என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு ரெயில் நிலையத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் பங்கேற்கிறார்.

    ஈரோடு:

    இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கிறது.

    பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டும் தடுப்பணையை உடனே நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உச்ச நீதிமன்ற மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடக்கிறது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாக்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்டு பலியான தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு பொதுமக்கள் கண் கலங்கினர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரோட்டோரம் அதிக அளவில் குரங்குகள் நடமாட்டம் உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் செல்வர்கள் குரங்குகளுக்கு பொறி, பழம், பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வீசுகின்றனர்.

    இந்த உணவு பொருட்களை ரோட்டில் பாய்ந்து குரங்குகள் எடுக்கும் போது, அந்த வழியாக வேகமாக வரும் மற்ற வாகனங்கள் மோதி குரங்குகள் உயிரிழந்து வரும் அவலமும் தொடர்கதையாக உள்ளது.

    தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்லும் வழியில் எலந்தூர் பகுதியில் வாகன ஓட்டிகளிடம் தின்பண்டம் வாங்க ரோட்டை கடந்த ஒரு குரங்கு, மற்றொரு வாகனத்தில் மோதி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

    இதைகண்ட அந்த குரங்கின் குட்டி குரங்கு, தாய்குரங்கை எழுப்ப முயற்சித்தது. அது இறந்ததை கண்டு அந்த குட்டி குரங்கு சுற்றி...சுற்றி வந்து பிரிய மனமில்லாமல் தவித்தது.

    மலர் தூவி குரங்கை நல்லடக்கம் செய்த மக்கள்.

    இதைகண்ட அப்பகுதி மக்கள் மனவேதனை அடைந்தனர். பலர் இறந்த தாய் குரங்குக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அங்கு கூட்டம் அதிகளவில் கூடியதால், தகவல் அறிந்த கர்நாடக மாநில சாம்ராஜ் நகர் போலீசார் விரைந்து வந்தனர். இறந்து கிடந்த தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு அவர்களும் கண் கலங்கினர்.

    பிறகு ஒரு வழியாக தாய் குரங்கை குட்டி குரங்கிடமிருந்து மீட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
    2 மாதம் முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்? என ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருநாவுக்கரசர் கேள்வியெழுப்பியுள்ளார்.
    ஈரோடு:

    திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஈரோடு வந்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக மீனவரை இலங்கை கடற்படை சுட்டு கொன்றது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பலியான தமிழக மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும்.

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் எரிவாயு திட்டத்தை கண்டித்து பொதுமக்கள் இளைஞர்கள் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    வார்தா புயல் சேதம் தற்போதுள்ள வறட்சி காரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.85 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டிருந்தது. ஆனால் மத்திய அரசோ இதுவரை ரூ.1900 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கும் செயல் ஆகும்.

    மத்திய அரசின் ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாது என்ற அறிவிப்பால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் அவலம் உள்ளது. மக்களுக்காகத்தான் திட்டம் என்று இருக்க வேண்டுமே தவிர திட்டத்துக்காக மக்கள் இருக்க கூடாது. வேலை வாய்ப்பை அரசு பெருக்க வேண்டும்.

    மத்தியில் பா.ஜ.க. அரசு வந்து 3 ஆண்டு ஆகிறது. இந்த 3 ஆண்டில் அவர்கள் என்ன செய்தார்கள்? வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? கிடையாது. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்ற வாக்குறுதி கொடுத்தார்களே... அது என்னாச்சி?


    ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் தான் முதல் அமைச்சராக இருந்தார். கிட்டத்தட்ட 2 மாதமாக அவர் முதல்வராக இருந்திருக்கிறார். அப்போது ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை வைத்திருக்கலாம் அல்லவா? அதை விட்டு இப்போது பதவி போன பிறகு நீதி விசாரணை கேட்கிறார். அப்போது அவர் வாய் திறந்திருக்கலாம் அல்லவா?

    ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் மூலம் தமிழ்நாட்டில் கால் ஊன்ற பா.ஜனதா முயன்றது. இப்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மூலம் கால் ஊன்ற பா.ஜனதா முயற்சிக்கிறது.

    அடுத்த வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது. அப்போது தி.மு.க.வினர் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறி உள்ளனர். எங்களது (காங்கிரசின்) நிலைப்பாட்டை சட்டசபை கூடும்போது அறிவிப்போம்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
    தொட்டிபாளையம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    பவானி:

    வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது42). தேங்காய் வியாபாரி. ஈரோடு திண்டல் புதுக்காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்(40). சாயப்பட்டறை தொழிலாளி.

    சாமிநாதன் சித்தோடு சென்று விட்டு சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    இதே போன்று செல்வராஜ் நசியனூரில் இருந்து சித்தோடுக்கு தனது மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தொட்டிபாளையம் அருகே வந்த போது 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதியது.

    இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சாமிநாதன் உயிருக்காக போராடி கொண்டு இருந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சாமிநாதனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மேலும் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாமிநாதனும் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.
    ஈரோடு:

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 355 பள்ளிகளை சேர்ந்த 27 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் இன்று எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினர்.

    பரீட்சை தொடங்குவதற்கு முன் மாணவ- மாணவிகள் கோவில்களில் சென்று தேர்வு எழுத உள்ள பேனாக்களை சாமிமுன் வைத்து வழிபட்டனர். பிறகு தங்களது பெற்றோர் காலில் விழுந்து ஆசிபெற்றனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். அப்போது தேவையான அடிப்படைவசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என கேட்டறிந்தார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் பிரபாகர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் உடனிருந் தனர்.

    தேர்வுமையத்தை பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் 3371 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 33 ஆயிரத்து 908 மாணவ-மாணவிகள் பரீட்சை எழுதி வருகிறார்கள். தமிழ் அல்லாத பிற மொழி பாடங்களில் 7327 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

    சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறுவது தவறு. அரசியல் லாபத்துக்காக இவ்வாறு பொய்யான தகவலை கூறுகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் 355 பள்ளிகளை சேர்ந்த 27208 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதுகிறார்கள். 89 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்வை 176 பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    சென்னிமலையில் நேற்று ஒரு மணிநேரம் பெய்த மழை பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெயில் இருந்தது. பகல் நேரத்தில் வெளியில் செல்ல பொதுமக்கள் அஞ்சினர். பல இடங்களில் மரங்கள் கூட நீர் இன்றி வாடியது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரம் பெய்தது.

    இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து மழை பெய்தததை மகிழ்ச்சியுடன் பரிமாறி கொண்டனர். தற்போதுள்ள கடும் வறட்சிக்கு இந்த மழை பற்றாக்குறை தான்.

    தொடர்ந்து மழை பெய்யுமா? என மக்கள் எதிர் பார்ப்புடன் உள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
    ஈரோடு:

    பருவ மழை பொய்த்ததால் பவானிசாகர் நீர் மட்டம் மிகவும் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே 40 அடியிலேயே தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி தண்ணீரே வந்தது.

    ‘இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. போகப்...போக குடிநீர் பிரச்சனையும் சூழ்நிலை உள்ளது.

    இதன் காரணமாக மழை பெய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமமக்கள் கோவில்களில் நூதனமுறையில் விசே‌ஷ பூஜைகள் செய்து வருகிறார்கள். மசூதிகளிலும் விசே‌ஷ தொழுகை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.

    இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. அணைகளிலும் அதிக அளவில் தண்ணீர் வந்தது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து உள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 40.40அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வருகிறது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்துமழை பெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் . இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

    கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது இன்று நிறுத்தப்பட்டு உள்ளது.
    ஈரோட்டில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் நகைக்கடை அதிபர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த வெள்ளோடு அருகே உள்ள புங்கம்பாடி காவோ சிட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவரது மனைவி தனலட்சுமி (28).இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

    கார்த்திக் ஈரோடு பிரப் ரோட்டில் நகை கடை வைத்து நடத்தி வந்தார். தனலட்சுமி ஈரோட்டில் சிக்கன் சென்டர் நடத்தி வந்தார்.

    கார்த்திக் நடத்தி வந்த நகை கடையில் சரியாக வியாபாரம் ஆகாமல் நஷ்டமானதாக கூறப்படுகிறது. மேலும் கடன் பிரச்சனையும் ஏற்பட்டது.

    இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் கார்த்திக் நேற்று நகை கடையில் வியாபாரம் முடிந்து வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி தகவல் கிடைத்தவுடன் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அம்மாபேட்டை பகுதியில் 3 மணி நேரம் கொட்டிய பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் சில இடங்களில் இதமான மற்றும் கனமான மழை கொட்டியது.

    அம்மாபேட்டையில் நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென மழை பெய்தது. லேசாக பெய்த இந்த மழை போக போக இடி-மின்னலுடன் பலமாக கொட்டியது. நள்ளிரவு 12.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 2.30 மணி வரை பெய்தது.

    மேலும் தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் பெய்யத் தொடங்கிய மழை 4.30 மணி வரை பெய்தது. மொத்தம் 3 மணி பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ரோட்டின் இரு புறமும் அருவி போல் தண்ணீர் பாய்ந்து ஓடியது. வயல் பகுதி முழுவதும் தண்ணீர் நிரம்பியது.

    அம்மாபேட்டை, நெரிஞ்சி பேட்டை, சிங்கம்பேட்டை, சித்தார், காடப்ப நல்லூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பெய்த இந்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மாபேட்டை பகுதியில் மட்டும் ஒரே நாள் இரவில் 162 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மழை குறித்து அம்மாபேட்டை பகுதி மக்கள் கூறும்போது, ‘‘ஒரே நாளில் எங்கள் மனதை இந்த பலத்த மழை குளிர வைத்துவிட்டது’’ என்று கூறினர்.

    இடி-மின்னலுடன் 3 மணி நேரம் பெய்த இந்த மழையால் அம்மாபேட்டை பகுதியில் மின்சாரம் தடைபட்டது. நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு தடைபட்ட மின்சாரம் இன்று காலை 9 மணி வரை வரவில்லை. இதனால் மக்கள் தூங்காமல் தவித்தனர். எனினும் பலத்த மழையால் அதை மறந்தனர்.

    மேலும் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் 5 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பெரும்பள்ளம் அணை, ஓலப்பாளையம் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் நேற்று மாலை மற்றும் இரவு பெய்த திடீர் கோடை மழையால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் திடீரென மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தது. ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

    அதே சமயம் வனப்பகுதிகளான சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி மற்றும் கடம்பூர் வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது.

    வனவிலங்குகளுக்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு பெய்த பலத்த மழையால் காட்டுக்குள் தண்ணீர் அருவி போல் பெருக்கெடுத்து ஓடியது.

    சத்தியமங்கலம் மற்றும் டி.என்.பாளையம் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருந்தது. இந்த தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தி அணைத்தாலும் தொடர்ந்து தீ எரிந்து கொண்டேதான் இருந்தது.

    நேற்று மாலை மற்றும் இரவு பெய்த திடீர் கோடை மழையால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிடித்து எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    சுமார் ஒருமணி நேரம் பெய்த இந்த பலத்த மழையால் ஈரோடு மாவட்ட வனப்பகுதி ‘ஜிலிர்’ என குளிர்ச்சியாக காணப்பட்டது.

    மொடக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர், மேட்டு பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் குப்பாள்(வயது60).

    சம்பவத்தன்று குப்பாள் ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    மேட்டு பாளையம் ஈரோடு-முத்தூர் ரோடு அருகே வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குப்பாள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசபட்ட குப்பாள் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்காக போராடினார்.அந்த வழியாக சென்றவர்கள் குப்பாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி குப்பாள் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் காட்டில் வனவிலங்குகளுக்கு தொட்டி கட்டி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வனவிலங்குகளும் அந்த தண்ணீரை பருகி தாகத்தை தணித்து வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்ட முழுவதும் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் எல்லாம் கருகி போய்விட்டன. குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    ஈரோடு மாவடட் சத்தியமங்கலம் வனப் பகுதியையும் வறட்சி விட்டு வைக்கவில்லை. கோடையின் சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து போய் கிடக்கிது. மரங்கள் செடி கொடிகள் எல்லாம் பச்சையம் இழந்து கருகி விட்டன.

    வனப்பகுதிக்குள் தண்ணீர் எதுவும் இல்லாததால் வனவிலங்குகள் தண்ணீர் கிடைக்காமல் காட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது.

    சத்தியமங்கலம் வனப் பகுதிகளான ஆசனூர், தலமலை, திம்பம், கேர்மாளம், கோட்டாடை, மாவநத்தம், ராமரணை ஆகிய வனப்பகுதிகளில் யானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய்கள், மான்கள் என ஆயிரக்கணக்கான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதிக்குள் தண்ணீர் இல்லாததால் இவை தண்ணீர் இன்றி தவித்தன.

    மேலும் காட்டில் உள்ள வனக்குட்டையில் உள்ள தண்ணீரும் வற்றி குறைந்த அளவே புழு..பூச்சியுடன் உள்ளது.

    இதனால் அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் விலங்குகளுக்கு நோய் ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது.

    இதையொட்டி வன விலங்குகளுக்கு தண்ணீர் தாகத்தை தணிக்க சத்தயமங்கலம் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் வனப்பகுதி உள்ளே வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து அதில் நல்ல தண்ணீரை நிரப்பி வைத்து உள்ளனர்.

    வனவிலங்குகளும் அந்த தண்ணீரை பருகி தாகத்தை தணித்து வருகிறது. தொட்டிகளில் தண்ணீர் காலியானதும் மீண்டும் ஊற்றி நிரப்பி வருகிறார்கள்.

    ×