என் மலர்
காஞ்சிபுரம்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சரத்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-
தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக- இலங்கை அரசு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதை கண்டித்து ஏப்ரல் 2-ந்தேதி அவினாசியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் தைலாவரத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம். இவரது மனைவி காந்தராணி (35). ஜீவரத்தினம் தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த காந்தராணி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். ராஜா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
உடனே 3 பேரும் ராஜாவை கையால் தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்தனர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து தப்ப முயன்றனர். இதற்குள் ராஜா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தப்ப முயன்ற 3 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் காரணையை சேர்ந்த வீரமணி, நந்திவரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆவடியை அடுத்த திரு நின்றவூர் பகுதியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. சிலைகளை திறப்பதற்காக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருநின்றவூர் சென்றார்.
அப்போது திருநின்றவூர் காந்தி சிலை அருகில் திரண்ட அ.தி.மு.க.வினர் சிலர் ஜெயலலிதா சிலையை திறக்க தினகரனுக்கு தகுதியில்லை என்று கூறி அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ‘திரும்பி போ’, ‘திரும்பி போ’ என்று கருப்புக் கொடி காட்டினார்கள்.

முன்னாள் பொருளாளர் தன்ராஜ், கழக பேச்சாளர் துரைராஜ், உறுப்பினர் தினேஷ் உள்பட 7 அ.தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டிய படி தினகரனுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி நின்றதால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
தினகரனின் கார் அந்த பகுதியை கடந்து சென்ற பிறகே பரபரப்பு நீங்கியது.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக பா.பொன்னையா இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி அருகே உள்ள சித்தனேந்தல் கிராமம் ஆகும்.
கலெக்டர் பா.பொன்னையாவுக்கு மாவட்ட வருவாய் துறை அதிகாரி க.சவுரிராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட பொதுப்பணித்துறை உயர் அதிகாரி இரா.முத்தையா, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சங்கீதா, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை நிர்வாக இயக்குனரும், கூட்டுறவு இணைப்பதிவாளருமான பாபு, காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் உள்பட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து கலெக்டர் பொன்னையா அனைத்து துறை அலுவகத்திற்கும் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயிலுக்கு சென்று காமாட்சி அம்பாளை கலெக்டர் பொன்னையா தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் பொன்னாடை அணிவித்து குங்கும பிரசாதங்கள் அளித்தனர்.
மதுராந்தகத்தை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சிகாமணி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். கடந்த 2004-ம் ஆண்டு இவரது மகனான பள்ளி மாணவன் கோபிநாத் (12) அரசு பஸ்சில் சிக்கி பலியானார்.
இந்த வழக்கு மதுராந்தகம் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பலியான கோபிநாத் குடும்பத்துக்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் ரூ. 3 லட்சம் நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு தொகை வழங்கப்படவில்லை.
இது குறித்து சிகாமணி மீண்டும் கோர்ட்டில் முறையிட்டார். இதனை விசாரித்த நீதிபதி பிரீத்தி, நஷ்டஈடு வழங்காததால் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுராந்தகம் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு:
மணலியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கள்ளக்குறிச்சியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று இரவு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இரவு 11 மணி அளவில் செங்கல்பட்டை அடுத்த இருகுன்றபள்ளி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்ராஜும், அவரது நண்பரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கோகுல்ராஜுடன் இறந்த நண்பர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 25 வயது இருக்கும். செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் புறப்பட்டது. டிரைவர் முனுசாமி வண்டியை ஓட்டினார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர்.
அச்சரப்பாக்கத்தை அடுத்த தொழப்பேடு டோல்கேட் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது லேசாக மழை பெய்தது.
அப்போது முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலை தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் டிரைவர் முனுசாமி உள்பட 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏற்படவில்லை.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் சஜன்(வயது 23). பெயிண்டர். இவருடைய நண்பர் லோகேஷ்(24). நேற்று மாலை நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சாலையின் மறுபுறம் செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிய லோகேசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் பக்தவச்சலம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் தெரு வழியாக அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கருக்கு தகவல் வந்தது. அவரது தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 3 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த மணிகண்டன், ஆதி கேசவன், பரசுராமன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிகாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர் கூலி தொழிலாளி. இவரது மகன் சேட்டு (வயது 17). காஞ்சீ புரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இந்த நிலையில் மாணவன் சேட்டு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். நேற்று காலை அவனுக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து அவனை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சேட்டு இறந்தான். இதனால் பெற்றோர் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்டர்கள் தவறான சிகிச்சையால்தான் மாணவன் இறந்ததாக கூறி ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சீ போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டம் நடத்தி வர்களிடம் சமாதான பேச்சு நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு பெண்கள் மட்டுமே இயக்கிய விமானம் புறப்பட்டு சென்றது.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான இந்த விமானத்தை 2 பெண் விமானிகள் இயக்கினர். இன்று காலை 6.40 மணி அளவில் விமானி தீபா, துணை விமானி சோப்ரா ஆகியோர் இந்த விமானத்தை ஓட்டினார்கள். பணிப்பெண்கள் 7 பேர் அந்த விமானத்தில் இருந்தனர். விமானத்தில் வந்த பயணிகளுக்கு அவர்கள் பூக்கொத்து கொடுத்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து விமானி தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் கடந்த 11 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வருகிறேன். பெண்கள் எந்த விஷயத்திலும் சோர்வு அடையாமல் திறமையுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்.
மகளிர் தினத்தன்று பெண்களே விமானத்தை இயக்கியது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் மற்றும் பணிப் பெண்களை அதிகாரிகள் பாராட்டினர்.






