என் மலர்tooltip icon

    கடலூர்

    வேப்பூர் அருகே கரும்பு தோட்டத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூரைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார்.

    வழக்கம்போல் ராஜா கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது நிலத்தின் ஒரு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது போல் சத்தம் கேட்டது.

    அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு சென்று பார்த்த போது 10 அடி ஆழத்துக்கு பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த பள்ளத்துக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

    கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து அந்த பகுதியில் தகவல் பரவியது. பொது மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து திடீர் பள்ளத்தை வியப்புடன் பார்த்துச்சென்றனர்.

    இது குறித்து ராஜா கூறும்போது, “எனது தோட்டத்தில் இதற்கு முன்பு பள்ளம் ஏற்பட்டதில்லை. கடந்த மாதம் 12-ந் தேதி வேப்பூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. அதன் காரணமாக தற்போது இந்த திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.

    தகவல் அறிந்த வேப்பூர் வருவாய் ஆய்வாளர் முருகன் விரைந்து வந்து பார்வையிட்டார்.
    காவிரி பிரச்சனையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    இந்திய அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான இளைஞர் மற்றும் இளம்பெண்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து அமைக்கும் திறன் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிலக்கரி மற்றும் மின்சாரத்துறை மந்திரி பியூஸ்கோயல் பேசியதாவது:-

    என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சுரங்கப்பணி மின் உற்பத்தியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 1956-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் மின்சாரத்தை வழங்கி தனது வணிகத்தைப் பெருக்கி வருகிறது.

    இந்த நிறுவனம் 2020-ம் ஆண்டுக்குள் மகாரத்னா அந்தஸ்துபெறும். நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமரின் வழிகாட்டுதலின்படி தற்போது லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன.

    இதற்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சிறந்த உதாரணமாகும்.

    காவிரி நதிநீர் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் வழி காட்டுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு அடிப்படையில், இரு மாநில மக்களும் பயனடையும் வகையில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். அதன் மூலம் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

    காவிரி நீர் விவகாரத்தில் மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து மக்கள் பணியாற்றுவார்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.
    நெய்வேலியில் தற்கொலை செய்துகொண்ட காண்டிராக்டர் மனைவி ராஜலட்சுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரண புரம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    செல்வகுமாருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்வேலி 20-வது வட்டத்தில் உள்ள அவரது தந்தை சேரபாண்டியன் வீட்டுக்கு ராஜலட்சுமி சென்று விட்டார். அங்கேயே அவர் தங்கி இருந்தார்.

    நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு உள்ள மரத்தில் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். மரத்தின் அருகே ஒரு கடிதம் கிடந்தது.

    இது பற்றி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அந்த கடிதத்தை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ராஜலட்சுமி எழுதி இருந்தார். அதில் என் கணவர் செல்வகுமாருக்கும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் உள்ளது. அவருடன் அவர் வாழ நினைக்கிறார்.

    இதனால் எனக்கும், எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. என் கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் பெண் போலீசால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ராஜலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாலை ராஜலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடலை பெற்றுக்கொள்ளும்படி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டார்கள்.

    ராஜலட்சுமியின் சாவுக்கு காரணமான பெண் போலீஸ் மற்றும் செல்வகுமார், அவரது உறவினர்கள் ஆகியோரை கைது செய்ய வேண்டும். ராஜலட்சுமியின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுநடத்தினர். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிணத்தை வாங்க மாட்டோம் என்றனர். ராஜலட்சுமியின் உடல் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிலேயே வைக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டியில் வேட்பாளர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த பணத்தை போலீசார் கைப்பற்றி வேட்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.
    பண்ருட்டி:

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்த அருள்முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு அவர் ஆதரவாளர்களுடன் வெளியே வந்தார்.

    அப்போது அவர் சட்டைப்பையில் இருந்த 47 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் அபேஸ் செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

    இதேபோல் பேர்பெரியான்குப்பதைச் சேர்ந்த குழந்தைவேல் என்பவரும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்தார். அவரது பையில் இருந்த 23 ஆயிரம் ரூபாயையும் மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து மற்றொரு பகுதியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த போது அவரிடம் இருந்த பணத்தை திருட முயன்ற வாலிபரை அவருடன் வந்த ஆதரவாளர்கள் கையும்-களவுமாக பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த வேலு (வயது 37) என்பதும், வேட்பாளர்கள் அருள்முருகன், குழந்தை வேல் ஆகியோரிடம் பணத்தை பறித்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தை போலீசார் கைப்பற்றி வேட்பாளர்களிடம் ஒப்படைத்தனர்.
    நெய்வேலியில் காண்டிராக்டர் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில் பெண் போலீஸ் மீது பரபரப்பு புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். காண்டிராக்டர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 38). இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், ஹரிஸ் (10) என்ற மகனும் உள்ளனர். ஜனனி 10-ம் வகுப்பும், ஹரிஸ் 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

    செல்வக்குமாருக்கும் ராஜலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமி தன் பிள்ளைகளை விட்டு விட்டு நெய்வேலி புதுநகர் 20-வது வட்டத்தில் உள்ள தனது தந்தை சேரபாண்டியன் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சேரபாண்டியன் என்.எல்.சி.யில் வேலைபார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றுள்ளார். ராஜலட்சுமி தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இன்று காலை வீட்டின் முன்பு உள்ள புளியமரத்தில் ராஜலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சேரபாண்டியன் தன் மகளின் பிணத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    ராஜலட்சுமி பிணமாக தொங்கிய புளியமரத்தின் அருகில் கடிதம் கிடந்தது. அதைபோலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ராஜலட்சுமி எழுதியிருந்தார். அதில் அவர் பெண் போலீஸ் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது:-

    எனது கணவர் செல்வகுமார் என்னுடன் வாழ மறுக்கிறார். பெண் போலீஸ்காரர் ஒருவருடன் வாழ நினைக்கிறார். என்னையும் என் பிள்ளைகளையும் கொல்ல திட்டமிட்டுள்ளார். அவருக்கு துணையாக நின்ற அவருடைய உறவினர்கள் என் சாவுக்கு காரணம் என்பதை சுயநினைவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னை சிலர் அவதூறாக பேசினார்கள். எனக்கு மனஉளச்சல் ஏற்பட்டது. எனவே நான் இந்த முடிவை எடுத்தேன். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் தனது குழந்தைகள் ஜனனி, ஹரிஸ் ஆகியோருக்கு அந்த கடிதத்தில் ராஜலட்சுமி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில் உன் அப்பா(செல்வராஜ்) என்மீதும், என்குடும்பத்தார் மீதும் சொல்வதை கேட்க வேண்டாம்.

    என் அம்மா, அப்பாவை மட்டும் நம்ப வேண்டும். தாத்தா, பாட்டி சொல்வதை கேட்டு வாழ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜலட்சுமி எழுதி வைத்த கடிதம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறனர்.

    கடலூர் மண்டல அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    கடலூர் மண்டல அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தங்க ஆனந்தன், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க துணை தலைவர் பாஸ்கர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள்.

    போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், போனஸ், பஞ்சப்படி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் தொ.மு.சா., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அரசு சில்லறை மதுபான கடைகளும், அதனுடன் உள்ள மதுபான பார்களும், மனமகிழ் மன்றம் மற்றும் உரிமம் பெற்ற அனைத்து மதுபான பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

    ஆகவே டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் நாளை எல்லா மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல், மதுவிற்பனை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் பார்களில் மதுபானங்கள் விற்றாலோ அல்லது திறந்து வைத்தாலோ கடை மேற்பார்வையாளர்கள், உரிமம் தாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    பெண்ணாடம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உடல் கருகிய நிலையில் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிசிக்சை பெற்று வருகிறார்.
    பெண்ணாடம்:

    காற்று மண்டலத்தில் உருவான மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் பெண்ணாடம், விருத்தாசலம், மேல்மலையனூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கொடியரசு (வயது 19). இவர் திட்டக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலை கொடியரசு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தனர்.

    அப்போது இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீட்டு வாசலில் இருந்த மின் பெட்டி மீது இடி விழுந்தது. இதில் மின்கம்பிகள் தீப்பிடித்து எரிந்ததால் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கொடியரசு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது உடல் கருகியது.

    அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கொடியரசை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சின்ன கொசப்பள்ளம் பகுதியில் கனமழை பெய்ததால் அந்த பகுதியில் 5 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மேலும், அந்தபகுதியில் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்களும் சேதமடைந்தன.
    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் அதிகாரி மயங்கி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து வருபவர் மோகனாம்பாள் (வயது 47). இவர் நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அவரிடம் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

    அப்போது திடீரென மோகனாம்பாள் மயங்கி விழுந்தார். உடனே அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் அதிகாரி மயங்கி விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியும் சிறிது நேரம் தடைபட்டது.
    கடலூர் அருகே பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் தியாகவள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் அஞ்சுகா(வயது 18). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    சம்பவத்தன்று அஞ்சுகா கல்லூரி முடிந்து வீட்டுக்கு தாமதமாக வந்தார். இதுகுறித்து அவரது பெற்றோர் ஏன் தாமதமாக வருகிறாய்? என திட்டினர்.

    இதில் மனமுடைந்த அஞ்சுகா வீட்டில் யாரும் இல்லாத போது வி‌ஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அஞ்சுகா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கைகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சிக்கு எந்த வார்டுகளை ஒதுக்குவது என்று ஆலோசிக்கப்பட்டு இன்று மாலை அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கடலூர்:

    தமிழகத்தில் வருகிற 17-ந் மற்றும் 19-ந் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சி நடைபெற உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அ.தி.மு.க. அதிரடியாக களத்தில் இறங்கியது. மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

    தேர்தல் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தி.மு.க.- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இந்தநிலையில் தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்க அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 5 நகரசபைகள் உள்ளன. இந்த நகரசபைகளில் தற்போது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர்.

    மீண்டும் இந்த நகரசபைகளை தக்கவைத்துக் கொள்ள அ.தி.மு.க. தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் 5 நகரசபைகளையும் கைப்பற்ற தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. வலுவாக உள்ளது.

    அதேபோல் விடுதலை சிறுத்தை கட்சியினரும் அதிக செல்வாக்குடன் உள்ளனர். தி.மு.க.வும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் கூட்டணி அமைத்தால் அமோக வெற்றி பெறலாம் என்று மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தீர்மானித்தனர்.

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. மக்கள் நலக்கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளன.

    ஆனாலும் கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வசதியாக தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி 2 கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டன. கடலூர் நகராட்சியில் 6 வார்டு, ஒரு துணைத்தலைவர் பதவி, நெல்லிக்குப்பம் நகரசபையில் 6 வார்டுகள், துணைத்தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய நகரசபைகளிலும் தலா ஒரு வார்டு தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பண்ருட்டி நகராட்சியில் எந்த வார்டுகளையும் அவர்கள் கேட்கவில்லை.

    விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கைகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். விடுதலை சிறுத்தை கட்சிக்கு எந்த வார்டுகளை ஒதுக்குவது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்று மாலை அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க.தரப்பில் கூறும் போது, கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைத்து 5 நகரசபைகளையும் கைப்பற்றுவோம்.

    மேலும் பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் விடுதலை சிறுத்தை கட்சியுடன் உடன்பாடு வைத்துக்கொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
    ரெயிலில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் அடைத்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சிதம்பரம் பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து அதிரடி விசாரணை நடத்தினர். அதில் அந்த வாலிபர் சிதம்பரம் இந்திராநகரை சேர்ந்த வேல்ராஜ் என்று தெரியவந்தது.

    மேலும் கடந்த 5.1.2016-ல் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சிதம்பரத்தில் நின்றபோது ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ரஞ்சிதம் என்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியை அவர் பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதையொட்டி வேல்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் தங்க சங்கிலி கைப்பற்றப்பட்டது.

    பின்னர் சிதம்பரம் நீதிமன்றத்தில் வேல்ராஜ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    ×