என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் குளிக்கும் போது தவறிவிழுந்து வடமாநில வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண்சந்திரா பாரோ.

    இவர் ஈரோடு திண்டலில் தங்கி இருந்து கடந்த 1½ மாதமாக கட்டிட வேலை பார்த்து வந்தார். தற்போது திண்டல் லட்சுமிநகரில் நடை பெறும் கட்டிட வேலையில் செய்து கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று கிரண் சந்திராபாரோ கட்டிடத்தின் 3-வது தளத்தில் வேலை முடித்து விட்டு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது நண்பர் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார்.

    அப்போது கிரண்சந்திரா பாரோ மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கிரண்சந்திரா பாரோவை கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கிரண் சந்திராபாரோ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து அசாமில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மாசு கட்டுப்பாடு விதிகளை மீறி செயல்பட்டதாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் தோல் மற்றும் சாய தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதாகவும் இதனால் விவசாய நிலங்கள்- ஆழ் குழாய் கிணறுகள், மற்றும் குடிநீர் மாசு படுவதாகவும் புகார் கூறப்பட்டது.

    இதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் போல் மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதன்படி கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றும் தோல்- சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் செயல்பட்ட சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.

    இந்த நிலையில் மாசு கட்டுப்பாடு விதிகளை மீறி செயல்பட்டதாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டு உள்ளன.

    இது பற்றி மாசு கட்டுப் பாடு அதிகாரிகள் கூறும் போது ‘‘கழிவு நீரை சுத்திகாக்காமல் வெளியேற்றும் தோல்-சாயப்பட்டறைகள் குறித்து கண்காணித்து வருகிறோம். மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு மாறாக தோல் மற்றும் சாயப்பட்டறைகள் செயல்பட்டால் அந்த தொழிற்சாலைகள் மீது பார பட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினர்.

    ஈரோட்டில் குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி கனகவள்ளி (வயது20).

    சக்திவேலும், கனகவள்ளியும் இரண்டு வருடத்திற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் சக்திவேல்- கனகவள்ளிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனகவள்ளி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கினார்.

    அருகில் இருந்தவர்கள் கனகவள்ளியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கனகவள்ளியை சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கனகவள்ளி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே வாழைகள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையத்தை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 63).

    இவர் அதே பகுதியில் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழைகள் பயிரிட்டிருந்தார். தனது தோட்டத்தில் 2 போர் போட்டு இருந்தார். ஆனால் 2 போரிலும் தண்ணீர் வரவில்லை.

    தண்ணீர் இல்லாததால் பயிரிடப்பட்டு விளைந்திருந்த வாழைகள் கருக தொடங்கியது.

    இன்று மதியம் 1 மணி அளவில் தோட்டத்துக்கு வந்த சென்னிமலை கருகி இருந்த வாழை மரங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த அவரை கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோட்டில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்ட அமலாக்கப்பிரிவு உதவி இயக்குனர் கிரிதரன் சென்னிமலை பகுதியில் உள்ள விசைத்தறி கூடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது சென்னிமலை அடுத்துள்ள முகாசி பிடாரியூரில் முத்துசாமி மற்றும் மேலப்பாளையம் மாதேஸ்வரா நகரை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள டாபி ரக போர்வைகளை விசைத்தறியில் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து போர்வை ரகங்களை கைத்தறி அமலாக்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து கிரதரன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் முத்துசாமி, செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை பகுதியில் இதுபோல் ரக ஒதுக்கீடு சட்டத்திற்கு புறப்பாக விசைத்தறிகளில் அதிக அளவில் கைத்தறி போர்வை ரகங்களை திருட்டு தனமாக உற்பத்தி செய்வதால் கைத்தறி போர்வைகள் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கிறது எனவும் இது போல் ரக ஒதுக்கீட்டு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தக்கோரி ஈரோட்டில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தீபா ஆதரவாளர்களும் பங்கேற்க வேண்டும் என சத்தியபாமா எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி. அலுவலத்திற்கு திருப்பூர் எம்.பி. சத்தியபாமா தலைமையில் நிர்வாகிகள் வந்து எஸ்.பி. சிவக்குமாரிடம் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோடு கானை மாட்டு சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு கொடுத்தனர்.

    மனு கொடுத்து விட்டு வெளியே வந்த எம்.பி. சத்தியபாமா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர் செல்வம் அணியினர் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வரும் 8-ந்தேதி (புதன்கிழமை) உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோட்டில் வரும் 8-ந் தேதி காளைமாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கேட்க இன்று ஈரோடு எஸ்.பி.சிவக்குமாரை சந்தித்து அனுமதி கேட்டோம்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தீபா ஆதரவாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். உண்ணாவிரதத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோவிந்தராஜர். முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்.ரமணிதரன், கிட்டுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
    தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதி காரப்பள்ளம். இந்த ஊர் வழியாகத்தான் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் காய்ந்தும், மரங்கள் பட்டுப்போயும் உள்ளன.

    கடந்த 23-ந் தேதி தாளவாடி அருகே உள்ள தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பேடுகுழி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் எரிந்த நிலையில் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீ விபத்தால் பேடுகுழி வனப்பகுதியில் 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான அரியவகை மரங்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. இதேபோல் ஆசனூர் மலைப்பகுதியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

    இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் மீண்டும் காட்டுத்தீ திடீரென ஏற்பட்டது. பின்னர் இந்த தீ மளமளவென வனப்பகுதியின் பல்வேறு இடங்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. காரப்பள்ளத்தின் சமவெளி பகுதி கர்நாடக மாநிலத்திலும், மலைப்பகுதி தமிழ்நாட்டின் ஆசனூர் வனச்சரகத்திலும் உள்ளது.

    முதலில் சமவெளிப்பகுதியில் தீ பிடித்து உள்ளது. இதுபற்றி அறிந்ததும் கர்நாடக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் காட்டுத்தீயை அணைக்க முடியவில்லை. இதில் 250 ஏக்கர் பரப்பளவிலான சமவெளி பகுதி எரிந்து நாசம் ஆனது. மேலும் அங்கிருந்து ஆசனூர் வனப்பகுதிக்கும் தீ பரவியது.

    தொடர்ந்து 2-வது நாளாக காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் தமிழக மற்றும் கர்நாடக வனத்துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதில் ஆசனூர் வனப்பகுதியில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது. 2 மாநில வனப்பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசம் ஆனது.

    காற்றின் காரணமாக மூங்கில் மரங்கள் அசைந்து உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்ததா? அல்லது வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் பீடி குடித்துவிட்டு போட்டதில் தீப்பற்றியதா? சமூக விரோதிகள் யாராவது தீ வைத்தார்களா? என 2 மாநில வனத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இன்று காலை ஈரோடு, காசிபாளையம், விவேகானந்தர் நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் ஈரோடு-சென்னிமலை ரோட்டில் குடிநீர் வசதி கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலவி வருகிறது. இதுபோதாது என்று குடிநீர் தட்டுப்பாடும் ஆங்காங்கே தலைவிரிக்க தொடங்கி விட்டது.

    பருவமழை பொய்த்ததால் பவானிசாகர் அணை வறண்டு காணப்படுகிறது. குடிநீர் வசதி கேட்டு மக்கள் சாலை மறியல் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இன்று காலை ஈரோடு, காசிபாளையம், விவேகானந்தர் நகரை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் ஈரோடு-சென்னிமலை ரோட்டில் குடிநீர் வசதி கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:-

    நாங்கள் காசிபாளையம், விவேகானந்தர் நகரில் 200 குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக எங்கள் பகுதிமக்களுக்கு சரியாக குடிநீர் வினியோகிக்கப்பட வில்லை.

    மேலும் ஆழ்குழாய் தண்ணீரும் இல்லை. எங்களுக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. அது போதுமானதாக இல்லை. எனவே எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதிகாரிகள் அவர்களிடம் ‘‘உங்கள் பகுதியில் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தனர்.

    இதனை ஏற்று பெண்கள் சாலைமறியலை கை விட்டனர். 30 நிமிடம் நடந்த இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

    சம்பளம் உயர்த்தி வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு தொலை தொடர்பு (பி.எஸ்.என்.எல்.) ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 50 பேர் இன்று ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில் திரண்டனர்.

    அவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

    பிறகு அவர்களிடம் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தக் கூடாது. அதை மீறி ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்து அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் சாலை ரோத்தில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் கூறும் போது, ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்.லில் 450 ஊழியர்கள் 20 ஆண்களுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.5600 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த கஷ்டமாக உள்ளது.

    மத்திய அரசு ஒப்பந்த தொழிலாளர்களுக்க ஒரு நாளைக்கு ரூ.437 வழங்க புதிய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் எங்களுக்கு பழைய சம்பளம் ரூ250 மட்டுமே மீண்டும் வழங்கப்படுகிறது.

    மத்திய அரசு புது உத்தரவுப்படி சம்பளத்தை உயர்த்தி குறைந்த பட்சம் மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண் டும். இல்லை என்றால் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனர். திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோட்டில் குடிபோதையில் தூங்கிய தொழிலாளி சாவு இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, பி.பெ.அக்ர ஹாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(48). தொழிலாளி. இவரது மனைவி பாவாயி.

    வெங்கடேஷ்க்கு 6 மாதம் முன்பு நடந்த ஒரு விபத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிபழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வெங்கடேஷ் குடிபோதையில் படுத்திருந்தார். நீண்ட நேரமாகியும் எழுந்திருக்க வில்லை என்று சந்தேகம் அடைந்த அவரது மணைவி வெங்கடேசை எழுப்பி உள்ளனர்.

    அப்போது வெங்கடேஷ் பேச்சு மூச்சியின்றி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர் வெங்கடேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திண்டலில் குடும்ப தகராறில் ஆசிரியை கத்தியால் குத்திய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, திண்டல் லட்சுமி நகரை சேர்ந்தவர் தனசேகர்.கெமிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி உமாதேவி.

    உமாதேவி தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றும் தனசேகருக்கும், உமாதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி உமாதேவியை சரமாரியாக குத்தினார்.

    இதில் உமாதேவிக்கு கன்னம், வயிறு, நெஞ்சு பகுதியில் கத்திக்குத்தி விழுந்தது. அருகில் இருந்தவர்களை உமாதேவியை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தாலுகா போலீசார் தனசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே கணவர் கண்முன் விபத்தில் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆலத்து கோம்பை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35). இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பெயர் கோகிலா (29). மகன் கவுதம் (8). இவர்கள் 3 பேரும் பழனி கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். காரை தனசேகரன் ஓட்டிச் சென்றார்.

    கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

    சத்தியமங்கலம் அருகே அத்தாணி சாலையில் வந்த போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே ரோட்டோரம் ஒரு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற லாரி மீது மோதியது.

    இதில் கோகிலா கணவர் கண் எதிரே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் தனசேகரன் அவரது மகன் கவுதம் ஆகிய 2 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர். காருக்குள் இருந்தபடி இறந்து கிடந்த கோகிலா உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் கண்முன் விபத்தில் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×