என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதி தேர்வு ஆசிரியர்கள் கைது"

    • அடுத்த கட்டமாக இன்று ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடத்த போவதாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
    • ஆசிரியர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து துடுப்பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    பெருந்துறை:

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என 2012-ல் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர மீண்டும் போட்டி தேர்வு எழுத வேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசாணை எண் 149 வெளியிடப்பட்டது.

    இதற்கு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் உட்பட ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு படிப்படியாக பணி வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணி நியமனம் நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 222 ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப போட்டி தேர்வு நடத்தப்படும் என கடந்த வாரம் அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இந்த போட்டி தேர்வுக்கு இன்று முதல் (புதன்கிழமை) வரும் 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் 10 ஆண்டுகளாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம் என்று கூறி கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2013-ம் ஆண்டு டெட் ஒருங்கிணைப்பாளர் நலச்சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசாணை 149 நீக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவித்து சொல்லப்பட்டது.

    இந்த சூழ்நிலையில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2013-ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகளை சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    இதையடுத்து அடுத்த கட்டமாக இன்று ஈரோட்டில் மாபெரும் போராட்டம் நடத்த போவதாக 2013 டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். தமிழம் முழுவதும் இருந்து இதில் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என அவர்கள் அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வடிவேல் சுந்தர், இளங்கோ தலைமையில் இன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்தனர்.

    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஒரு தரப்பினரும், பெருந்துறை புது பஸ் நிலையம் அருகே ஒரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.

    அப்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி இல்லை. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர். இதனையேற்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ஆனால் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பெருந்துறை போலீசார் கைது செய்து துடுப்பதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள் பெருந்துறை பகுதி முழுவதும் ஆங்காங்கே தனித்தனி பிரிவாக திரண்டு உள்ளனர். அவர்கள் எந்த நேரத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் பெருந்துறை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் இன்று பெருந்துறை பகுதி பரபரப்பாக காட்சியளிக்கிறது.

    ×