என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோரம் ரஞ்சித் இறந்துகிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    சாலையோரம் ரஞ்சித் இறந்துகிடப்பதை படத்தில் காணலாம்.

    நெல்லிக்குப்பம் அருகே வங்கி ஊழியர் அடித்துக்கொலை?: போலீசார் விசாரணை

    நெல்லிக்குப்பம் அருகே வங்கி ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 25). இவர் கடலூரில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கை யாளர்களிடம் கடன்தொகையை வசூலிக்கும் ஏஜெண்டாக பணி புரிந்தார்.

    இந்தநிலையில் ரஞ்சித் பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி நெய்வேலி வேலுடையான்பட்டு முருகன்கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் ரஞ்சித்தின் பெற்றோர் அவரை பல இடங் களில் தேடினர். மேலும் அவரது நன்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விசாரித்தனர். தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ரஞ்சித்தின் பெற்றோருக்கு இன்று காலை செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கடலூர்-பண்ருட்டி மெயின் ரோட்டில் உள்ள குச்சிப்பாளையம் அருகே ரஞ்சித் இறந்து கிடப்பதாக கூறினார்.

    அதிர்ச்சியடைந்த ரஞ்சித்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ரஞ்சித் உடலில் காயங்களுடன் வாயில் நுரைதள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது கழுத்து பகுதியில் சிமெண்டு சிலாப் கிடந்தது.

    தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், ஒன்றிய செயலாளர் சுபாஷ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். ரஞ்சித் சாவு குறித்து நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கங்காதரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றபோது போலீசாரிடம் விடுதலைசிறுத்தை கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரஞ்சித்தின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர்தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். எனவே உடலை எடுத்து செல்ல விடுங்கள் என்றனர். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் உரியநடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசார் ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித் வாயில் நுரை தள்ளியிருப்பதால் அவர் வி‌ஷம் குடித்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து உடலை சாலையோரம் வீசிச்சென்றார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     

    Next Story
    ×