என் மலர்tooltip icon

    ஈரோடு

    மொடக்குறிச்சி அருகே சூறாவளி காற்றில் நிலைதடுமாறிய டிப்பர் லாரி 40 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் கவுதம். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவர் ஓட்டி வருகிறார்.

    நேற்று டிப்பர் லாரியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து உரிமையாளர் கவுதம் லாரியை ஈரோட்டில் உள்ள பட்டறைக்கு சர்வீஸ் செய்ய கொண்டு செல்லும்படி டிரைவர் செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து செந்தில்குமார் இரவு 10 மணி அளவில் டிப்பர் லாரியை ஈரோடு நோக்கி ஓட்டி வந்தார். அவர் மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்புதூர் என்ற பகுதியில் வந்தபோது அங்கு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

    அப்போது நிலைதடுமாறிய டிப்பர் லாரி ரோட்டின் இடதுபுறம் இருந்த 40 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் இந்த விபத்து தெரியவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் லாரி கிடப்பதை பார்த்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த டிப்பர் லாரியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே டிப்பர் லாரி டிரைவர் செந்தில்குமார் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரது காலணி கிணற்றுக்கு வெளியே கிடந்தது. மேலும் அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி செந்தில்குமாரை தேடி வருகின்றனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோபிசெட்டிபாளையத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நல்லகவுண்டன்பாளையம் மலர் நகரைச் சேர்ந்தவர் டேவிட் சூசை மாணிக்கம் (62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி இசபெல்லா ஜான்சிராணி (60). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டேவிட்சூசைமாணிக்கம் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் சென்று விட்டார். இந்நிலையில் இன்று காலை பக்கத்து வீட்டுக்காரர் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்த அவர் உடனடியாக இது குறித்து டேவிட் சூசை மாணிக்கத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்.

    கோபிசெட்டிபாளையம் சப்இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், விஜயன் தலைமையில் போலீசார் டேவிட் சூசை மாணிக்கம் வீட்டுக்கு வந்தனர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

    இந்த நேரத்தில் கோவையிலிருந்து டேவிட் சூசை மாணிக்கம் தன் மனைவியுடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த 50 பவுன் நகை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதேபோல் பணமும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை கடப்பாறையால் நெம்பி உள்ளே சென்று உள்ளனர். பின்னர் பீரோவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்று உள்ளனர்.

    திருட்டு நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    டேவிட்சூசைமாணிக்கம் வீட்டின் முன்பு பாதுகாப்பு கருதி சி.சி.டி.வி. கேமரா பொருத்தி உள்ளார். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. அதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பவானிசாகர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் அரசு அலுவலர் பயிற்சி பள்ளியில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (36). இவர்களுக்கு கருநாதன் என்ற ஒரு மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று இந்துமதி தனது மகனுடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இந்துமதியின் மீது இடிந்து விழுந்தது.

    இதில் அவருக்கு இடதுபக்க கழுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக இந்துமதியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளுக்கு பணத்தை செலுத்திய பெண், பார்சலை பிரித்தபோது அதில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    ஈரோடு:

    நசியனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஈரோடு ஆசிரியர் காலனியில் நிதி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் ஆப் மூலம் ஷாம்பு ஒன்று வாங்குவதற்கு ஆர்டர் செய்து உள்ளார். ஆர்டரை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பார்சல் அனுப்பியது. அதில் ஷாம்புக்கான தொகை ரூ.330-ஐ பார்சல் கொண்டு வந்த நபரிடம் வழங்கினார் அந்த பெண்.
    பின்னர் அவர் பார்சலை பிரித்தபோது கடுமையான துர்நாற்றம் வீசியது. அவர் பார்சலின் உள்ளே பார்த்தபோது அதில் ஷாம்புக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு ஒன்று இருந்தது. அதைப்பார்த்த பெண் நிதி ஆலோசகர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தும் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் பண்ணாரி ரோட்டில் சிக்கரசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் ரோந்து சென்றனர்.

     அப்போது பண்ணாரி தெப்பகுளம் செல்லும் வழியில் வண்டிமுனியப்பன் கோவில் அருகே சுமார் 55 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் பிணமாக கிடந்தார்.

     இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

     அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சருகிறார்கள்.
    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பாளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து தடப்பாளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணை–யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.77 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.  நேற்று வரை தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாச–னத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 155 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    மனைவியுடன் போனில் தகராறு வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மனைவியுடன் போனில் தகராறு வட மாநில வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முத்திலேஷ் முக்கியா (வயது 38).இவருக்கு திருமணமாகி ரூபி தேவி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் பீகார் மாநிலத்தில் குடியிருந்து வருகிறார்கள்.

    முத்திலேஷ் முக்கியா ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த பொரசமேட்டு புதூரில் அவரது அக்கா வுடன் தங்கி அந்த பகுதியில்  உள்ள ஒரு நார் மில்லில் வேலை பார்த்து வந்தார். முத்திலேஷ் முக்கியாவுக்கு  குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இவர் அவரது மனைவி யுடன் போனில் பேசி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிவகிரி பொரசமேட்டு புதூர் பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் முத்திலேஷ் முக்கியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாளவாடியில் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.
    தாளவாடி:

    தாளவாடியில்  தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட  தடுப்பணைகள்  நிரம்பி வழிகிறது.

    தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில  நாட்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரத்தில் அவ்வப்போது மழையும் பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் 11 மணி வரை    தலமலை, கோடிபுரம்  நெய்தாளபுரம், ஒசூர்,  சிக்கள்ளி, பனக்கள்ளி, கெட்டவாடி ஆசனூர், குளியாடா, திகனாரை ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது.

    வனப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம் குட்டைகள் நிரம்பி உள்ளது. பலத்த மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாளவாடி, திகனாரை மற்றும் சூசைபுரம் அருகே உள்ள  ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட  தடுப்பணைகள்  நிரம்பி வழிகிறது. மழை நீர் அணைத்தும் வீணாக கர்நாடகா மாநிலம் சிக்கொலா அணைக்கு செல்கிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில்  கூடுதல் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஈரோட்டில் த.மா.கா. சார்பில் நாளை சொத்து, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் த.மா.கா. சார்பில் நாளை சொத்து, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் நடக்கிறது


    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சொத்து,  வீட்டு வரி  விலைவாசி உயர்வை கண்டி த்து   ஜி.கே.வாசன் தலை மையில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை (திங்க ட்கி ழமை)  வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் காலை 9.30 மணிக்கு த.மா.கா. சார்பில் சொத்து வீட்டு வரி உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்திற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். மாநில பொதுச்செ யலாளர் விடியல் சேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜய குமார் ஆகியோர் முன்னிலை   வகிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்த த.மா.கா. நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
    காய்கறி வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது.
    ஈரோடு:

    காய்கறி வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது.

    ஈரோடு வ.உ.சி காய்கறி பெரிய மார்க்கெட்டுக்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளிலிருந்து காய்கறிகள் வரத்தாகி வருகின்றன. 

    சமீபகாலமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகள் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் ரூ.10 முதல் 15 விலை குறைந்துள்ளது.
    ஆனால் அதே நேரத்தில்  தக்காளி வரத்து தொடர்ந்து குறைவாக வருவதால் தக்காளி விலை மட்டும் ஏறுமுகமாகவே உள்ளது. ஈரோடு மார்க்கெட்டிற்கு தாளவாடி சத்தியமங்கலம், கர்நாடகா மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து முன்பு 10 டன் வரை தக்காளி வரத்தாகி வந்தது.

    ஆனால் சமீப காலமாக தொடர்ந்து வரத்து குறைந்து வருகிறது. இன்று வ .உ. சி .  மார்க்கெட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 டன் தக்காளி வரத்தாகி இருந்தது. ஆனால் இன்று சில்லரையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையாகி வருகிறது. 
    தாளவாடி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலிருந்து தக்காளி வரத்தாக தொடங்கினால் தக்காளி விலையும் சரியும் என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கத்தரிக்காய், பீட்ரூட் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் குறைந்துள்ளது.

    இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
    கத்திரிக்காய்-40, முள்ளங்கி-30, அவரை க்காய்-60, பீர்க்கங்காய்-60, பாகற்காய்-50, வெண்டைக்காய் - 40, பீட்ரூட்-40, பீன்ஸ்-60, புடலங்காய்-40, முருங்கைக்காய்-40, முட்டைக்கோஸ்-ரூ.10 முதல் 20 வரை, காலிபிளவர் -20, மிளகாய்-40, சின்ன வெங்காயம்-20, பெரிய வெங்காயம் - 20.

    பவானி அருகே அரசு விதைப்பண்ணையில் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.
    ஈரோடு:

    பவானி அருகே அரசு விதைப்பண்ணையில் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தமிழக அரசின்  வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் ஊரக இளைஞர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி 30 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது.

    இப்பயிற்சியின் ஒரு பகுதியாக பவானியை அடுத்த குருப்பநாய்க்கன் பாளை யத்தில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் ஈரோடு விதைச்சா–ன்று மற்றும் அங்கக–ச்சான்று உதவி இயக்குநர் மோகன–சுந்தரம் உளுந்து  வம்பன் 8 ரகம் விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார். 

    இப்பயிற்சியின் போது பயறுவகை பயிர்களில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்ப பயிற்சி, கலவன்களை கண்டறிதல் மற்றும் அகற்றுதல் தொடர்பாக களப் பயிற்சி அளிக்கப்பட்டது. 

     மேலும் அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வயல்மட்ட  விதைகளை சுத்தி நிலையத்தில் பெறும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சுத்திப்பணி மேற்கொள்ளுதல், விதைமாதிரி எடுத்தல், தேர்ச்சி பெற்ற விதைக்குவியல்களுக்கு சான்றட்டை பொருத்துதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியின் போது  பவானி வேளாண்மை உதவி இயக்குநர் குமாரசாமி, பண்ணை மேலாளர் முருகேசன், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) கணேசமூர்த்தி, விதைச்சான்று அலுவலர்   நாசர் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

    சித்தோடு அருகே நண்பருடன் மீன் பிடித்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு அருகே நண்பருடன் மீன் பிடித்து கொண்டிருந்த  கட்டிட தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் சங்ககிரி, அக்ரஹாரம், புள்ளக்கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் கட்டிட கூலித் தொழிலாளிகள்.

    செல்வராஜ் தற்போது ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டில் நடந்து வரும் அத்திக்கடவு அவினாசி திட்டம் பணியில் கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வராஜ் கிளம்பிச் சென்றார். அங்கு வேலை இல்லாததால் தனது நண்பர் சந்திரன் என்பவருடன் பவானி ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.

    சிறிது நேரத்தில் சந்திரன் வீட்டிற்கு போய் விட்டு வருவதாக கூறிவிட்டு சென்று விட்டார். பின்னர் சந்திரன் திரும்பி வந்தபோது செல்வராஜை காணவில்லை. இது குறித்து சந்திரன் செல்வராஜ் மனைவி பூங்கொடிக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பூங்கொடி தனது உறவினர்களுடன்  பவானி ஆற்றுக்கு வந்தார். 

    மேலும் இது குறித்து பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேடிய போது பவானி ஆற்று பகுதியில் செல்வராஜ் உடல் மிதந்து வந்ததை கண்டு பிடித்தனர்.  செல்வராஜ் மீன்பிடித்த போது ஆழமான பகுதிக்கு சென்று தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்தது.

    சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜ்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×