என் மலர்tooltip icon

    ஈரோடு

    அரச்சலூரில் அரசு பள்ளியில் புகுந்து வகுப்பறைக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அரச்சலூர்:

    ஈரோடு அருகே உள்ள அரச்சலூரில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 39 ஆண் குழந்தைகளும், 49 பெண் குழந்தைகளும்படித்து வருகிறார்கள்.

    இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு பள்ளி துப்புரவு ஆய்வாளர் மைதிலி பள்ளியை சுத்தம் செய்ய வந்தார். அப்போது பள்ளியில் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே செயல்வழி கற்றல் வகுப்பறையில் மர்ம ஆசாமிகள் யாரோ புகுந்து வகுப்பறைக்கு தீ வைத்து உள்ளனர். இதில் அந்த வகுப்பறையில் உள்ள புத்தகங்கள், டேபிள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 10 ஆயிரம்.

    உடனே இதுகுறித்து மைதிலி பள்ளி தலைமை ஆசிரியை சாமியாத்தாளிடம் தெரிவித்தார். அவரும் உடனே பள்ளிக்கு விரைந்து வந்து பார்த்தார். இதுதொடர்பாக தலைமை ஆசிரியை சாமியாத்தாள் அரச்சலூர் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் வகுப்பறைக்கு தீ வைத்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கர்நாடக லாரி என்று நினைத்து ஈரோட்டை சேர்ந்தவரின் லாரிக்கு தீவைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு:

    கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது.

    இதன் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழ்நாட்டில் இருந்து பஸ்கள்-லாரிகள் செல்லவில்லை. சரக்கு ஏற்றி சென்ற லாரிகளும் பண்ணாரி சோதனைசாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிரச்சினை சிறிது ஓய்ந்து இருந்ததால் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் சரக்குகளை ஏற்றி சென்றன.

    இந்த நிலையில் தமிழகத்துக்கு மேலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகாவில் மேலும் கலவரம் வெடித்தது. தமிழகத்தில் இருந்துசென்ற 42 பஸ்கள், 50 லாரிகளை கன்னட வெறியர்கள் தீ வைத்து எரித்தனர்.

    இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் லாரிகள் கடந்த 2 நாட்களாக செல்லாமல் லாரி செட்டுகளில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன்படி ஈரோடு மூலப்பட்டறையில் கர்நாடக பதிவு எண் கொண்ட லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அந்த லாரி தீப்பிடித்து சேதம் அடைந்தது. மேலும் கர்நாடக பதிவு எண்கொண்ட 4 லாரிகள், மற்றும் மகராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு லாரியின் கண்ணாடிகளை தடியால் அடித்து அந்த கும்பல் உடைத்தது.

    தீ வைத்து எரிக்கப்பட்ட லாரி மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட லாரிகள் அனைத்தும் ஈரோட்டை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிக்கு தீ வைத்து லாரி கண்ணாடிகளையும் உடைத்த கும்பலை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே மழை பெய்யவேண்டி வீடுவீடாக பழையசோறு வாங்கி ஒப்பாரிவைத்து பெண்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் கடந்த சில மாதங்களாக சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்கிறது. மற்ற இடங்களில் சுத்தமாக மழை பெய்யவில்லை.

    எல்.பி.பி வாய்க்கால் தண்ணீரும் திறந்து விடவில்லை. இதனால் வறட்சி அதிகரித்து விவசாய பயிர்கள் காய்ந்து வருகிறது. இந்த நிலையில் மழைக்கஞ்சி எடுத்தால் மழை பெய்யும் என்ற ஐதீகத்தின்படி அவல் பூந்துறை செங்காட்டு வலசு பகுதியில் உள்ள பெண்கள் ஒன்று கூடி மழை பெய்ய வேண்டியும், கிராமம் செழிக்க வேண்டியும், தொடர்ந்து மூன்று நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை விரதமிருந்து, மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று மண்சட்டியில் மழைக்கஞ்சி (பழைய சோறு) வாங்கி வந்து ஊர் மாகாளியம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த பெரிய மண் சட்டியில் ஊற்றினர்.

    இதையடுத்து பெண்கள் ஒப்பாரி பாட்டு பாடி மழை பெய்ய வேண்டி வேண்டினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து, மழைக்கஞ்சியை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கி விட்டு மழை பெய்யாத ஊரில் நாங்கள் குடியிருக்க மாட்டோம் என்று கோவித்து கொண்டு ஊரை விட்டு சென்றனர்.

    இதையடுத்து ஆண்கள் ஊர் எல்லை வரை சென்ற பெண்களை நமது ஊருக்கு கண்டிப்பாக மழை பெய்யும், கிராமம் செழிக்கும், கடவுள் நம்மை காப்பாற்றுவார் வாருங்கள் என்று சமாதானம் செய்து அழைத்து வந்தனர். இதே போல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

    இது குறித்து ஊர் பொது மக்கள் கூறியதாவது:-

    சுமார் 15 ஆண்களுக்கு முன்பு மழை இல்லாத போது இதேபோல் பெண்கள் அனைவரும் ஒன்று கூடி மழைக்கஞ்சி எடுத்து, ஒப்பாரி வைத்து ஊரை விட்டு சென்றனர். ஊர் எல்லைக்கு சென்ற போது ஆண்கள் சமரசம் செய்து அழைத்து வந்தார்கள்.

    பின்னர் மூன்று நாட்களுக்குள் மழை பெய்தது. இதனால் இந்த வருடமும் பெண்கள் அனைவரும் மழைச்சோறு எடுக்கலாம் என்று முடிவு செய்து விரதமிருந்து மழைச்சோறு எடுத்து விழிபாடு நடத்தியுள்ளோம். மழைபெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை பெய்தவுடன் இங்குள்ள மாகாளியம்மனுக்கு 1008 குடம் தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்ய முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 200 பள்ளி வாசல்களிலும், 42 ஈத்கா விசே‌ஷ மைதானத்திலும் இன்று காலை விசே‌ஷ தொழுகை நடந்தது.
    ஈரோடு:

    தியாக திருநாளாக கருதப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் 200 பள்ளி வாசல்களிலும், 42 ஈத்கா விசே‌ஷ மைதானத்திலும் இன்று காலை விசே‌ஷ தொழுகை நடந்தது.

    ஈரோடு வ.உ.சி பூங்கா வளாகத்தில் இன்று காலை விசே‌ஷ தொழுகை நடந்தது. ஈரோடு மாவட்ட அரசு ஹாஜி முகமது ஹிபாயத்துல்லா தலைமையில் நடந்த இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    தொழுகை முடிந்ததும் சிறுவர்-சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டி அரவணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

    ஈரோடு பெரிய அக்ரகாரம், திருநகர் காலனி, கருங்கல் பாளையம், புது மஜீத் வீதி, மரப்பாலம் கொல்லம்பாளையம், நாடார் மேடு, மற்றும் கோபி, சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடந்தது.

    இதன்பிறகு ஆட்டு இறைச்சியை 3 ஆக பிரித்து அதில் ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தனக்கும் இன்னொரு பங்கை ஏழை இஸ்லாமியர்களுக்கும் கொடுத்து தியாக திருநாளான பக்ரீத்தை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

    ஈரோடு ஸ்டேட் பாங்கி ரோட்டில் உள்ள மைதானத்தில் தவ்ஹித் ஜமாத்தின் பழக்கார தெரு கிளை சார்பில் தலைவர் சிராஜுதீன் தலைமையில் இன்று விசே‌ஷ தொழுகை நடந்தது. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
    அந்தியூர் அருகே கர்நாடகா லாரியை நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு செல்ல வழி உள்ளது போல் அந்தியூர், தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லவும் வழி உள்ளது. இந்த வழியாக அதிக போக்குவரத்து இல்லாவிட்டாலும் ஒன்றிரண்டு பஸ்களும், லாரிகளும் சென்று வருகிறது.

    கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் மாவட்டம் ராமபுரத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். லாரி உரிமையாளர். கடந்த 4 நாட்களுக்கு முன் இவர் கர்நாடகாவில் இருந்து ஒரு டிரைவர் மூலம் மக்காச்சோளத்தை ஏற்றி பெருந்துறைக்கு அனுப்பி வைத்தார்.

    டிரைவர் பெருந்துறையில் மக்காச்சோளத்தை இறக்கிவிட்டு திரும்பி வந்தார். இந்த நிலையில் காவிரிநீர் தொடர்பாக இரு மாநிலத்திலும் பதட்டம் நிலவி வருவதையொட்டி டிரைவர் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் நான்கு ரோட்டில் லாரியை நிறுத்தி வைத்து தனது உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

    லாரி உரிமையாளர் மாதேஸ்வரன் பிரச்சினை பெரிதாக நடப்பதற்கு முன் லாரியை எடுத்துவர எண்ணி நேற்று ஆப்பக்கூடல் வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியை உரிமையாளர் மாதேஸ்வரனே எடுத்து கொண்டு அந்தியூர், பர்கூர் வழியாக கர்நாடகா புறப்பட்டார்.

    லாரி அந்தியூரை தாண்டி கெட்டிசமுத்திரம் ஏரி அருகே நேற்று இரவு சென்றபோது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் லாரியை நிறுத்தினர்.

    பிறகு தாங்கள் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை லாரியின் முன்புற சீட்டில் ஊற்றினர். இதை மதேஸ்வரன் தடுத்ததால் அவரை தள்ளிவிட்டு சீட்டில் பொட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர்.

    அப்போது பின்னால் வந்த மற்ற வாகனங்களில் வந்தவர்கள் உடனடியாக அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சீட்டில் பிடித்த தீயை உடனடியாக அணைத்தனர். தக்க சமயத்தில் தீயை அணைத்ததால் லாரி முழுவதும் தீ பிடிக்காமல் தப்பியது. எனினும் சீட் முழுவதும் எரிந்துவிட்டது.

    அதன் பிறகு அந்த லாரி புறப்பட்டது. மாதேஸ்வரனுடன் 2 போலீசாரும் கூடவே சென்று கொள்ளேகால் வரை பாதுகாப்புடன் விட்டு விட்டு திரும்பி வந்தனர்.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் விநாயகர் சிலையை உடைத்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் மதுரை வீரன் கோவில் தெருவில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலையை நேற்று மர்ம மனிதர்கள் உடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே நடந்த தகராறில் சிலை உடைக்கப்பட்டதாக தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலை உடைத்தவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஈரோடு வீரப்பா வீதியை சேர்ந்த ராஜா (வயது 44), சேகர் (54) ஆகிய 2 பேரை சிலை உடைத்ததாக போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை அருகே மகளிர் விடுதியில் இளம்பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே உள்ள ஆண்டிவயல் ராமர்மடம் பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவரது மகள் சுமந்தா (வயது 19). இவர் கடந்த 4 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் மகளிர் விடுதியில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக தனக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்தாராம். இந்த நிலையில் சுந்தா தனக்கு வயிறு வலிக்கிறது. நான் வேலைக்கு வரவில்லை. நீங்கள் போங்கள் என்று உடன் இருந்தவர்களை அனுப்பிவைத்து விட்டாராம். வேலைக்கு சென்றுவிட்டு மதியம் அறைக்கு பெண்கள் வந்தனர். கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. அவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக போய் பார்த்தனர்.

    அப்போது அங்கு சுமந்தா தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து தொங்கி கொண்டிருந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் விடுதி மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் பெருந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட்ராஜ் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ரெயில் கட்டணம் உயர்வை கண்டித்து ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சிறுபாண்மை துறை சார்பில் மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
    ஈரோடு:

    மத்தியில் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை உயர்த்த மாட்டோம் என்ற பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விலைவாசி உயர்ந்து கொண்டே வருவதாகவும் மேலும் ரெயில் கட்டணம், விமான கட்டணத்தையை மிஞ்சும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என்.பாஷா கூறியிருப்பதாவது:-

    கடந்த 9-ந் தேதி முதல் ராஜ்தாணி, சதாப்தி தூரர்தே ரெயில்களில் முதலில் 10 சதவீத இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்தில் டிக்கெட் வழங்கப்படும். பிறகு அடுத்தடுத்து 10 சதவீதம் உயர்ந்து கொண்டே செல்லும் வகையில் 50 சதவீதம் வரை உயரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ரெயில் கட்டணத்தில் மத்திய அரசு மோசடி செய்கிறது என்று தான் கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் தினமும் செல்லும் சென்னை, மும்பை, புதுடெல்லி போன்ற ரெயில்களுக்கும் இந்த முறையை அமல்படுத்தி விடுவார்களோ...என்ற அச்சத்தில் ரெயில் பயணிகள் உள்ளனர்.

    இந்த விலை உயர்வை கண்டிப்பதுடன் ஈரோடு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சிறுபாண்மை துறை சார்பில் மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காவிரி நீர் பிரச்சினையால் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் உச்சக்கட்ட வன்முறையில் ஈடுபட்டு வருவதால் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
    சத்தியமங்கலம்:

    காவிரி நீர் பிரச்சினையால் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் உச்சக்கட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று மாலை கன்னட அமைப்பினர் நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்ட பஸ்கள் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இந்த பயங்கர வன்முறையால் பெங்களூர் கலவரப் பூமியாக மாறி உள்ளது. இந்த கலவரம் மற்ற மாவட்டங்களான மைசூரு, மாண்டியா, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டங்களுக்கும் பரவி உள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கன்னட வெறியர்களின் பயங்கர வன்முறை தாக்குதலால் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இன்று முதல் அடியோடு நிறுத்தப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக கர்நாடகாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் அதேபோல் கர்நாடகாவிலிருந்து இன்று எந்த வாகனங்களும் வரவில்லை.

    தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூரில் இருமாநில போலீசாரும் நேற்று மாலை முதல் மீண்டும் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த வழியாக செல்லும் தமிழக வாகனங்கள் தாளவாடிக்கு மேல் போக வேண்டாம் என எச்சரித்து அனுப்பினர். மேலும் வெளிமாநில லாரிகள் பண்ணாரியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    மற்ற வாகனங்களில் கர்நாடக எல்லையான புளிஞ்சூரில் இறக்கி விடப்பட்ட பயணிகளை தமிழக அரச பஸ் சென்று ஏற்றி தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் வருகிறது. அந்த பஸ்சிலிருந்து வரும் பயணிகள் பதட்டத்துடன் இறங்கி சென்றதை காண முடிந்தது.

    ஈரோடு மாவட்ட (தமிழக) எல்லையான தாளவாடியில் தமிழ்-கர்நாடக மக்கள் சம அளவில் வசித்து வருகிறார்கள். இங்கு கன்னட குழந்தைகளுக்கு என கன்னடப் பள்ளிகளும் உள்ளன. இந்த கன்னடப் பள்ளிகளுக்கு இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி விடுமுறை விடப்பட்டாலும் அங்கு பாதுகாப்பு கருதி போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் தாளவாடி பஸ் நிலையம் மற்றும் கடைகள், நிறுவனம் முன்பும் தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை திறந்து விட வேணடும் என உத்தரவிட்டது. இப்போது மேலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டதும் வரவேற்கத்தக்கது.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பெங்களூரு, மாண்டியா, மைசூரு போன்ற இடங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. 45 தமிழக பஸ்களும் 100-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதம் அடைந்தவர்களுக்கும் மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழக முதல்- அமைச்சர் அணுகி நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும். முதல்- அமைச்சர் வழக்கம் போல் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டு அமைதியாக உள்ளார்.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் சர்வ கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். உடனடியாக அனைத்து கட்சிகளையும் அழைக்க முடியவில்லை என்றால் பெரிய கட்சிகளையாவது உடனடியாக அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளை பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். கர்நாடகாவில் வன்முறை நடப்பதால் தமிழ்நாட்டிலும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்காமல் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்.

    காவிரி நீர் பிரச்சனைக்கு தமிழக முதல்வரின் மெத்தன போக்கே காரணம் ஆகும். இந்த பிரச்சனை தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுவிடம் ஏன் முறையிடவில்லை? என சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது. தமிழக விவசாயிகள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை.

    காவிரி அணையில் 56 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் போது அதில் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட்டால் கர்நாடகாவுக்கு என்ன கஷ்டம்? என்று தெரியவில்லை.

    இதுவரை தமிழக முதல்-அமைச்சர்களாக இருந்தவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அணுகுமுறையே காரணம்

    சிறுவாணி அணையில் கேரளா அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன். அதை தலைமை ஏற்றுக்கொண்டு விட்டது.

    தமிழக காங்கிரசில் இப்போது வெற்றிடம் ஏதும் இல்லை. அனைத்து மாவட்ட தலைவர்களும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். போட்டியிடுவது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக விவசாய கூட்டமைப்பு சார்பில் நடக்கும் முழு அடைப்புக்கு எங்களது (காங்கிரஸ்) ஆதரவு உண்டு. காவிரியில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தேவையானால் அணை கட்டுவதை எதிர்த்து காங்கிரஸ் போராடும்.

    முதல்வர் ஜெயலலிதா என் மீது 9 வழக்குகள் போட்டுள்ளார். இளைஞர் காங்கிரஸ் சார்பிலும் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்யான குற்றசாட்டுக்காக என் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.

    இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
    கொடுமுடியில் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    கொடுமுடி:

    கொடுமுடி கோவிலுக்கு நேற்று 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாமி கும்பிட வந்தார். அப்போது அவர் கோவிலின் வெளியே உள்ள வளாகத்தில் திடீர் என்று சுருண்டு விழுந்தார்.

    உடனே அவரை கரூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது பெயர் செல்வம் என்பதும் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மற்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம் அருகே ஆசிரியர் வீட்டில் ரூ. 35 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 64). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ஜோஸ்பின் மேரி (60). இவர்களுக்கு கிறிஸ்டோபர் (30) என்ற மகனும் ரோஸ்லின் என்ற மகளும் உள்ளனர்.

    கிறிஸ்டோபர் அமெரிக்காவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறையில் வந்திருந்த இவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். இவரை வழி அனுப்புவதற்காக தந்தை ஜோசப், தாயார் ஜோஸ்பின் மேரி மற்றும் தங்கை ரோஸ்லின் ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றனர்.

    அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று உள்ளனர். இதன்பிறகு அங்கு பீரோவில் இருந்த 65 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் சத்தியமங்கலம் துணை சூப்பிரண்டு மோகன், ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 பேர் கொண்ட போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது, இவர்கள் திருப்பூர், கோவை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தபால் நிலைய வீதியில் நடந்து சென்ற வியாபாரியிடம் ரூ.5¾ லட்சம்பணம் கொள்ளை யடிக்கப்பட்டது.

    இந்த குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இப்போது ஆசிரியர் வீட்டில் ரூ. 35 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×