என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடக்க இருந்த 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடக்க இருந்த 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

    சென்னை பெசன்ட் நகர் தேவாலயத்தில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    வியாசர்பாடியைச் சேர்ந்தவர் வினோத். இவருக்கும் திருத்தணியைச் சேர்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும் பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று திருமணம் நடக்க இருந்தது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் எமிக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் சமூக ஆர்வலர்கள் 5-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெசன்ட் நகர் தேவாலயத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கு மணமகள் கோலத்தில் மாணவியும், உடன் மணமகனும் நின்றனர். அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் சிறுமிக்கு திருமணம் நடத்தக்கூடாது என்று தடுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இரு வீட்டு பெற்றோர்களும், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி திருவான்மியூர் போலீசுக்கும், குழந்தை நல வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் இதனை ஏற்காமல் திருமணம் நடத்த வேண்டும் என்று அவர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதைத் தொடர்ந்து மணமக்களின் பெற்றோர்களை தனியாக அழைத்து சென்று கவுன்சிலிங் கொடுத்தனர். உரிய வயது அடைந்த பின்னர் மாணவிக்கு திருமணம் செய்து வைக்கும் படி அறிவுறுத்தினர்.

    இதனை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமணத்தை நிறுத்துவதாகவும், மாணவிக்கு உரிய வயது வந்தவுடன் திருமணம் செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

    திருமணம் நிறுத்தப்பட்டதால் அங்கு வந்திருந்த உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது மாணவி கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இது பற்றி குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×