என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பென்னாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் எள்ளு சாகுபடி செய்துள்ளனர்.
    • தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விற்பனைக்கு எள்ளு வரத்தும் அதிகரித்துள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள்ளு ஏலம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50 எள்ளு மூட்டைளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர் வீரன், உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 9 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றிற்கு ரூ.122-ம், குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.115-ம் மற்றும் சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.117 என ஏலம் நடைபெற்றது. மொத்தமாக 1515 கிலோ எடையுள்ள எள்ளு ரூ. 1,77,880-க்கு ஏலம் போனது. இதில் விவசாயிகளுக்கு உரிய தொகை உடனடியாக வியாபாரிகளிடமிருந்து பெற்று வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக தருமபுரி விற்பனைக்குழு செயலாளர் ரவி தெரிவித்துள்ளதாவது:-

    பென்னாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஏராளமான மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் எள்ளு சாகுபடி செய்துள்ளனர்.

    தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் விற்பனைக்கு எள்ளு வரத்தும் அதிகரித்துள்ளது.

    இதனால் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் எள்ளு ஏலம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் புதன் கிழமைகளில் நடைபெறும் ஏலத்தில் விவசாயிகள் பங்கேற்று நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.
    • கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் 50% மானியத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் (250 கோழிகள், அலகு) அமைக்கும் திட்டத்தின்கீழ் மூன்று அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் பயனாளியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50% மானியம் ரூ.1.50.625- மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50% பங்களிப்பு தொகை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதராங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும்.

    பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை கட்ட மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்கும் வகையில் குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள். மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமையும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 30% ஒதுக்கீடும் வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.

    விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா - அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் - வங்கி கடன் ஒப்புதல் விவரம்) மூன்று வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பித்தினை அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகங்களில் 28.06.2023 க்குள் சமர்ப்பித்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கால்நடை பராமரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும் அரூர் ஆகியவற்றை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளார்கள்.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது43). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (39).

    இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், நாகரத்தினம் என்ற மகளும் உள்ளனர். கோவிந்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. குறிப்பாக, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த கோவிந்தன் மனைவி மாமாளிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாதம்மாள், அடுப்பூதும் இரும்பு குழாயால் கணவனின் தலை மீது அடித்துள்ளார். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தோப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்தபேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது போலீசாரிடம் மாதம்மாள் கூறினார் எனது கணவர் கோவிந்தன் தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்ததால் அவரை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்தேன். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாளை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • தருமபுரி நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.
    • வணிக வளாகத்தில் உள்ள 25 கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சியின் வாயிலாக முதல்-அமைச்சர் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சாந்தி குத்துவிளக்கேற்றி வைத்து, கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் வழங்கினார்.

    அரியலூர், திருப்பூர் மற்றும் புதிய மாவட்டங்கள் நீங்கலாக 29 மாவட்டங்களில் பூமாலை வணிக வளாகங்கள் செயல்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி இருந்த இவ்வளாகங்களை சீரமைக்கும் பொருட்டு 29 வணிக வளாகங்களில் பெரம்பலூர் மாவட்ட வணிக வளாகம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதாலும், நாகப்பட்டினம் மாவட்ட பூமாலை வணிக வளாகம் முழுவதுமாக சேதமடைந்ததாலும், முதற்கட்டமாக இவற்றில் 26 மாவட்ட அளவிலான பூமாலை வணிக வளாகங்களை புனரமைத்து, பழுதுநீக்கம் செய்து, ஒரே மாதிரியான வண்ணம் பூசிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, 26 மாவட்ட பூமாலை வணிக வளாகங்கள் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    தருமபுரி நகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இப்புனரமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள 25 கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இக்கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், நகர்மன்றத் தலைவர் லட்சுமி, மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹி முகமது நசீர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே இ.கே.புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், மாரியம்மன் கோவில், பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது,

    இக்கோவில் கும்பிஷேக விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

    கடந்த 27-ம் தேதி தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது, பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க, தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்குமேல் 10.30 மணிக்கு விநாயகர், மாரியம்மன் கோவில் விமான கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை புரோகிதர்கள் நடத்தி வைத்தனர்.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்கார சேவை, மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் இ.கே.புதூர், இண்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது வானவெடி வெடித்தனர்.
    • ராஜி (வயது 72) என்பவரின் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    அருர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று மாலை அம்மனுக்கு மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது வானவெடி வெடித்தனர். அப்போது ராஜி (வயது 72) என்பவரின் வீட்டின் மீது தீப்பொறி விழுந்ததில் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

    இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் நிறுத்தப்பட்டது.

    கூரை வீடு தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
    • சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது42). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து தனியார் மருத்துவமனை நடத்தி வருவதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் அரூர் அரசு மருத்துவ அலுவலர் அருண்பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்திரசேகரன் மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது.
    • 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடைப்பெற்றது.

    செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.

    கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் நடைப்பெற்று வரும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு 24 மணி நேரத்திற்க்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    புதிதாக தமிழக அரசால் தொடங்கப்பட்ட செழிப்பு என்ற பெயரில் பசுமை உரம் தயாரிப்பிற்கு உரிமம் பெறபட்டது குறித்து பாராட்டு தெரிவிக்க ப்பட்டது.

    திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் வீடுகள் தோறும் 100 சதவீதம் குப்பைகளை பிரித்து வழங்க மன்ற உறுப்பினர்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையாய கடமையாக செய்ய வலியுறுத்தப்பட்டது.

    குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவில் முடித்து தண்ணீர் விநியோகம் செய்யவும், மத்திய மாநில நிதியை பெற்று வளர்ச்சி பணிகள் செய்யவும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெருக்களில் பழுதாகி உள்ள மின் விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

    • இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது48). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் ஆர்.எஸ்.தொட்டம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று 1,115 கிலோவாக குறைந்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு தேவை அதிகரித்ததால் நேற்று விலை அதிகரித்தது.
    • ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 586-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி, 

    தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,286 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,115 கிலோவாக குறைந்தது.

    அதே நேரத்தில் பட்டுக்கூடு தேவை அதிகரித்ததால் நேற்று விலை அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.492-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.22 அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.514-க்கும், குறைந்தபட்சமாக ரூ.310-க்கும், சராசரியாக ரூ.417.53-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்து 586-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலானதால் மேல்நிலைத் தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளது.
    • இருப்பினும் குடிநீர் தேவைக்காக இன்னும் பயன்பாட்டில் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பொ.மல்லாபுரம் 1-வது வார்டு பழைய ஒட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது.

    இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பழைய ஒட்டுப்பட்டி, புது ஒட்டுப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

    தற்போது இந்த குடிநீர் தொட்டியானது பழு தடைந்து காணப்படுகின்றது.

    தொட்டியினை தாங்கும் துாண்களில் இரண்டிலும், தொட்டியின் அடிப்பகுதியிலும் விரிசல் ஏற்பட்டு பெருமளவு சேதமுற்று காணப்படுகின்றது.

    சேதமுற்றுள்ள தொட்டியின் மூலமாகவே இதுவரை குடிநீர் ஏற்றப்பட்டு அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், வலுவில்லாத சூழலில் காணப்படும் இந்த தொட்டியானது எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் அபாயத்திலேயே உள்ளது.

    அவ்வாறு ஏதேனும் விபரீதம் நடந்தால் அருகில் உள்ள பள்ளிகட்டிடமும் அதில் பயிலும் மாணவர்களுக்கும் பெரும் ஆபத்தை உண்டாக்கிடும் வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலானதால் மேல்நிலைத் தொட்டி மிகவும் பழுதடைந்துள்ளது.

    இருப்பினும் குடிநீர் தேவைக்காக இன்னும் பயன்பாட்டில் உள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்துள்ள தொட்டியை அப்புறப்படுத்தி புதிதாக 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • இப்பேரணிக்கு மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.
    • இதனை தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் நிலையம் சார்பில் உலக போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணிக்கு மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

    பேரணியில் போதை பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும்,போதையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் ஊயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதையால் வாழ்க்கை சீரழிவு போன்ற கருத்துக்களை வலியுறுத்தியும், போதை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இப்பேரணியானது மொரப்பூர் பஸ் நிலையம், கல்லாவி பிரிவு சாலை, சந்தைமேடு, வட்டார வளர்ச்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் சென்றது.

    இப்பேரணியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்,போலீசார், ஆசிரிய,ஆசிரியைகள்,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர்கள்,அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மருதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

    ×