என் மலர்
ஈரோடு
- கிருத்திகா குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார்.
- டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி கருக்கம் பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (27). கோவில் பூசாரி. இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதையடுத்து கிருத்திகாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி குறைபிரசவத்தில் (ஏழரை மாதம்) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் அதிகாலை கிருத்திகா குழந்தையை பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். சில மணி நேரம் கழித்து குழந்தையை குணசேகரன் பார்த்தபோது எவ்வித அசைவும் இன்றி இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி குழந்தையை மீட்டு சிவகிரி அரசு மருததுவமனையில் சிகிசசைக்கு சேர்த்தனர்.
அங்கு பணியில் இருந்த டாக்டர் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.76 அடியாக சரிந்து உள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1800 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 64.76 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 378 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1800 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,950 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.37 அடியும், பெரும்பள்ளம் அணியின் நீர்மட்டம் 6.56 அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.74 அடியும் உள்ளது.
- குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட அறச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
இந்த தீ விபத்தில் சில பொருட்கள் எரிந்துள்ளது.
யாரோ புகை பிடிப்பதற்காக பற்ற வைத்த தீயை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.
- சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.
பெருந்துறை:
பவானி சீட்டி காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 33). மெக்கானிக். இவர் சம்பவத்தன்று இரவு பெருந்துறை சிப்காட்டில் வேலையை முடித்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பி சென்றார்.
பெருந்துறை பவானி ரோடு, டீச்சர் காலனி அருகில் சென்றபோது நிலை தடுமாறி ரோட்டில் கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உறுப்பினர்களுக்கு ரபி பருவ விவசாயிகள் பயிற்சியானது நடைபெற்றது.
- பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து ஆலோசணை கூறினார்.
ஈரோடு:
பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் 2023-24-ம் ஆண்டு கலைஞர் திட்டம் செயல் படுத்த தேர்வு செய்யப்பட்ட பருவாச்சி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைக்கப்பட்டு அக்குழு உறுப்பினர்களுக்கு ரபி பருவ விவசாயிகள் பயிற்சியானது நடை பெற்றது.
இப்பயிற்சியில் பவானி வேளாண்மை உதவி இயக்குநர் கனிமொழி தலைமை தாங்கி சிறப்புரை யாற்றினார். குமரகுரு வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் திவ்யபாரதி எள், வாழை, மரவள்ளி, வெண்டை, தக்காளி போன்ற பயிர் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
அங்கக விதை சான்று துறை மற்றும் விதை சான்று அலுவலர் தமிழரசு நிலக்கடலை, எள் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல், மதிப்புக்கூட்டுத்தல் குறித்து ஆலோசணை கூறினார்.
பவானி உதவி வேளாண்மை அலுவலர் கோகுல்ராஜ் கிராம வேளாண் முன்னேற்றக்குழு அமைத்ததன் நோக்கம், அதன் பணி, அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
உயிரியல் கட்டுப்பட்டு ஆய்வக அலுவலர் கோகுலவசன் நிலக்கடலை, எள் மற்றும் மக்காச்சோள பயிரில் விதை தேர்வு முறை, விதைப்பண்ணை அமைத்தல், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து ஆலோசணை கூறினார்.
விதை சுத்திகரிப்பு அலுவலர் முருகேசன் மதிப்புக்கூட்டுதல் மற்றும் விற்பனை முறை குறித்து ஆலோசணை கூறினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர்கள் கங்கா உழவன் செயலி பதிவேற்றம், இ-நாம் மற்றும் இ-வாடகை குறித்து விவசாயிகளிடம் கூறினார்.
முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், பூங்கோதை நன்றி கூறினர்.
- அடுத்த கட்டமாக இன்று ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடத்த போவதாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
- ஆசிரியர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து துடுப்பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
பெருந்துறை:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என 2012-ல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர மீண்டும் போட்டி தேர்வு எழுத வேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை எண் 149 வெளியிடப்பட்டது.
இதற்கு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு படிப்படியாக பணி வழங்கப்படும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் 2013-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனம் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 222 ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப போட்டி தேர்வு நடத்தப்படும் என கடந்த வாரம் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த போட்டி தேர்வுக்கு இன்று முதல் (புதன்கிழமை) வரும் 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 10 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கூறி கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2013-ம் ஆண்டு டெட் ஒருங்கிணைப்பாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசாணை 149 நீக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவித்து சொல்லப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2013-ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து அடுத்த கட்டமாக இன்று ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடத்த போவதாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். தமிழம் முழுவதும் இருந்து இதில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல் சுந்தர், இளங்கோ தலைமையில் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தனர்.
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஒரு தரப்பினரும், பெருந்துறை புது பஸ் நிலையம் அருகே ஒரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
அப்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனையேற்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆனால் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து துடுப்பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள் பெருந்துறை பகுதி முழுவதும் ஆங்காங்கே தனித்தனி பிரிவாக திரண்டு உள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் பெருந்துறை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இன்று பெருந்துறை பகுதி பரபரப்பாக காட்சியளிக்கிறது.
- ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது
- ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்து விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு சூரம்பட்டி போலீசார் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இவர்களுடன் ஈரோடு ரெயில்வே போலீசாரும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதி, டிக்கெட் கொடுக்கும் இடம், அனைத்து நடைமேடைகள், பார்சல் வழங்கும் இடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை ஈடுபட்டனர்.
இரவு நேரத்தில் ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. திடீரென போலீசார் சோதனை செய்வதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகள் உடமை கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகள் உடமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்ட பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது ஆந்திராவில் இருந்து வெடிகுண்டு புரளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனில் பேசி நபரின் டவர் ஆந்திராவை காட்டியது. இதையடுத்து இன்று காலை ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.
- லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.
- வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி உக்கரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுரோட்டில் இருந்து மில்மேடு செல்லும் தார் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக அந்த சாலை வழியாக அதிக பாரத்துடன் ஜல்லி கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு கனரக மற்றும் டிப்பர் லாரிகள் சென்று வருகிறது. இந்த வழியாக வரும் கனரக டிப்பர் லாரிகளால் தார் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது.
மேலும் டிப்பர் லாரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு செல்வதால் சாலை வளைவுகளில் ஜல்லி கல் கீழே கொட்டி சாலையில் பரவலாக சிதறி கிடைக்கிறது.
இதனால் அந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதே போல் டிப்பர் லாரிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பகல் மற்றும் இரவு முழுவதும் அதிக வேகமாக செல்கிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இது குறித்து மக்கள் லாரிகளை வேகமாக ஓட்டாதீர்கள் என டிரைவர்களிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் கேட்காமல் மீண்டும் லாரிகள் வேகமாவே செல்கிறது என மக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் அந்த சாலை வழியாக வந்த 6-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மக்கள் கூறும் போது, இந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வர வேண்டும். வேகமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என கூறினர்.
இதை தொடர்ந்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் பேரூராட்சி தலைவர் இளங்கோ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி மற்றும் போலீசார் வந்தனர். இதையடுத்து அவர்கள் பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.
இதை தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவர்களிடம் இந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்டிருக்கிறது. இது போன்ற கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. எனவே இனிமேல் நீங்கள் இந்த சாலை வழியாக டிப்பர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றிக்கொண்டு வரக்கூடாது. மீண்டும் கனரக டிப்பர் லாரிகள் இந்த சாலையில் வந்தால் பறிமுதல் செய்ய நேரிடும் என யூனியன் சேர்மன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த போராட்டம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
- பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதில் குருவ ரெட்டியூர், கரடிப்பட்டியூர், தண்ணீர்பந்தல் பாளையம், ரெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழைகள் சேதம் அடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,
நாங்கள் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை முதலீடு செய்து கதலி ரக வாழையை பயிரிட்டோம். அடுத்த மாதம் அறுவடைக்கு தயா ராக உள்ள நிலையில் திடீரென மழை பெய்து எங்கள் வேளாண்மையை சேதப்படுத்தி விட்டது.
இதனால் ஒரு வருட பயிரான வாழையை பாதுகாத்து வந்த நிலையில் திடீரென மழைக்கு சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் ஏக்கருக்கு ரூ.4 லட்சம் வரை வரும் வருமானம் பறிபோனது.
எனவே அரசு நிர்வாகம் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட எங்கள் விவசாயத்திற்கு நஷ்ட ஈடு வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.
- வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
- கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.
சென்னிமலை:
தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னிமலை நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள், வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் சென்னிமலை அருகே இரட்டைபாலம் எல்.பி.பி. வாய்கால் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர். மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.
- மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது.
ஈரோடு:
தென்னிந்திய அளவில் ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் திங்கள் மாலை முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி வாரச்சந்தை பிரபலமானது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வியாபாரிகளும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநில வியாபாரிகளும் அதிகளவு இங்கு மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜவுளி சந்தை மந்தமாக நடந்து வந்த நிலையில் கடந்த வார முதல் தீபாவளி விற்பனை சுறுசுறுப்பாக நடைபெற தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் விற்பனை சூடுபிடி த்துள்ளது. மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மட்டுமன்றி பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குழுவாக வந்திருந்தனர்.
குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை மொத்த க்கொள்முதலில் வாங்கி சென்றனர்.
நூல் விலை குறைவு காரணமாக இந்த வாரம் பனியன், துண்டு, பாவாடை போன்ற துணிகளின் விலை ரூ.5 வரை குறைந்துள்ளது.
இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. குழந்தைகளுக்கான ஜவுளி துணி விற்பனைகள் விறு விறுப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது,
கடந்த சில நாட்களாக பல்வேறு பிரச்சினை காரணமாக ஜவுளி வியாபாரம் மந்தமாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது தீபாவளி நெருங்கி உள்ளதையொட்டி கடந்த வாரம் முதல் ஜவுளி விற்பனை ஓரளவு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த வாரம் ஜவுளி வர சந்தை நேற்று மாலை கூடியது. இரவில் விடிய விடிய வியாபாரம் விறு விறுப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர்.
சில்லரை வியாபாரம் 50 சதவீதம் நடைபெற்றது. மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடை பெற்றது. பெட் சீட்டுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வருகின்றன.
இந்த ஆண்டு தீபாவளியொட்டி புதிய டிசைன்களில் ஜவுளி ரகங்கள் அதிகம் வந்து ள்ளது. இதனால் அடுத்த 2 வாரம் வியாபாரம் மேலும் சூடு பிடிக்கும் என்றனர்.
- யானை தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
- 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் ஒற்றை காட்டுயானை இன்று புகுந்தது.
குடியிருப்பு பகுதியில் அங்கும், இங்கும் சுற்றித்திரிந்த யானை சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்தது விளைப் பொருட்களை சேதப்படுத்தியது.
இதை பார்த்து அதிர்ச்ச டைந்த அப்பகுதி பொது மக்கள் மற்றும் விவசாயிகள் யானையை விரட்ட முயன்றனர். ஆங்காங்கே தீ மூட்டியத்துடன், டார்ச் லைட் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானை மீண்டும் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
இதனையடுத்து டிராக்டர் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை வனப்பகு திக்குள் சென்றது.
இதனையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்ட னர். எனினும் வன பகுதி யில் இருந்து எந்த நேரமும் மீண்டும் ஊருக்குள் யானை வரலாம் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் உள்ளனர்.
வனத்துறையினர் யானையின் நடவடிக்கையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






