search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு கிடைக்குமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
    X

    அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆதரவு கிடைக்குமா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    • எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது.
    • நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    சென்னை :

    சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 பூத் உள்ளது. இந்த 238 பூத்களிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த பொறுப்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்தபோது 30 ஆயிரம் பேரில் இருந்து 40 ஆயிரம் பேர் வரை ஆளே கிடையாது. அங்கு போலி அட்டைகளைத் தயாரித்து அந்த 40 ஆயிரம் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு விடியா தி.மு.க. அரசு இன்றைக்கு அடியாட்களை வைத்துக்கொண்டு வாக்களிக்க உள்ளது. இந்த நிலையை தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

    இது மட்டுமல்லாமல் பணப்பட்டுவாடா நடக்கிறது. விதிகள் அனைத்தும் காலில் போட்டு மிதித்து ஜனநாயகத்தை நசுக்குகின்ற வேலையை தி.மு.க. அரசு செய்துகொண்டிருப்பதைத் தெரிவித்துள்ளோம். இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை அறிவித்துள்ளார். 'இரட்டை இலை' சின்னம் முடக்கக்கூடிய நிலை உள்ளதாக கூறப்படுகிறதே...

    பதில்:- சொல்பவர்களுக்குத்தான் முடக்குவாதம். நாங்கள்தான் அ.தி.மு.க., சரியான வழிமுறையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் போட்டி என்பது அவரை சார்ந்தவர்களுக்கு அது ஒரு மண் குதிரை என்று தெரியும். இதனை நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். மண் குதிரை கரை சேராது.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணி பெயர் வேறாக இருந்து, பின்பு திருத்தப்பட்டுள்ளதே...

    பதில்:- 'டைப்' செய்யும்போது சிறிய பிழை வரும். 'பிரிண்ட்' செய்யும்போது முற்போக்கு என்று வந்துவிட்டது. பின்னர் சரியான பேனர் வைக்கப்பட்டது. இது ஒரு பிரச்சினையே இல்லை.

    கேள்வி:- அண்ணாமலை டெல்லி சென்ற பின்னர்தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறதே?

    பதில்:- இது காரணம் இல்லை. எங்கள் கட்சி உள் விவகாரங்களில் என்றைக்கும் பா.ஜ.க. தலையிட்டது கிடையாது. எங்களைப் பொறுத்தவரையில் பெயரில் சிறிய பிழை இருந்தது. பின்னர் சரி செய்யப்பட்டது.

    கேள்வி:- இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணி கட்சி தலைவர்களுடைய படங்கள் இடம்பெறுவது வழக்கம். தற்போது பா.ஜ.க. தலைவர்கள் படம் இல்லை. அதனால் பா.ஜ.க. உங்கள் கூட்டணியில் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி. இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தற்போது இடைத்தேர்தலில் ஆரம்ப நிலையில் இருக்கிறோம். இறுதி செய்யப்படும்போது கூட்டணியில் இருக்கும் அனைவரின் படமும் இடம்பெறும்.

    கேள்வி:- தேர்தல் நெருங்கிய நிலையிலும் பா.ஜ.க. எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளதே?

    பதில்:- தேசிய ஜனநாயக கூட்டணி தர்மத்தின்படி தான் இன்றைக்கு சென்று கொண்டுள்ளோம் அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நாங்கள் ஆதரவைக் கேட்டுள்ளோம். அவர்கள் தேசிய கட்சி. உரிய நேரத்தில் முடிவு எடுப்பார்கள். உடனே சொல்லுங்கள் என்று வற்புறுத்த முடியுமா...

    கேள்வி:- 'ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. வேட்பாளரை அறிவித்தால் வாபஸ் வாங்கிவிடுவோம்' என்று சொல்லி இருக்கிறாரே...

    பதில்:- நாங்கள் முன்வைத்த காலை பின்வைப்பதில்லை.

    கேள்வி:- கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் வைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் சின்னத்தை உடைப்பேன் என்று பேசியுள்ளார். இதில் அ.தி.மு.க.வின் கருத்து என்ன?

    பதில்:- கடலில் பேனா சின்னம் அமைக்கப்படுவதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவது மீனவர்களுக்குத்தான். எங்களைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் பேனா சின்னத்தை அறிவாலயத்தில் அமைத்தால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கை சரி.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலில் ஈடுபடும்போது அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் கடுமையாக எதிர்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×