என் மலர்
தர்மபுரி
- விவசாய நிலங்களிலும், சாலை களிலும் தண்ணீர் தேங்கியது.
- ஓசூரில் அதிகபட்சமாக 53.1 மி.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழைக்கும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் மாலை திடீரென கனமழை பொழிய தொடங்கியது. இதில் தருமபுரி நகர் பகுதி மற்றும் இலக்கியம்பட்டி, பென்னா கரம், நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதி களில் கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களிலும், சாலை களிலும் தண்ணீர் தேங்கியது. மேலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவானது.
மேலும் மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகளும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது.
நேரம் செல்லச்செல்ல மழையின் வேகம் அதிகரித்து தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கன மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்தோடியது. மேலும், ஓசூர் பஸ் நிலையம், ஜி.ஆர்.டி.சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மழை நீரில் வாகனங்கள் தத்தளித்தவாறு ஓட்டிச் செல்லப்பட்டன. பலத்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தொடர்ந்து இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தவாறு இருந்தது. மாவட்டத்திலேயே ஓசூரில் தான் அதிகபட்ச மழை பெய்து, 53.1 மி.மீ பதிவானது குறிப்பிடத்தக்கது.
- தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்ற வர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தெரிவித்துள்ளதாவது:-
2024-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்பட உள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்கள் தாங்கள் பயின்ற செக்டா ருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப் பிக்கலாம். ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழும தொழிற்பிரிவில் பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்ற வர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம். பிற விண்ணப்பதாரர்கள் 18-9-2023 அன்று 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு, உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
SCVT திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 2019-ம் ஆண்டு முதல் சேர்க்கை செய்யப்பட்டு மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயின்று தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் மற்றும் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள். இந்த Category IV-இன் படி தனித்தேர்வராக விண்ணப் பித்து, முதன்மைத்தேர்வு இன்றி நேரடியாக அகில இந்திய தொழிற்தேர்வு அனுமதிக்கப்படுவர்.
தனித்தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்ப தாரர் அத்தொழிற்பிரிவிற்குரிய குறைந்தபட்ச கல்வித்த குதியை பெற்றிருக்க வேண்டும். தனி தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு , ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதற்கான தேர்வு கட்டணத்தை www.karuvoolam.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட சாந்தி, தெரிவித்துள்ளார்.
- ரேசன் கடை விடுமுறை நாள் என்பதால், கடை பூட்டியே கிடந்தது.
- 46 லிட்டர் பாமாயில் எண்ணை பாக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ரேசன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ஜான்சன் என்பவர் எடையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில் ரேசன் கடை விடுமுறை நாள் என்பதால், கடை பூட்டியே கிடந்தது.
இதைத்தொடர்ந்து 28-ந் தேதி காலையில் வழக்கம் போல் கடையை ஊழியர்கள் திறந்தனர். அப்போது ஊழியர்கள் ரேசன் கடையில் இருந்த பொருட்களை சரிபார்த்தபோது, அதில் 46 லிட்டர் பாமாயில் எண்ணை பாக்கெட்டுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து ஜான்சன் ரேசன் கடை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமி கொட்டாயைச் சேர்ந்த செந்தில் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
- தேக்கு மரத்தின் மீது மோதியதில் மரம் வேரோடு சாய்ந்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ரோட்டில் உள்ள பள்ளப்பட்டி பெரியசாமி கொட்டாய் செல்லும் சாலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பெரியசாமி கொட்டாயைச் சேர்ந்த செந்தில் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய லாரி சாலையின் ஓரத்தில் உள்ள தேக்கு மரத்தின் மீது மோதியதில் மரம் வேரோடு சாய்ந்தது.
இதனையடுத்து பலத்த சேதம் அடைந்த லாரியை ஜே.சி.பி உதவியுடன் மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் செந்தில் எந்த வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில் உள்ளது.
- பள்ளத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள விநாயகர் கோவில் அருகில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி முறையாக மூடப்படாத நிலையில் உள்ளது. மேலும், தற்போது சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அந்த பள்ளம் பெரிய பள்ளமாக ஏற்பட்டுள்ளது.
ஆபத்தான அந்த வளைவில் உள்ள இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றது. அந்த குழியால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு நேரங்களில் இந்த ஆபத்தான சாலையில் அதிவேகமாக வாக–னங்களில் செல்பவர்கள் காயமடைந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையும் உருவாகி வருகிறது. எனவே, இந்த சாலையை முறையாக பராமரித்து பள்ளத்தை சீர் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன்கள் செத்து துர்நாற்றம் வீசி வீசியது.
- பொது மக்களும் நோய்த் தொற்றுகளுக்கு உள்ளாகி வந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மேலும் பிடமனேரி, வி.ஜெட்டிஅள்ளி, மாந்தோப்பு, நெல்லிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி ஆகிய 2 ஏரிகள் இருந்து வருகிறது. பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
ஆண்டு தோறும் அரசுக்கு மீன் பாசி விற்பனையில் ரூ.15 லட்சத்திற்கு மேல் வருவாயை ஈட்டி தரும் இந்த ஏரி ஆகாயத்தாமரை நிறைந்து காணப்பட்டது. ஏரி மாசுபட்டு உள்ளதால் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசி வீசியது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரிக்கரையின் மீது தினமும் நடைபயிற்சி செய்து வரும் பொதுமக்கள் வயதான முதியவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மூக்கை பிடித்துக் கொண்டு முகம் சுளிக்கும் அவல நிலை ஏற்பட்டு வந்தது.
ஏரியை சுற்றி இருக்கும் பொது மக்களும் நோய்த் தொற்றுகளுக்கு உள்ளாகி அவதிபட்டு வந்தனர். இதனை சமூக ஆர்வ லர்களும் பொதுமக்களும் ஏரியில் உள்ள ஆகாயத்தா மரைகளை அகற்றி ஏரியில் கழிவுநீர் கலக்காமல் மாற்று வழியில் கால்வாய் அமைத்து அதன் வழியாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மேலும் ஏரியை தூய்மைப் படுத்தி அழகு படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செய்தி மாலைமலர் நாளிதில் வந்ததை அடுத்து 2 நாட்களாக பொக்லைன் எந்திரம் மூலம் தரையில் இருந்தவாறு ஆகாயத்தாமரையை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
- கல்லூரிச் செயலரும், சமூக பணித்துறைத் தலைவரு மான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.
- நல்வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.
தருமபுரி,
தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் சமூக பணித்துறை சார்பில் சமூகப்பணி மேற்கொள்ப வர்களுக்கான சி.பி.ஆர். முதலுதவித்திறன் மேம்பாடு குறித்த பயிலரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூக பணித்துறைத் தலைவரு மான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல் வர் ஆஞ்ச லோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
இப்பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக சமூக பணித்துறை உதவி பேராசிரியை ஜெமி பிளஸ்சி கலந்து கொண்டு, இருதய சிகிச்சை நோயாளி களுக்கு அவசர காலத்தில் வழங்கப்படும் சி.பி.ஆர். முதலுதவி பயிற்சி மற்றும் நல்வாழ்விற்குத் தேவையான அடிப்படை வாழ்வியல் முறைகள் போன்றவற்றை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொரு ளாளர் அந்தோணி பாப்பு ராஜ், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் சமூகப்பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஜோனிபால் கிருபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
சமூகப்பணி மேற்கொள் ளும் அனைவருக்கும், அவசர காலத்தில் நோயாளிகளுக்கு வழங்கப் படும் முதலுதவி மற்றும் அடிப்படை நல்வாழ்வு முறைகள் போன்றவற்றை உணர்த்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வுக் கான ஏற்பாடுகளை துறை பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.
- ஆசிரியர் பணியின் சிறப்புகளையும், ஆசிரி யர்களின் அற்பணிப்பையும் பற்றி எடுத்துக் கூறினார்கள்
- ஆசிரிய, ஆசிரியை களுக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர் .
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் கல்விக் குழுமத்தில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது .
இதில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் விழாவை தொடங்கி வைத்து ஆசிரியர் பணி யின் சிறப்புகளையும், மாணவர்களின் நல னில் ஆசிரியர்களின் அற்பணிப்பையும் பற்றி எடுத்துக் கூறினார்கள் . இதனை தொடர்ந்து ஆசிரியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .
இதில் நிர்வாக இயக்குனர் தமிழ்மணி, பவானி தமிழ்மணி ஆகியோர் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர் . மேலும் பள்ளியின் முதல்வர்கள் சாரதி, ஜான் இருதயராஜ், வெற்றிவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் குருமூர்த்தி, புவனேஷ்வரி, மணிமேகலை, பிரவீணா ஆகியோர் விழா ஏற்பாடு களை செய்தனர்.
- ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை முதல் சேர்க்கை நடைபெறகிறது.
- காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள்.
அரூர்,
அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
2023-24-ம் கல்வி–யாண்டின் முதுநிலை கலை பாடப் பிரிவுகளுக்கு அரூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலப் பாடப்பிரிவிற்கு மட்டும் நாளை (7-ந் தேதி) முதல் சேர்க்கை நடைபெறகிறது.
எனவே, இணையதள வழியே விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, இளநிலைப் பாடப் பிரிவுகளின் மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் (அசல் மற்றும் நகல்-2 பிரதிகளில்) நாளை காலை 10 மணிக்குள் கல்லூரி சேர்க்கை குழுவின் முன் ஆஜராகுமாறு கேட்டுக்–கொள்ளப்படுகிறார்கள். இதற்காக கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய வெடி மருந்துகளை தேக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.
- ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி சீரமைத்தனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர்கூடல் ஊராட்சி பகுதியில் இருந்து பங்குநத்தம் செல்லும் வழியாக வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கல் குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய வெடி மருந்துகளை தேக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.
அந்த குடோனுக்காக சாலை பகுதியில் இருந்த நீரோடைகளை மண் கொட்டி மூடி விட்டு வனப்பகுதி வழியாக சட்ட விரோதமாக மண் சாலை அமைத்து அதிக அளவில் அப்பகுதிக்கு வெடி மருந்துகள் கொண்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஊராட்சியில் எந்த அனுமதியும் பெறாமல் இந்த குடோன் செயல்படுவதாகவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் அதிவேகமாக வாகனங்கள் பயணித்து வருவதால் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி சீரமைத்தனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே இப்பகுதியில் வெடி மருந்து குடோன் இயங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அனுமதி இல்லாமல் செயல்படும் பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது வெடி விபத்தோ ஏற்பட்டால் மிகப்பெரிய சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், இதனால் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மூன்றரை வருடமாக பஞ்சாயத்து தலைவர் குப்பை கழிவுகளை கொட்டி அங்கேயே எரித்து வருகிறார்
- குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் , பாப்பிரெட்டிபட்டி அடுத்த சில்லார அள்ளி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சில்லார அள்ளி கிராமத்தில் 20 வீடுகளுக்கு முன்பு மூன்றரை வருடமாக பஞ்சாயத்து தலைவர் குப்பை கழிவுகளை கொட்டி அங்கேயே எரித்து வருகிறார். அதனால் மாசு ஏற்படுவது மட்டுமின்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்னர் அதிகாரிகளின் நடவடிக்கையால் குப்பை கழிவுகள் எரிக்கப்பட்டு, சாம்பல்கள் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
மீண்டும் மறுநாளே பஞ்சாயத்து தலைவர் அதே இடத்தில் குப்பைகளை கொட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆகையால் அராஜகத்தில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு அங்குள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார்.
- 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கருங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது47). விவசாயி. இவரது தனது குடும்பத்துடன் கடந்த 25-ந் தேதி திருப்பதிக்கு சென்றார். இதனை பயன்படுத்திய மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தாலி செயின், தாலி, தங்க காசு உள்ளிட்ட 5½ பவுன் நகையையும், ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில் திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்பி வராத நிலையில் ஆதிமூலத்தின் வீட்டின் கதவில் பூட்டு
உடைக்கப்பட்டிருந்த தகவலை அக்கம்பக்கத்தினர் ஆதிமூலத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தகவலறிந்த அவர் நேற்று ஊருக்கு திரும்பிவந்து சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளயைடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






