என் மலர்
கடலூர்
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்தையா நகரை சேர்ந்தவர் ரங்கபாஷியம் (வயது 35). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.
அதே பல்கலைக்கழகத்தில் வேலைசெய்து வரும் சிவபுரியை சேர்ந்த அன்பரசன்(37), சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த அருள்குமார்(36), முத்தையா நகரை சேர்ந்த சிவகுருநாதன்(36) ஆகியோர் ரங்கபாஷியத்தின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.
இவர்கள் 4 பேரும் சேர்ந்து தில்லைவிடங்கன் என்ற ஊருக்கு காரில் சென்றனர். இருள்சூழ்ந்த பகுதியில் 4 பேரும் சேர்ந்து மதுஅருந்தினர். மீண்டும் காரில் சிதம்பரம் நோக்கி புறப்பட்டனர்.
இந்த நிலையில் பலத்த காயங்களுடன் ரங்கபாஷியத்தை சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கபாஷியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இது பற்றி ரங்கபாஷியத்தின் குடும்பத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து ரங்கபாஷியத்தின் மனைவி மலர் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதில் அவர் எனது கணவரை அன்பரசன், அருள்குமார், சிவகுருநாதன் ஆகியோர் காரில் அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர்.
பின்னர் அவரை 3 பேரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்துவிட்டனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, முதல் கட்டமாக ரங்கபாஷியம் சாவில் சந்தேகம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். ரங்கபாஷியத்தின் நண்பர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் காரில் இருந்து கீழே தவறி விழுந்து ரங்கபாஷியம் காயம் அடைந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து ரங்கபாஷியம் கீழே விழுந்ததாக கூறிய இடத்துக்கு போலீசாரும், விழுப்புரம் மாவட்ட தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதில் தடயவியல் நிபுணர்கள் சில தடயங்களை சேகரித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சிதம்பரம்:
தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.
பெத்தாங்குப்பம் பகுதியில் அவர் பிரசாரத்துக்கு சென்றபோது தேர்தல் விதிகளை மீறி அதிக வாகனங்களில் சென்றதாக தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையொட்டி கோர்ட்டில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு வாசுதேவன் உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த கடைகளை ஊருக்குள் மாற்றுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் அவர்கள் தேர்வு செய்யும் இடம் பற்றிய தகவல் பொதுமக்களிடையே பரவியதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள கோ.பொன்னேரி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.
இதையடுத்து நள்ளிரவில் கோ.பொன்னேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக ஊருக்குள் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கோஷமிட்டனர்.
விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவர்கள் காலையில் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் கிராம மக்கள் தூங்காமல் கண்விழித்து அங்கேயே இருந்தனர். காலையில் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
கோ.பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதும், காலையில் அங்கிருந்து கலைந்து செல்வதும் தொடர்ந்து வருகிறது.
பொதுமக்களின் இந்த தொடர் போராட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் எங்களுக்கு தெரியாமல் டாஸ்மாக் கடையை திறந்து விடக்கூடாது என்பதற்காகதான் நாங்கள் ஒன்று திரண்டு இரவு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.
கடலூர் முதுநகரை அடுத்த பச்சையாங்குப்பம் பகுதியில் சாலையோரம் முட்புதரில் காயங்களுடன் ஆண் பிணம் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆண் பிணத்தை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவரின் பெயர் ராஜா(வயது 30). சேலம் மாவட்டம் வடக்கு முல்லைவாடி கிராமத்தை சேர்ந்தவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள குத்துவிளக்கு தயாரிக்கும் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார் என்று தெரிந்தது. அவர் அடையாள தெரியாத வாகனம் மோதி இறந்தார் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ளது கொத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ரங்கபாஷியம் (வயது 36). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு மலர் என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று இரவு தனது நண்பர்கள் சிவகுருநாதன், அன்பரசன் ஆகியோருடன் ரங்கபாஷியம் சிதம்பரம் அருகே பின்னத்தூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவர்கள் மது அருந்தியதாக தெரிகிறது.
இன்று காலை ரங்கபாஷியம் தலையில் காயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் காரில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் ரங்கபாஷியம் இறந்து விட்டார்.
இது குறித்து அவரின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அண்ணாமலை நகர் போலீசில் மலர் புகார் செய்தார். இதையடுத்து பல்கலைக்கழக ஊழியர் ரங்கபாஷியம் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு வகையில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 28-வது வட்டத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவரது மனைவி தமிழ்அரசு (வயது 45). இவர் நெய்வேலி புதுநகர் 38-வது வட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை கோவிலில் வேலையை முடித்துவிட்டு தமிழ்அரசு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்ந வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கண்இமைக்கும் நேரத்தில் தமிழ்அரசு கழுத்தில் கிடந்த 1¼ பவுன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டார்.
இது குறித்து தமிழ்அரசு மகள் கிருத்திகா நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நெய்வேலி தெர்மல் போலீசார் நேற்று மாலை 27-வது வட்டம் விஷ்ணுபிரியா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் வண்டிக்குரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கூறினர். அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லை. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் நெய்வேலி அருகே உள்ள ஆதண்டார்கொல்லை பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 45) என்பதும், அவர் தான் தமிழ்அரசுவிடம் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனசேகரனை போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த 1¼ பவுன் நகையை மீட்டனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரா(வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரா, அங்குள்ள அய்யனார் கோவிலில் உள்ள ஒரு சாமி சிலையின் கழுத்தில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்(20) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் சந்திராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, பிரகாஷ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் எங்கள் கிராமத்தில் வசிக்கும் சந்திராவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. சந்திராவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதால் நான் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தேன்.
இதனால் எனக்கு அவருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. சந்திராவின் மகள்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்றதும் நான் அவரது வீட்டுக்கு சென்று சந்திராவுடன் உல்லாசமாக இருந்து வந்தேன்.
இந்த நிலையில் எங்கள் பகுதியை சேர்ந்த ஹரிகரன்(28) என்பவரும் சந்திராவுடன் நெருங்கி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிகரனுடன் சந்திரா அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தது எனக்கு தெரியவந்தது.
இதனால் அவருடன் உள்ள பழக்கத்தை துண்டிக்குமாறு நான் சந்திராவிடம் பலமுறை தெரிவித்தேன். இருப்பினும் அவர் ஹரிகரனுடன் உள்ள தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நான் சென்னைக்கு சென்றேன். பின்னர் கடந்த 9-ந் தேதி நள்ளிரவு சொந்த ஊருக்கு திரும்பி வந்து, சந்திராவை பார்க்க நினைத்து அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு ஒரு அறையில் சந்திராவும், ஹரிகரனும் உல்லாசமாக இருந்தனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த நான் ஹரிகரனை அங்கிருந்து அடித்து விரட்டினேன்.
அப்போது ஆத்திரத்தில் இருந்த நான் சந்திராவை கொலை செய்ய முடிவு செய்தேன். அவரது மகள்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால், அவர் சத்தம் போடாமல் இருக்க சந்திராவின் வாயில் துணியை வைத்து அடைத்தேன்.
இதையடுத்து அவரை அடித்துக் கொலை செய்தேன். அவர் இறந்ததை உறுதி செய்ததும் சந்திராவின் உடலை அவரது வீட்டின் பின்புறம் உள்ள அய்யனார் கோவிலுக்கு கொண்டு சென்றேன்.
பின்னர் சந்திரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை நம்ப வைக்க முடிவு செய்தேன். அதன்படி அவர் அணிந்திருந்த புடவையை கழற்றி சந்திராவின் கழுத்தில் கட்டினேன். புடவையின் மறுமுனையை கோவிலில் இருந்த சாமி சிலையின் கழுத்தில் கட்டி, அவர் தூக்குமாட்டியது போல கட்டினேன். பின்னர், நான் வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல இருந்தேன்.
ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் நான் உண்மையை ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
இதையடுத்து பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வால்கார வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28), சிற்பக் கலைஞர். இவருக்கும் கடலூர் மணகுப்பத்தை சேர்ந்த விஜி (20) என்பவருக்கும் கடந்த 9 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜியின் வீட்டில் வைத்து தாலி பிரித்துகோர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ரமேசும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து ரமேசும் அவரது மனைவி விஜியும் நேற்று பண்ருட்டியில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று மாலை ரமேஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதரன், சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கடலூரில் இருந்து மோப் பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடியது, யாரையும் கவ்விபிடிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு விசாரணையை முடுக்கிவிட்டார். இந்த கொலை தொடர்பாக ரமேசின் மனைவி விஜி, தாய் ராணி, தம்பி சதீஷ் ஆகியோரிடம் போலீசார் தனிதனியாக தீவிர விசாரணை நடத்தினர்.
விஜியிடம் விசாரணை நடத்தியதில் மர்ம நபர் என் கணவரை கொலை செய்து விட்டார் என்று கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துரித விசாரணை நடத்தினர். அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பல ஆண்களின் பெயர் இருந்தது. இந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரமேசை கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விஜியிடம் நடத்திய விசாரணையில் ரமேசை நான்தான் கொலை செய்தேன் என்று அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்தனர்.
கணவர் ரமேசை கொலை செய்தது ஏன் என்பது குறித்து விஜி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-
என்னை என் பெற்றோர் கட்டாயப்படுத்தி ரமேசுக்கு திருமணம் செய்து வைத்தனர். எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. இல்லற வாழ்க்கையில் என்னை ரமேஷ் சந்தோஷபடுத்தவில்லை. இதனால் எனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது என்னை தாம்பத்தியத்துக்கு அழைத்தார் அதற்கு நான் மறுத்தேன். நீ வரவில்லை என்றால் உன் அம்மாவை அனுப்பு என்று ரமேஷ் கூறினார். இதைகேட்டு நான் ஆத்திரம் அடைந்தேன். அப்போது எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் சுவரில் முட்டி அழுதேன்.
எப்படியும் ரமேசை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினேன். சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டில் தூங்கிவிட்டார். இதை பயன்படுத்தி கிரைண்டரில் இருந்த கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டேன். அதில் அவர் தலை நசுங்கி இறந்தார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் அப்படியே அமர்ந்தேன்.
அந்த நேரத்தில் வெளியே கடைக்கு சென்ற ரமேசின் தாய் ராணி வருவதை பார்த்தேன். நான் வெளியே ஓடிவந்து கதறி அழுதேன். என்கணவரை யாரோ வெளியில் இருந்து வந்த நபர் கொலை செய்துவிட்டார் என்று நாடகமாடினேன். யாரும் நம்பவில்லை.
என்னிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று நான் தான் கணவரை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு விஜி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
திருமணமாகி 9-வது நாளில் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிதம்பரம்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியோடு த.மா.கா. இணைந்து செயல்பட்டு, வெற்றி பெறும் நிலையில் இருந்தது. டி.டி.வி.தினகரன் அணியினர் பணத்தை காட்டி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குகளை சேகரித்தனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து, அதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது நியாயமானது தான். இந்த முடிவை தேர்தல் ஆணையம் தாமதமாக எடுத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடந்தால் ஓ.பன்னீர்செல்வம் அணி, தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட சிறுகுறு விவசாயிகளுக்கு தமிழக அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கவேண்டும்.
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளை சந்தித்து பேச தயக்கம் காட்டி வருகிறார்.
கடல் நீர் உட்புகுவதை தடுக்க கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம் செங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தனது மகள் அன்புக்கரசியை நாகை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்த திருநாவுக்கரசுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
அன்புக்கரசி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். திருக்கடையூரில் நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி செங்கல்மேடு பகுதியில் இருந்து உறவினர்களை அழைத்து கொண்டு திருக்கடையூருக்கு அன்பழகன் சென்றார்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு பரிமாறப்பட்டது. அன்பழகனின் உறவினர்கள் உணவை சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து செங்கல்மேடு திரும்பினர்.
இரவில் 34 பேருக்கும் திடீரென்று வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில் நீலாம்பாள் என்பவர் மேல்சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது ஈயம்பூசாத பாத்திரத்தில் தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டதால் ஒவ்வாமை காரணமாக 34 பேருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 25). இவர் கடலூரில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கை யாளர்களிடம் கடன்தொகையை வசூலிக்கும் ஏஜெண்டாக பணி புரிந்தார்.
இந்தநிலையில் ரஞ்சித் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன்கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் ரஞ்சித்தின் பெற்றோர் அவரை பல இடங் களில் தேடினர். மேலும் அவரது நன்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தனர். தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ரஞ்சித்தின் பெற்றோருக்கு இன்று காலை செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கடலூர்-பண்ருட்டி மெயின் ரோட்டில் உள்ள குச்சிப்பாளையம் அருகே ரஞ்சித் இறந்து கிடப்பதாக கூறினார்.
அதிர்ச்சியடைந்த ரஞ்சித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரஞ்சித் உடலில் காயங்களுடன் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது கழுத்து பகுதியில் சிமெண்டு சிலாப் கிடந்தது.
தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். ரஞ்சித் சாவு குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கங்காதரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றபோது போலீசாரிடம் விடுதலைசிறுத்தை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரஞ்சித்தின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். எனவே உடலை எடுத்து செல்ல விடுங்கள் என்றனர். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் உரியநடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித் வாயில் நுரை தள்ளியிருப்பதால் அவர் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து உடலை சாலையோரம் வீசிச்சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெய்வேலி மந்தாரக்குப்பம் பழைய பஸ்நிலையம் அருகே என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கு உள்ளது. முதலாவது சுரங்கத்தில் தோண்டப்படும் நிலக்கரி இங்கு சேமித்து வைக்கப்படுகிறது.
நேற்று மாலை சேமிப்பு கிடங்கின் உள்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து அங்கு தீப்பற்றியது. தகவல் அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்தனர். நீர்த்தெளிப்பான் கருவி மூலம் தீ பரவாமல் உடனடியாக அணைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரி சேமித்து வைக்கும் கிடங்கில் அதிக வெப்பம் காரணமாக உள்பகுதியில் லேசாக தீப்பற்றியது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது. இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றனர்.






