என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி நீர் பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை ஜெயலலிதா உடனடியாக கூட்ட வேண்டும்- இளங்கோவன் பேட்டி
    X

    காவிரி நீர் பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை ஜெயலலிதா உடனடியாக கூட்ட வேண்டும்- இளங்கோவன் பேட்டி

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை திறந்து விட வேணடும் என உத்தரவிட்டது. இப்போது மேலும் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டதும் வரவேற்கத்தக்கது.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பெங்களூரு, மாண்டியா, மைசூரு போன்ற இடங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. 45 தமிழக பஸ்களும் 100-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.

    இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதம் அடைந்தவர்களுக்கும் மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழக முதல்- அமைச்சர் அணுகி நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும். முதல்- அமைச்சர் வழக்கம் போல் பிரதமருக்கு கடிதம் எழுதி விட்டு அமைதியாக உள்ளார்.

    காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் சர்வ கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும். உடனடியாக அனைத்து கட்சிகளையும் அழைக்க முடியவில்லை என்றால் பெரிய கட்சிகளையாவது உடனடியாக அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் கருத்துகளை பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். கர்நாடகாவில் வன்முறை நடப்பதால் தமிழ்நாட்டிலும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்காமல் தமிழ் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்.

    காவிரி நீர் பிரச்சனைக்கு தமிழக முதல்வரின் மெத்தன போக்கே காரணம் ஆகும். இந்த பிரச்சனை தொடர்பாக காவிரி கண்காணிப்பு குழுவிடம் ஏன் முறையிடவில்லை? என சுப்ரீம் கோர்ட்டு கேட்டுள்ளது. தமிழக விவசாயிகள் மீது ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை.

    காவிரி அணையில் 56 டி.எம்.சி. தண்ணீர் இருக்கும் போது அதில் 15 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட்டால் கர்நாடகாவுக்கு என்ன கஷ்டம்? என்று தெரியவில்லை.

    இதுவரை தமிழக முதல்-அமைச்சர்களாக இருந்தவர்களின் அணுகுமுறையால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைத்து வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அணுகுமுறையே காரணம்

    சிறுவாணி அணையில் கேரளா அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்து விட்டேன். அதை தலைமை ஏற்றுக்கொண்டு விட்டது.

    தமிழக காங்கிரசில் இப்போது வெற்றிடம் ஏதும் இல்லை. அனைத்து மாவட்ட தலைவர்களும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். போட்டியிடுவது குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக விவசாய கூட்டமைப்பு சார்பில் நடக்கும் முழு அடைப்புக்கு எங்களது (காங்கிரஸ்) ஆதரவு உண்டு. காவிரியில் கர்நாடகா அரசு புதிய அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். தேவையானால் அணை கட்டுவதை எதிர்த்து காங்கிரஸ் போராடும்.

    முதல்வர் ஜெயலலிதா என் மீது 9 வழக்குகள் போட்டுள்ளார். இளைஞர் காங்கிரஸ் சார்பிலும் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்யான குற்றசாட்டுக்காக என் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன்.

    இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
    Next Story
    ×