என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்
    X

    நீட் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் 13-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

    ‘நீட்’ தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தி சென்னையில் வருகிற 13-ந்தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சி சார்பில் இதை கண்டிக்கிறோம். பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஒவ்வொரு முறையும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கின்ற வகையிலும், விலைவாசி உயரும் வகையிலும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படுகின்றன.

    இந்த விலை உயர்வை கைவிட மத்திய அரசிடம் தமிழக அரசு பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தேவையற்ற கூடுதலான விலை உயர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

    ‘நீட்’ தேர்வினால் தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் அடிப்படையில் ‘நீட்’ தேர்வு நடத்தப்படும். இதில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. தமிழக பாட திட்டம் ‘நீட்’ தேர்வுக்கு ஏற்ற வகையில் இல்லை. இதனால் ‘நீட்’ தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தப்படுகிறது.



    பா.ஜனதா கட்சியினர் இந்திய அளவில் நமது தரம் உயர வேண்டும் என சொல்கின்றனர். தேர்வு மூலம் தரத்தை பார்க்க முடியாது. தமிழகத்தில் பள்ளி கல்வி தரத்தை உயர்த்திவிட்டு பிறகு தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும். தேர்வு எழுத வைத்து விட்டு தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் மருத்துவ, பொறியியலில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்படும். இது மாணவர்களுக்கு இழப்பு. இந்த இழப்புகளை யார் ஈடுசெய்வது.

    தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு மத்திய அரசு, ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் ‘நீட்’ தேர்வை சில ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 13-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆனால் அமைச்சர்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல் ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெடுவாசலில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடந்த 18 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதில் அப்பகுதி மக்கள் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமாக இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கொண்டு வரமுடியாது.

    இந்த திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி தரக்கூடாது. பசுமையான பகுதியாக உள்ளதை வறட்சியான பகுதியாக மாற்றக்கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களுக்காக திட்டங்கள் இருக்க வேண்டும். திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது. மக்கள் எதிர்ப்பதால் அதை மத்திய அரசு கைவிட வேண்டும். அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    யார் மீதும் யார் வேண்டுமானாலும் எந்த குற்றச்சாட்டையும் சொல்லலாம். எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு சென்று விட்டனர். அவர்களிடம் கையெழுத்து பெற வேண்டியதுதானே. எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருந்ததால் ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தார்.

    சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களிக்க இருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிபதிகள் விசாரித்து சட்டமன்றத்தில் நடந்தது சரியா? என தீர்ப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×