என் மலர்
உள்ளூர் செய்திகள்

புல்வெட்டி கண்மாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்களை படத்தில் காணலாம்.
தொடர் மழையால் நிரம்பியது புல்வெட்டி கண்மாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்
- தற்போது கருங்குளம், நடுகுளம் நிரம்பி புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து மறுகால் பாய்கிறது.
- கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும்.
ஆத்தூர்:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம், கன்னிமார் ஓடை பகுதியில் பெய்யும் மழை ராஜவாய்க்கால் வழியாக ஆத்தூர் காமராஜர் அணைக்கு வருகிறது. திண்டுக்கல் மாவட்டதின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதி பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
மேலும் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க கருங்குளம், நடுக்குளம், புல்வெட்டிக்கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் வெட்டப்பட்டது. ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து செம்பட்டி வரும் தண்ணீர் 3 கண்மாய்களிலும் தேக்கி வைக்கப்படுகிறது.
தற்போது கருங்குளம், நடுகுளம் நிரம்பி புல்வெட்டி கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து மறுகால் பாய்கிறது. இந்த காட்சி ரம்யமாக உள்ளது. அதிக அளவு தண்ணீர் வருவதால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆபத்தை உணராமல் புல்வெட்டி கண்மாயில் குளித்து வருகின்றனர்.
கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும். அவர்களும் இங்கு நீராடி செல்வார்கள். இந்த நிலையில் சிலர் வாகனங்கள் மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டுவதால் தண்ணீர் மாசு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் இங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






