என் மலர்
திண்டுக்கல்
- மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் உருவாகும், குடகனாறு, திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி அணை வழியாக செல்கிறது.
- குடகனாறு தடுப்பணையில் சுற்று வட்டார பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்து குளித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மலை தொடர்ந்து பெய்து வருவதால், நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் நேர்த்தேக்கங்களில் மழை நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கனிசமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரத்தில் உருவாகும், குடகனாறு, திண்டுக்கல், தாடிக்கொம்பு, வேடசந்தூர், அழகாபுரி அணை வழியாக செல்கிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன் கோட்டை தடுப்பணையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திண்டுக்கல்லில் குற்றாலம் போல் காட்சி அளித்த குடகனாறு தடுப்பணையில் சுற்று வட்டார பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்து குளித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- கார் நிலைதடுமாறி அருகே இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.
- காயமடைந்த 3 பேரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பழனி:
திருச்சி காஜாமலை தெருவைச் சேர்ந்த நண்பர்கள் 5 பேர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கேரள மாநிலம் கொச்சினுக்கு காரில் சுற்றுலா சென்றனர். தங்களது பயணத்தை முடித்து விட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி-வேலூர் 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டு இருந்தது. திடீரென எதிர்பாராதவிதமாக காரின் பின் பக்க டயர் வெடித்தது.
இதில் கார் நிலைதடுமாறி அருகே இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில் காரின் பின் பக்கம் அமர்ந்திருந்த திருச்சி காஜாமலை 2-வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கலைச்செல்வன் (வயது 27), திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் கோபிநாதன் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் வந்த அமீர்பாட்ஷா (26), அகமது அப்துல்லா (28), ஜோயல் (27) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் அங்கு வந்த போலீசார் காயமடைந்த 3 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் உயிரிழந்த 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- தற்போது கருங்குளம், நடுகுளம் நிரம்பி புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து மறுகால் பாய்கிறது.
- கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும்.
ஆத்தூர்:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், கன்னிமார் ஓடை பகுதியில் பெய்யும் மழை ராஜவாய்க்கால் வழியாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருகிறது. திண்டுக்கல் மாவட்டதின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதி பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
மேலும் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டிக்கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் வெட்டப்பட்டது. ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து செம்பட்டி வரும் தண்ணீர் 3 கண்மாய்களிலும் தேக்கி வைக்கப்படுகிறது.
தற்போது கருங்குளம், நடுகுளம் நிரம்பி புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து மறுகால் பாய்கிறது. இந்த காட்சி ரம்யமாக உள்ளது. அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆபத்தை உணராமல் புல்வெட்டி கண்மாயில் குளித்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும். அவர்களும் இங்கு நீராடி செல்வார்கள். இந்த நிலையில் சிலர் வாகனங்கள் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டுவதால் தண்ணீர் மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் இங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,
பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண் சிசுக்களை பாதுகாப்பதற்காக கருவில் இருக்கும் பெண் சிசுக்களை பாதுகாத்தல், பிறந்த பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.
பெண் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் ஜீவசிந்து, தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- குதிரையாறு அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த காட்சி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதியில் பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு ஆகிய 3 அணைகள் உள்ளன. கொடைக்கானல் மற்றும் அதன் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த அணைகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
தற்போது கொடைக்கானலில் பெய்துவரும் கனமழை காரணமாக வரதமாநதி அணை ஏற்கனவே முழு ெகாள்ளளவை எட்டி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்தும் கடந்த வாரம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 70 அடி உயரமுள்ள குதிரையாறு அணையில் 60 அடி வரை தண்ணீர் உள்ளது.
தற்போது குதிரையாறு அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாயை துரத்திக் கவ்வி பிடிப்பது போன்ற வீடியோ அதில் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அணைப்பகுதியை ஒட்டிய இடங்களில் யானை, மான், சிறுத்தை போன்ற பல்வேறு விலங்குகள் உள்ளன. பெரும்பாலும் இவை வனப்பகுதியை விட்டு வெளியே வராது என்ற போதிலும் மக்கள் நடமாடும் பகுதியில் சிறுத்தை திரிவதால் இதுகுறித்து வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கொழுமம் வனச்சரக அலுவலர் செந்தில் தெரிவிக்கையில்,
அணையை ஒட்டியுள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது போன்ற வீடியோ உண்மையானதுதான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ வெளியானது. அதனை வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளோம். பொதுமக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் இங்கு வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடந்ததால் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
- இன்று காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிரு ந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலைய சாலையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக காம்ப்ளக்ஸ் உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் பூட்டிக்கிடந்தன. இதனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லை என தெரிந்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஆடிட்டர் அலுவ லகம்,போட்டோ ஸ்டூடியோ மற்றும் கணினி மையத்தில் பூட்டை உடைத்தனர்.
இன்று காலை கடையை திறக்கச் சென்ற ஊழியர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டிரு ந்ததை பார்த்து அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், ஸ்டூடியோவில் இருந்து 2 காமிராக்கள், ஆடிட்டர் அலுவலகத்தில் இருந்து 1 செல்போன், கணினி மையத்திலிருந்து மடிக்கணினி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த காம்ப்ளக்சில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளைக் கொண்டு கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கூலித் தொழிலாளியும், அவரது நண்பரும் சின்னச்சாமி என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர்.
- அப்போது சின்னச்சாமியும் அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மணி மகன் ராஜேஷ்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. இவரும் அவரது நண்பரான பாண்டியும் சின்னச்சாமி என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சின்னச்சாமியும் அங்கு மது குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதனிடையே ராஜேஷ்குமார் தரப்பினரு க்கும் சின்னச்சாமி தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ராஜேஷ்கு மாரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து விலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷர்மிளா மோதலில் ஈடுபட்ட சின்னச்சாமி, கவுரிமணி, கருப்புச்சாமி, பேச்சியம்மாள் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
சின்னச்சாமியை கைது செய்தனர். இதனிடையே காயமடைந்த ராஜேஷ்குமார் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
- தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
- இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளான வடமதுரை, பாடியூர், குளத்தூர், எரியோடு, வேடசந்தூர் ஆகிய பல்வேறு கிராமங்களில் நாட்டு வகை மற்றும் ப்ளூ கத்தரிக்காய் சாகுபடி அதிகளவு செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கள் திண்டுக்கல் உழவர் சந்தை மற்றும் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.40க்கு விற்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் கத்தரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்துள்ளது. திண்டுக்கல் உழவர் சந்தையில் வழக்கத்தைவிட பாதியாக கத்தரிக்காய் வந்துள்ளது. இன்று 250 கிலோ மட்டுமே வரத்து வந்ததால் கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்டது.
காந்தி மார்க்கெட்டிலும் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ரூ.90 வரை விற்கப்படுகிறது. சாம்பாருக்கு பயன்படுத்த ப்படும் கத்தரிக்காய் ரூ.100ஐ நெருங்கி வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமையலில் கத்தரிக்காயை குறைத்து மற்ற காய்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.
தொடர் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனையாகும் என்று வியாபாரிகள் தெரி வித்தனர்.
- பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார்.
- போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
சென்னை வில்லிவாக்கம், என்.எம்.டி.ஹெச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்த இவர் பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மேலும் இங்கிருந்தபடியே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறை கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மகன் ஜேக்கப் (வயது 30). இவர் சென்னை சுவேதா என்ஜினீயரிங் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானல் செல்வதாக தனது வீட்டில் கூறி விட்டு சென்றார். திண்டுக்கல் வந்த ஜேக்கப் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.
இன்று அவரது அறை கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் ஜேக்கப் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார்.
- அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை புதூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்து 10 நாட்களுக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
- இன்று காலை 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்காமல் கால தாமதம் செய்து 10 நாட்களுக்கு பிறகே சம்பளம் வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று காலை 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் அவர்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பழனியில் கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் வருகை அதிகரிப்பின் காரணமாகவும், தீபாவளி பண்டிகையின் போது வெடித்த பட்டாசு குப்பைகள் அதிக அளவில் தேங்கி சுகாதார சீர்கேடான நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடாமல் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சுகாதார பணிகளில் தேக்கம் ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாகவே பழனியில் குப்பைகள் முறையாக அள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். நகரில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணத்தால் குப்பைகள் தேக்கமடைந்து காணப்பட்டால் பல்வேறு நோய்கள் உண்டாகும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே கவுன்சிலர் ஜனத்துல்பிரதோஷ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதே போல மற்ற கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






