என் மலர்tooltip icon

    கடலூர்

    என்னையும் எனது மனைவி, குழந்தை பற்றி ஆபாசமாக திட்டியதால் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் வாலிபர் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 75). இவர் கடந்த 21-ந் தேதி காலை வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை-கால்கள் கட்டப்பட்டு இருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் ராஜலட்சுமியை நொச்சிக்காடு வள்ளலார் நகரை சேர்ந்த அருண்ராஜ் (30) கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அருண்ராஜை போலீசார் கைது செய்தனர். ராஜலட்சுமியை கொலை செய்தது ஏன்? என்று போலீசாரிடம் அருண்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2013-ம் ஆண்டு ராஜலட்சுமி வீட்டில் நானும், எனது நண்பரும் புகுந்து அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றோம். அப்போது என்னையும், எனது நண்பரையும் அவர் அடையாளம் கண்டு விட்டார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார், எங்களை கைது செய்தனர். அன்றைய தினம் முதல் ராஜலட்சுமி என்னை திட்டிக்கொண்டே இருந்தார்.

    கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. தற்போது எனக்கு 5 மாதத்தில் ஒரு மகன் உள்ளான். கடந்த 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு ராஜலட்சுமியின் வீடு வழியாக நான் நடந்து சென்றேன். அப்போது ராஜலட்சுமி, என்னையும் எனது மனைவி, குழந்தை மற்றும் எனது குடும்பத்தை பற்றி ஆபாசமாக திட்டி, சாபமிட்டார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக நான், டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தேன். ராஜலட்சுமியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    இரவு 11 மணிக்கு போதையில் ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்றேன். அங்கு தூங்கிக்கொண்டிருந்த ராஜலட்சுமியின் வாயை பொத்தி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் தடயங்களை அழிப்பதற்காகவும், மோப்ப நாயிடம் சிக்காமல் இருப்பதற்காகவும் ராஜலட்சுமியின் உடலை சுற்றியும், வீட்டிலும் மிளகாய் பொடியை தூவி விடு தப்பி ஓடிவிட்டேன்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    விருத்தாசலம் அருகே இன்று காலை சொகுசு பஸ் மாட்டுவண்டி மீது மோதி சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விருத்தாசலம்:

    பொள்ளாச்சியில் இருந்து புதுவைக்கு 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கோவை சீலமேட்டுபகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்தார். கண்டக்டராக சேலம் வாழப்பாடி சோமம்பட்டியை சேர்ந்த மாரிப்பன் இருந்து வந்தார்.

    இன்று காலை அந்த பஸ் விருத்தாசலம் மணிமுத்தாற்று பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற மாட்டுவண்டி மீது மோதியது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது.

    உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் ஒரு மாடு பலத்த காயம் அடைந்தது. மேலும் மாட்டு வண்டியை ஓட்டிவந்த விருத்தாசலம் பூதமூரை சேர்ந்த கலியபெருமாள் (வயது 61) என்பவர் படுகாயம் அடைந்தார்.

    மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, கண்டக்டர் மாரியப்பன் மற்றும் பயணிகள் 20 பேரும் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த 23 பேரையும் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூரில் பெண்ணை கொன்று நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே உள்ள நொச்சிக்காட்டை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 75). இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் ராஜ லட்சுமியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். அவர் தடுத்ததால் கொள்ளையர்கள் ராஜலட்சுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு கழுத்தை நெரித்தனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் கொள்ளையர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2 வாலிபர்கள் ராஜலட்சுமியின் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வாலிபர்கள்தான் ராஜலட்சுமியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    அவர்களை பிடிக்க கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையில் ஒருபடையும், இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையில் ஒருபடையும் அமைக்கப்பட்டது.

    இந்த கொலை-கொள்ளை தொடர்பாக வைத்தியநாதன், அருண்ராஜ் ஆகிய 2 வாலிபர்கள் தனிப்படை போலீசார் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்டம் சார்பில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ததை மீண்டும் பெற்றுத்தரக் கோரியும், அதே இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குமாறும், தமிழக மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தொடர்ந்து கிடைத்திட தமிழக அரசை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டாக்டர் கேசவன் தலைமை தாங்கினார். செயலாளர் புலிகேசி, பொருளாளர் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு தலைமை மருத்துவமனை, வட்ட அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்து வரும் டாக்டர்கள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.
    நெய்வேலி என்.எல்.சி.யில் சுரங்கப்பாதை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    நெய்வேலி:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 1-வது சுரங்கம் உள்ளது. இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அந்த நிலக்கரி அனல் மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு சுரங்கப்பாதை போன்ற தோற்றமுள்ள பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு மீட்டர் அகலம் உள்ளது. செங்கற்களால் அமைக்கப்பட்ட மரப்பலகைகள் இணைக்கப்பட்டுள்ளன.

    இது பற்றி வரலாற்று ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனிடம் கேட்ட போது கூறியதாவது:-

    இந்த சுரங்கப்பாதை பழங்காலத்தை சேர்ந்ததாக இருக்காது. ஏனெனில், சிமெண்டு கலவை அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி. சுரங்கங்கள் இருப்பது 50 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.

    அப்போது, மக்கள் பயன்படுத்திய கால்வாய் அல்லது என்.எல்.சி. நிர்வாகம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக இந்த கால்வாய் அமைத்திருக்கலாம். இதுதவிர ஆங்கிலேயர் காலத்தில் அந்த இடத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் சென்றதால், ஏதேனும் பாலம் அமைத்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, முதலாவது சுரங்கத்தில் சில கட்டுமான பகுதி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
    பண்ருட்டியில் டாஸ்மாக் கடை முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

    பண்ருட்டி:

    மதுக்கடைகளை மூடக் கோரி பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தில் டாஸ்மாக் கடை முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. நெய்வேலி தொகுதி பொறுப்பாளரும் பண்ருட்டி ஒன்றிய தலைவருமான செல்வமணி தலைமை தாங்கினார். பண்ருட்டி நகர பொது செயலாளர் டைல்ஸ் தண்டபாணி முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆதிமூலம், செல்வம், ராமர், ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், கோபால், ரங்கநாதன், ஞானசேகர், தண்டபாணி, இளையராஜா, மகளிர் அணி சுந்தரி, செல்வநாயகி, சுமதி, லட்சுமி, பண்ருட்டி நகர நிர்வாகிகள் செல்வம், புனிதவேல், எழிலரசன் உள்பட 100-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் காடாம்புலியூர் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

    இதேபோல காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சியில் கடலூர் மாவட்ட பா.ஜ.க. பொது செயலாளர் சக்திகணபதி முன்னிலையில் ஒன்றியத் தலைவர் பழனிராஜா ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இதில் ராஜேஷ், மோகன்தாஸ், காமராஜ், கோபிநாத் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் டாஸ்மாக் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பிரசார அணி தலைவர் பண்ருட்டி கோவிந்தராஜ், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் திராசு சுகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் மாவட்ட அளவில் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாய சங்க செயலாளர் கூறியுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், வேப்பூர், காட்டு மன்னார்கோவில், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி உள்ளிட்ட 9 தாலுகா உள்ளது. இதில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடியை தவிர்த்து 6 தாலுகா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்தது.

    அதன் அடிப்படையில் 6 தாலுகாவில் மொத்தம் 76 ஆயிரம் விவசாயிகள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தெரிவித்து, அவர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.

    பின்னர் வருவாய்த்துறை ஊழியர்களும், வேளாண்மைத்துறை ஊழியர்களும் இணைந்து வறட்சி பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் விவசாயிகளிடம் வங்கி விவரம் வாங்கி கொண்டு, அதன் மூலம் பணம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் சென்று சேரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பணம் அனுப்பும் பணிகள் தீவிரமாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை செய்து வந்தது. இந்த நிலையில் 76 ஆயிரம் விவசாயிகளில் 4 ஆயிரம் விவசாயிகளுக்கு வறட்சி பணம் வங்கி கணக்குகளில் செல்லவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்ட போது சரியான பதில் கூறவில்லை. வறட்சி பணம் விவசாயிகளுக்கு வராத காரணத்தால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டதோடு மிகுந்த கவலையில் உள்ளனர். மேலும் வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். குடும்பம் நடத்துவதற்கு கூட சரியான முறையில் பணம் இல்லாமல் இருந்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியதாவது:-

    இன்றைய தினம் 4 ஆயிரம் விவசாயிகள் உரிய நிவாரணம் கிடைக்காமல் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    இது குறித்து மாவட்ட வேளாண்மை துறையினரும் உடனடியாக கவனித்து வறட்சி நிவாரணம் கிடைக்காத விவசாயிகளின் கணக்குகளை சரிபார்த்து நிவாரணம் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்காவிட்டால் மாவட்ட அளவில் விவசாயிகளை திரட்டி சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை ஓடும் பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குமார் தொழிலாளி. இவரது மகள் கவுசல்யா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குருநாதன் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகிவந்தனர்.

    இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த குருநாதனின் அக்கா உஷா, மாமா பாஷா ஆகிய இருவரும் காதலர்களை திருப்பூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து வைத்தனர்.

    இந்த தகவல் குருநாதனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் திருப்பூருக்கு சென்று காதல் தம்பதிகளான குருநாதன், கவுசல்யா ஆகியோரிடம் நைசாக பேசி ஊருக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது அவர்களுடன் குருநாதனின் உறவினர்களும் அதே பஸ்சில் வந்தனர்.

    திருப்பூரிலிருந்து அங்கு செட்டிப்பாளையத்துக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்குசெட்டிப் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்துகொண்டிருந்தபோது பஸ்சின் படிகட்டிலிருந்து கவுசல்யாவை குருநாதனின் தந்தை ஆறுமுகம் உள்பட 4 பேர் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கவுசல்யா பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் இன்ஸ் பெக்டர் தாமரைச்செல்வி, கவுசல்யாவின் கணவர் குருநாதன், குருநாதனின் தந்தை ஆறுமுகம், அக்கா உஷா, மாமா பாஷா மற்றும் உறவினர்கள் வள்ளி, தெய்வானை, தெய்வா ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கணவர் குருநாதன், மாமனார் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் வள்ளி, தெய்வானை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தமிழகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ள முழு கடையடைப்பு போராட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்களுக்கு எதிரான திட்டங்களை கண்டித்து வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்தக்கட்டமாக பிரதமர் மோடியை நேரில் சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் நீட் தேர்வு என்பது கண்டிக்கத்தக்கது. சட்டமன்ற தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியிடம் நிலுவையில் இருக்கும் போது தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி கூறியது கண்டனத்துக்குரியது.

    மசோதாவை அமல்படுத்த வேண்டியது ஜனாதிபதியா? அல்லது மத்திய அமைச்சரவையா? யாருக்கு அதிகாரம் உள்ளது? என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நீட் தேர்வினால் தமிழகத்தில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது கனவாகி விடும். இடஒதுக்கீடு சம்பந்தமாக ஜனாதிபதி பட்டியல் தயார் செய்வார் என்று மத்திய அரசு கூறியது கண்டனத்துக்குரியது.

    மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர், மிகவும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற கணக்கு மாநில அரசுக்குதான் தெரியும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

    வருகிற ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அறிவித்தபடியே நடத்தப்பட வேண்டும்.

    கடலூர் மாவட்டத்தில் சாதிய படுகொலைகள், பள்ளி மாணவர்கள் மீதான தாக்குதல், பாலியல் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதை கண்டிக்கும் வகையில் எனது தலைமையில் விரைவில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன்.

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு உரிய சலுகைககளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடலூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலை நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணி அளவில் பங்கு தந்தை அந்தோணிராஜ் தலைமையில் கூட்டு திருப்பலியும் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இதேபோல் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சக்குப்பம் சகாய மாதா அன்னை ஆலயம் மற்றும் நகரில் உள்ள பிற கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவில் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே வனபாதுகாப்பு ஊழியர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது சமுத்திரப்பாளையம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் கடந்த 20 ஆண்டுக்கு மேலாக கொண்ட சமுத்திரம் வனக் காட்டில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். மாலை வீட்டில் இருந்த வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை.

    இரவு 9 மணியளவில் ஆலிஷ்பேட்டை பகுதியில் கணேசன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் முகம் அடையாளம் தெரியாமல் இருக்க சிதைக்கப்பட்டு இருந்தது.

    அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்தனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

    கணேசனை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. அவரை கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கணேசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கொலை செய்யப்பட்ட கணேசனுக்கு மகாதேவி (43) என்ற மனைவியும் சதீஷ் (28), வீரமணி (26) கபிலரசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    வன ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லிக்குப்பம் அருகே லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி 100-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த ஏ.குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவிச்சந்திரன் (வயது 27). இவரது மனைவி சங்கீதா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 8 மாத ஜென்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    ரவிச்சந்திரன் மேல்பட்டாம்பாக்கத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த கப்பியாப்புலியூர் என்ற இடத்துக்கு மணல் ஏற்ற லாரியுடன் ரவிச்சந்திரன் சென்றார்.

    அப்போது அவரின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என போன் வந்தது. இதனால் அவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த லாரியை திருடி சென்றனர்.

    இது குறித்து லாரியின் உரிமையாளர் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார்.

    ஆனால், லாரி தொடர்பாக இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லாரியின் உரிமையாளர் நேற்று இரவு லாரி டிரைவர் ரவிச்சந்திரனின் வீட்டுக்கு சென்று லாரி காணாமல் போனதற்கு நீ தான் பொறுப்பு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ரவிச்சந்திரன் மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் வீட்டில் இருந்த அனைவரும் தூங்க சென்று விட்டனர். இன்று அதிகாலை ரவிச்சந்திரனின் மனைவி சங்கீதா எழுந்து பார்த்த போது கணவரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டில் இருந்தவர்களுடன் சேர்ந்து ரவிச்சந்திரனை அக்கம் பக்கத்தில் தேடினார்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் ரவிச்சந்திரன் தூக்கில் தொங்கியதை கண்டார். அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் அங்கு கூடினர். ரவிச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கு காரணமானவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


    பின்னர் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையொட்டி அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    போலீசார் ரவிச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×