என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து இரவு நேரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தும் மக்கள்
    X

    விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து இரவு நேரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தும் மக்கள்

    விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து கிராம மக்கள் இரவு நேரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்துவதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.
    விருத்தாசலம்:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த கடைகளை ஊருக்குள் மாற்றுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த பகுதியில் அவர்கள் தேர்வு செய்யும் இடம் பற்றிய தகவல் பொதுமக்களிடையே பரவியதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள கோ.பொன்னேரி அருகே டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த டாஸ்மாக் கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    இதையடுத்து நள்ளிரவில் கோ.பொன்னேரி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக ஊருக்குள் தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்தனர். அவர்கள் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.

    விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட வந்த அவர்கள் காலையில் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவும் அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இரவு முழுவதும் கிராம மக்கள் தூங்காமல் கண்விழித்து அங்கேயே இருந்தனர். காலையில் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

    கோ.பொன்னேரி பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்பதற்காக அந்த பகுதி பொதுமக்கள் இரவு நேரத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதும், காலையில் அங்கிருந்து கலைந்து செல்வதும் தொடர்ந்து வருகிறது.

    பொதுமக்களின் இந்த தொடர் போராட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் எங்களுக்கு தெரியாமல் டாஸ்மாக் கடையை திறந்து விடக்கூடாது என்பதற்காகதான் நாங்கள் ஒன்று திரண்டு இரவு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.
    Next Story
    ×