என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நிலைதடுமாறி 40 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த டிப்பர் லாரி
    X
    நிலைதடுமாறி 40 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த டிப்பர் லாரி

    மொடக்குறிச்சி அருகே சூறாவளி காற்றில் நிலைதடுமாறி 40 அடி ஆழ கிணற்றில் பாய்ந்த டிப்பர் லாரி

    மொடக்குறிச்சி அருகே சூறாவளி காற்றில் நிலைதடுமாறிய டிப்பர் லாரி 40 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் கவுதம். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவர் ஓட்டி வருகிறார்.

    நேற்று டிப்பர் லாரியில் திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து உரிமையாளர் கவுதம் லாரியை ஈரோட்டில் உள்ள பட்டறைக்கு சர்வீஸ் செய்ய கொண்டு செல்லும்படி டிரைவர் செந்தில்குமாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து செந்தில்குமார் இரவு 10 மணி அளவில் டிப்பர் லாரியை ஈரோடு நோக்கி ஓட்டி வந்தார். அவர் மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்புதூர் என்ற பகுதியில் வந்தபோது அங்கு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

    அப்போது நிலைதடுமாறிய டிப்பர் லாரி ரோட்டின் இடதுபுறம் இருந்த 40 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது. இரவு நேரம் என்பதால் யாருக்கும் இந்த விபத்து தெரியவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் லாரி கிடப்பதை பார்த்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிணற்றில் விழுந்த டிப்பர் லாரியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே டிப்பர் லாரி டிரைவர் செந்தில்குமார் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரது காலணி கிணற்றுக்கு வெளியே கிடந்தது. மேலும் அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி செந்தில்குமாரை தேடி வருகின்றனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×