என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 40), நீலாங்கரையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்துவந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், தனலட்சுமி (13), விஜயலட்சுமி (9) என்ற மகள்களும் உள்ளனர்.
சிவபிரகாசுக்கு சேலையூர் அருகே அகரம் தென்கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா வாங்குவது தொடர்பாக தந்தை சந்திர சேகருடன் நேற்று மாலை அங்கு சென்றுவிட்டு கொளத்தூருக்கு தாம்பரம்-மதுர வாயல் பைபாஸ் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை சிவபிரகாசம் ஓட்டிச்செல்ல பின்னால் அவரது தந்தை சந்திரசேகரன் உட்கார்ந்து இருந்தார். அனகாபுத்தூர் அடையாறு ஆற்றுபாலம் அருகே சென்றபோது காற்றாடி மாஞ்சா நூல் குறுக்கே சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் மாஞ்சா நூல் சிவபிரகாஷ் கழுத்தை அறுத்தது.
கழுத்தில் ரத்தம் வழிய நிலைதடுமாறிய சிவபிரகாஷ் சாலை இரும்பு தடுப்பில் மோதி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

தந்தை சந்திரசேகர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவபிரகாஷ் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றதால் சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனகாபுத்தூர் பகுதியில் வாலிபர்கள் சிலர் காற்றாடி பறக்கவிட்டபோது அதில் ஒரு காற்றாடி நூல் அறுந்து பைபாஸ் சாலையில் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. காற்றாடி பறக்கவிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் காம்ளே, நிதித்துறை துணை செயலாளர்கள் வெங்கடேசன், நிதித்துறை ஆலோசகர் மற்றும் 9 போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட 15 பேர் குழுவினர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகத்தில் உள்ள 48 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தொழிற்சங்கத்திலும் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த குழிப்பாந்தண்டலத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது45). விவசாயி.
நேற்று மாலை அவர் மாமல்லபுரத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து கொண்டு இருந்தார். பூஞ்சேரி கூட்டுரோடு அருகே வந்த போது எதிரே வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதை கண்டிக்கிறோம். பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு முறையும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கின்ற வகையிலும், விலைவாசி உயரும் வகையிலும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படுகின்றன.
இந்த விலை உயர்வை கைவிட மத்திய அரசிடம் தமிழக அரசு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தேவையற்ற கூடுதலான விலை உயர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
‘நீட்’ தேர்வினால் தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இதில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. தமிழக பாட திட்டம் ‘நீட்’ தேர்வுக்கு ஏற்ற வகையில் இல்லை. இதனால் ‘நீட்’ தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தப்படுகிறது.

பா.ஜனதா கட்சியினர் இந்திய அளவில் நமது தரம் உயர வேண்டும் என சொல்கின்றனர். தேர்வு மூலம் தரத்தை பார்க்க முடியாது. தமிழகத்தில் பள்ளி கல்வி தரத்தை உயர்த்திவிட்டு பிறகு தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும். தேர்வு எழுத வைத்து விட்டு தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் மருத்துவ, பொறியியலில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்படும். இது மாணவர்களுக்கு இழப்பு. இந்த இழப்புகளை யார் ஈடுசெய்வது.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு, ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் ‘நீட்’ தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 13-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆனால் அமைச்சர்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல் ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுவாசலில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடந்த 18 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் அப்பகுதி மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கொண்டு வரமுடியாது.
இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தரக்கூடாது. பசுமையான பகுதியாக உள்ளதை வறட்சியான பகுதியாக மாற்றக்கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்காக திட்டங்கள் இருக்க வேண்டும். திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது. மக்கள் எதிர்ப்பதால் அதை மத்திய அரசு கைவிட வேண்டும். அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
யார் மீதும் யார் வேண்டுமானாலும் எந்த குற்றச்சாட்டையும் சொல்லலாம். எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு சென்று விட்டனர். அவர்களிடம் கையெழுத்து பெற வேண்டியதுதானே. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார்.
சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களிக்க இருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதிகள் விசாரித்து சட்டமன்றத்தில் நடந்தது சரியா? என தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பாலாற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் புத்தேரி சந்திப்பு, வெள்ள குளம் தெரு, சாத்தான்குட்டை தெரு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய சாலபோகம் பகுதியைச் சேர்ந்த குப்பன், கங்காதரன், செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல பாலு செட்டிசத்திரம் போலீசார் முசரவாக்கம், திருப்புட்குழி சந்திப்பு ஆகிய இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய முசரவாக்கம் காலணியைச் சேர்ந்த வெங்கடேசன், தங்க துரை ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அரிசி கடையும் குடோனும் உள்ளது. கடையின் உரிமையாளர் ஆரணி, ஆற்காடு போன்ற பகுதிகளில் இருந்து அரிசி மொத்தமாக கொள்முதல் செய்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்று வருகிறார்.
கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில் பணத்தட்டுப்பாடு அதிகரித்து பணப்புழக்கம் குறைந்தது. இந்நிலையில் அரிசி கடைகாரர் அதிக அளிவிலும் தொடர்ச்சியாகவும் கொள்முதல் செய்ததாக கூறப்படும் நிலையில் இக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மண்டல அதிகாரி மாலா லோகநாதன், காஞ்சீபுரம் மண்டல அதிகாரி சிவக்குமார் தலைமையில் நேற்று மதியம் முதல் 5 மணிநேரம் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை குறித்து கருத்து தெரிவிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். ஆனால் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றினை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தாம்பரம்:
மத்திய மனித வள மேம்பாட்டுதுறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயர் கல்வித்துறையில் உத்தேசிக்கப்பட்டு உள்ள ‘நீட்’ தேர்வு முறை அமல்படுத்துவதற்கு முன்னதாக அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படும். மக்களின் விருப்பத்திற்கு எதிராக மத்திய அரசு முடிவு எடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் டி.கே.நம்பி தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி. இவருடைய மகன் எல்லப்பன் (வயது 46). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
எல்லப்பன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி அங்கயற்கன்னி 2006-ம் ஆண்டு விவாகரத்து பெற்று தன் தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். தந்தை இறந்து விட்டதால் எல்லப்பன் தன் தாயார் ராஜலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் எல்லப்பன் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனார். அதே ஆண்டு மே மாதம் ராஜலட்சுமி இறந்து விட்டார். தாய் இறப்புக்கு கூட எல்லப்பன் வராததால் அவருடைய சித்தப்பா சின்ன காஞ்சீபுரம் போலீசில் எல்லப்பன் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார்.
எல்லப்பனுக்கு காஞ்சீபுரத்தில் 4 வீடுகள், வேலூரில் 1 வீடு, ஏராளமான நகைகள், வங்கியில் ரூ.1 கோடியே 25 லட்சம் ரொக்கம் உள்பட பல கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. மாமனார், மாமியார் இறந்து விட்டதாலும், கணவர் காணாமல் போய் விட்டதாலும் எல்லப்பன் பெயரில் உள்ள சொத்துகளை அங்கயற்கன்னி தன் மகன் பெயருக்கு மாற்ற ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பாடு செய்தார். அப்போது அனைத்து சொத்துகளும் தேன்மொழி என்ற பெயரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் அங்கயற்கன்னி சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. எல்லப்பனின் வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்த தேன்மொழியை (56) போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.
அப்போது சொத்துக்காக அவர் உள்பட 5 பேர் சேர்ந்து எல்லப்பனை மண்வெட்டியால் அடித்து கொன்று விட்டு காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை பாலாற்றில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து காஞ்சீபுரத்தை சேர்ந்த தேன்மொழி, களக்காட்டூரை சேர்ந்த செல்லப்பன் (50), ஏழுமலை (55), விச்சந்தாங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடகிரி என்கிற கோபி (40), காஞ்சீபுரத்தை சேர்ந்த சேகர் (56) ஆகிய 5 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் எல்லப்பனை கொலை செய்து புதைத்ததாக கூறப்படும் குருவிமலை பாலாற்றில், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, வாலாஜாபாத் தாசில்தார் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தோண்டும் பணி நடந்தது. ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் தேன்மொழி உள்பட 5 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்டவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தற்போது அம்பலமானது காஞ்சீபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக வெள்ளிக்கிழமை முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.
ராஜகோபுரம் வழியாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் பிற வாயில்கள் வழியாகவும் மேலும் ராஜகோபுரம் வாயில் வழியாகவும் வெளியேறும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது ராஜகோபுரத்தின் வழியாக செல்பவர்கள் சாமிகும்பிட்டு விட்டு திரும்பவும் ராஜகோபுரம் வழியாக வர கோவில் பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை. பின் கோபுரம் வழியாக வெளியேற அனுமதிக்கின்றனர்.
இதனால் ராஜகோபுர வாயிலில் தங்கள் வாகனங்கள் நிறுத்தி விட்டு வரும் பக்தர்களும் காலணிகளை அங்கே விட்டு விட்டு வருபவர்களும் குறிப்பாக முதியவர்கள் நீண்ட தூரம் நடந்து முன் வாசல் வர வேண்டி உள்ளது.
இதனால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் தற்போது கோயிலில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணி காரணமாக சாமிதரிசனம் செய்பவர்கள் வெளிபிரகாரத்தை வலம் வர முடியாத நிலை உள்ளதால் பக் தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.
சாமிகும்பிட்ட உடன் கோவிலை சுற்றிவந்து கொடி மரத்தின் அருகே சிறிது நேரம் அமர்ந்து அம்மனை மனதிற்குள் வழிபடுவோம்.
ஆனால் தற்போது சாமிகும்பிட்ட உடன் கோவிலை வலம் வரமுடியவில்லை. மேலும் இங்கு பணியில் உள்ள தனியார் பாதுகாவலர்கள் பக்தர்களிடம் அதட்டலாகவும், மிரட்டலாகவும் பேசுகின்றனர். பக்தர்களிடம் மரியாதை குறைவாக பேசுகின்றனர். வயதான பக்தர்களிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர்.
தினந்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் கூடும் திருமலையிலேயே கோவிலை வலம் வரமுடியும் நிலையில் காமாட்சியம்மன் கோயிலை வலம் வர முடியாத நிலை உள்ளது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உத்திரமேரூர் வாழைத்தோட்ட தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் சன்னதி தெருவில் உரக்கடை வைத்து உள்ளார்.
நேற்று இரவு அவர் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கையில் விற்பனை பணம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்தை வைத்து இருந்தார்.
இரவு 10 மணி அளவில் மிஷன் பள்ளி தெரு வழியாக சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென வேலாயுதம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் நிலை குலைந்த வேலாயுதம் வண்டியுடன் கீழே விழுந்தார். உடனே மர்ம கும்பல், அவரிடம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்றுவிட்டனர். கொள்ளை கும்பலின் இந்த திடீர் தாக்குதலில் வேலாயுதத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அவர் உத்திரமேரூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம் கடையை மூடிவிட்டு தினமும் பணத்துடன் வீடு திரும்புவதை நோட்டமிட்டு மர்ம கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த ஆசாமிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
உத்திரமேரூரில் கடந்த 3 மாதத்தில் இதேபோல் வியாபாரிகளை வழிமறித்து 4 சம்பவம் நடந்து உள்ளது. குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை. தொடர் வழிப்பறியால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எமிக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் சமூக ஆர்வலர்கள் 5-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெசன்ட் நகர் தேவாலயத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு மணமகள் கோலத்தில் மாணவியும், உடன் மணமகனும் நின்றனர். அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் சிறுமிக்கு திருமணம் நடத்தக்கூடாது என்று தடுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இரு வீட்டு பெற்றோர்களும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி திருவான்மியூர் போலீசுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் இதனை ஏற்காமல் திருமணம் நடத்த வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து மணமக்களின் பெற்றோர்களை தனியாக அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுத்தனர். உரிய வயது அடைந்த பின்னர் மாணவிக்கு திருமணம் செய்து வைக்கும் படி அறிவுறுத்தினர்.
இதனை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமணத்தை நிறுத்துவதாகவும், மாணவிக்கு உரிய வயது வந்தவுடன் திருமணம் செய்வதாகவும் உறுதி அளித்தனர்.
திருமணம் நிறுத்தப்பட்டதால் அங்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது மாணவி கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இது பற்றி குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி 2-வது நுழைவு வாயில் அருகே கார்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் ‘போர்டிகோ’ பகுதியில் நேற்று ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.
இதனை மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் கண்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த சூட்கேசை யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை. இதனால் அந்த மர்ம சூட்கேசின் உள்ளே வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.
உடனடியாக இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மர்ம சூட்கேஸ் இருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தினர்.
பாதுகாப்பு கவசம் அணிந்த வெடிகுண்டு நிபுணர் அந்த மர்ம சூட்கேசை சோதனை செய்த போது, அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் துணிகள் இருந்தது.
விமானத்தில் வந்த பயணி யாராவது அந்த சூட்கேசை மறந்து போய் விட்டுச்சென்று இருக்கலாம் என தெரியவந்தது. அந்த சூட்கேஸ் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






