஞ்சிப்பட்டி கிராமத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில், குடியிருப்பு பகுதி தார்சாலை முதல் ஏற்கனவே உள்ள கழிவுநீர் கால்வாய் வரை பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது. அதே போல், கனிமங்களும், குவாரிகளும் நிதியில் இருந்து 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் துறிஞ்சிப்பட்டியில், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
ஒன்றிய பொது நிதியில் இருந்து, 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில், துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதே போல், பெத்தனப்பள்ளி கிராமத்தில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடைக் கால்வாயும், 15வது நிதிக்குழு மான்யம் 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பெத்தனப்பள்ளி கிராமத்தில் பாதாள சாக்கடைக் கால்வாய் என மொத்தம் 30.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி வெங்கடேசன், கவுன்சிலர் அமராவதி, முன்னாள் தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணியை தொடங்கி வைத்தனர்.
- மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 1,2,3,4-வது வார்டிற்குட்பட்ட உப்கார் லேவுட், நஞ்சப்பா சர்க்கிள், திருவள்ளுவர் நகர் பிரதான சாலை, பேகேபள்ளி பிரதான சாலை, காந்தி சிலை முதல் தெரு, பி.டி.ஆர். நகர் முதல் தெரு, பேடரப்பள்ளி பிரதான சாலை, மற்றும் சாந்தபுரம் முதல் சின்ன எலசகிரி பிரதான சாலை பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணிக்கு, பிரகாஷ் எம்.எல்.ஏ.மற்றும் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதரன், அசோகா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர்.
- 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளும், 500-க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கோடிபுதூர் கிராமததில் உள்ள 113 ஆண்டு பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். அதே போல் இந்த ஆண்டு இன்று பரணை ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 11:30 மணிக்கு முக்கிய நிகழ்வான பரணை ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில், வளாகத்தில் மூங்கிலால் 5 பரண்கள் அமைத்து ஒரு பரணில் பன்றியையும், நான்கு பரணில் ஆடுகளையும் படுக்க வைத்து வெள்ளைத் துணியால் மூடிவிட்டனர்.
இதனையடுத்து காலை 12 மணிக்கு பூசாரிக்கு அருள் வந்து, பரணை மீது ஏறி பன்றியின் மார்பு வயிற்று பகுதி கிழித்து, அதில் துண்டு, துண்டாக வெட்டிய வாழை பழத்தை வயிற்றில் போட்டு ரத்தத்துடன் கலந்து சிறப்பு பூஜை செய்த பின், அதை பூசாரி அங்கு கூடியிருந்த கூட்டத்தில் வீசினார். அதை ஆண்களும் பெண்கள் மடியேந்தி பிடித்து சாப்பிட்டனர். பச்சை ரத்தம் கலந்த பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. முன்னதாக பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டியதை நிறைவேறியது பொருட்டு கோவில் முன் பக்தர்கள் ஆடுகள், மற்றும் பன்றிகளை பலியிட்டனர். இதில், 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளும், 500-க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டனர். வெட்டிய ஆடு, கோழி, பன்றிகளை வந்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைத்தனர்.
இத்திருவிழாவிற்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, புலியூர், அரசப்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, உள்ளிட்ட இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் நாகரசம்பட்டி, மற்றும் பாரூர் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






