என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தம்
    X

    சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தம்

    காவிரி நீர் பிரச்சினையால் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் உச்சக்கட்ட வன்முறையில் ஈடுபட்டு வருவதால் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
    சத்தியமங்கலம்:

    காவிரி நீர் பிரச்சினையால் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் உச்சக்கட்ட வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று மாலை கன்னட அமைப்பினர் நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதலுக்கு 40-க்கும் மேற்பட்ட பஸ்கள் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இந்த பயங்கர வன்முறையால் பெங்களூர் கலவரப் பூமியாக மாறி உள்ளது. இந்த கலவரம் மற்ற மாவட்டங்களான மைசூரு, மாண்டியா, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டங்களுக்கும் பரவி உள்ளது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கன்னட வெறியர்களின் பயங்கர வன்முறை தாக்குதலால் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இன்று முதல் அடியோடு நிறுத்தப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக கர்நாடகாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் அதேபோல் கர்நாடகாவிலிருந்து இன்று எந்த வாகனங்களும் வரவில்லை.

    தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூரில் இருமாநில போலீசாரும் நேற்று மாலை முதல் மீண்டும் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த வழியாக வந்த வாகனங்கள் பாதுகாப்பு கருதி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அந்த வழியாக செல்லும் தமிழக வாகனங்கள் தாளவாடிக்கு மேல் போக வேண்டாம் என எச்சரித்து அனுப்பினர். மேலும் வெளிமாநில லாரிகள் பண்ணாரியில் நிறுத்தப்பட்டு உள்ளன.

    மற்ற வாகனங்களில் கர்நாடக எல்லையான புளிஞ்சூரில் இறக்கி விடப்பட்ட பயணிகளை தமிழக அரச பஸ் சென்று ஏற்றி தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் வருகிறது. அந்த பஸ்சிலிருந்து வரும் பயணிகள் பதட்டத்துடன் இறங்கி சென்றதை காண முடிந்தது.

    ஈரோடு மாவட்ட (தமிழக) எல்லையான தாளவாடியில் தமிழ்-கர்நாடக மக்கள் சம அளவில் வசித்து வருகிறார்கள். இங்கு கன்னட குழந்தைகளுக்கு என கன்னடப் பள்ளிகளும் உள்ளன. இந்த கன்னடப் பள்ளிகளுக்கு இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளி விடுமுறை விடப்பட்டாலும் அங்கு பாதுகாப்பு கருதி போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் தாளவாடி பஸ் நிலையம் மற்றும் கடைகள், நிறுவனம் முன்பும் தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×