என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.60.68 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன.
    • பணிகள் நிறைவடைந்து, கடந்த 10ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் அதன் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.60.68 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதன் பணிகள் நிறைவடைந்து, கடந்த 10ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் பண்டாக்கர் (மும்பை), சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ஷெல்கே மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் வர இருந்தனர். இவர்களை நுழைவு வாயிலில் வரவேற்க பள்ளி மாணவ, மாணவிகளை சுட்டெரிக்கும் வெயிலில் செருப்பு இல்லாமல் நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • னிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், அதை மீட்கவும் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
    • மீனவர்கள் செல்லும் வழியை தடுப்பதாகவும் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக கடலோர பகுதியில் 1,054 ஏக்கர் நிலம் உள்ளது. பலகோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை இந்து அறநிலையத்துறை தனி செயல் அலுவலரை நியமித்து நிர்வகித்து வருகிறது.

    இந்தநிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், அதை மீட்கவும் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 10 கி.மீ. தூரத்திற்கு 10.44 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 5 மீனவ கிராம மக்கள் செல்ல வழி இல்லாத நிலை ஏற்படுவதாக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, செயல் அலுவலர் சக்திவேல், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாமல்லபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மீனவர்கள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் முறைகேடாக பண்ணை வீடு, ரிசார்ட், ஓட்டகளுக்கு வழி விடுவதாகவும், மீனவர்கள் செல்லும் வழியை தடுப்பதாகவும் குற்றம் சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

    • தலையில் பலத்த காயம்அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்
    • விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது25). இவர் மதுரவாயலில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார்,

    இந்த நிலையில் நேற்றும் இரவு அவர், பெருங்களத்தூரில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் புறவழிசாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அனகாபுத்தூர் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம்அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான ராஜேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • மேற்பார்வையாளர் கம்மல் கிடைக்கிறதா என துப்புரவு ஊழியர்களை வண்டியை நிறுத்தி தேட சொல்லி உள்ளார்.
    • ஒரு மணி நேரம் தேடலுக்கு பின்பு குப்பைகளின் மத்தியில் இருந்து ஊழியர்கள் வைர கம்மலை மீட்டனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ராஜகீழ்பாக்கம் ராதே ஷியாம் அவென் யூ பகுதியை சேர்ந்ததவர் ஜானகி (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டை சுத்தப்படுத்தி விட்டு குப்பைகளை அள்ளி தனியாக வைத்துள்ளார் .

    பின்னர் காலையில் தாம்பரம் மாநகராட்சி குப்பைகளை அள்ளும் வாகனம் தனது வீட்டின் அருகே வந்தவுடன் குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் போட்டுள்ளார்.

    குப்பைகளை அள்ளி கொண்டு சென்ற பின் தனது வீட்டிற்கு வந்த போது தனது காதில் மாட்டியிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பு உள்ள ஒரு வைர கம்மல் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் தேடியும் அது கிடைக்கவில்லை.

    இதையடுத்து கீழே விழுந்த வைர கம்மலை குப்பைகளுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதியில் குப்பை அள்ளி சென்ற வாகனத்தை கண்டுபிடித்து அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

    கார்மேகம் கம்மல் கிடைக்கிறதா என துப்புரவு ஊழியர்களை வண்டியை நிறுத்தி தேட சொல்லி உள்ளார். ஒரு மணி நேரம் தேடலுக்கு பின்பு குப்பைகளின் மத்தியில் இருந்து ஊழியர்கள் வைர கம்மலை மீட்டனர்.

    பின்பு சுகாதார ஆய்வாளர் சிவகுமார், மேலாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் இணைந்து அந்த வைர கம்மலை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    குப்பையில் இருந்து தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த துப்புரவு ஊழியர்களுக்கு பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • சிட்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
    • திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், அணுமின் நிலைய அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    இந்திய அணுமின் கழகம், கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலையம் சார்பில் அதன் பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் சுற்று வட்டார அரசு பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க முடிவு செய்து ரூ.2.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிட்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.

    அதன் பணிகள் நிறைவடைந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் பண்டாக்கர் (மும்பை) திறந்து வைத்தார். சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ஷெல்கே, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், திருக்கழுகுன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ், அணுமின் நிலைய அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

    • கடந்த திங்கள் கிழமையில் இருந்து 7பேர் கொண்ட விளையாட்டு குழுவினரால் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடத்தப்பட்டது.
    • விளையாட்டு விழா இன்று கல்லூரியில் நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 950 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடப் பிரிவுகளில், பட்டப்படிப்பு படித்து வருகிறார்கள்., அவர்களின் விளையாட்டு திறனுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள், கடந்த திங்கள் கிழமையில் இருந்து 7பேர் கொண்ட விளையாட்டு குழுவினரால் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என தனித்தனியாக நடத்தப்பட்டது.

    அதன் விளையாட்டு விழா இன்று கல்லூரியில் நடத்தப்பட்டது., கபடி, செஸ், வாலிபால், கோகோ, கிரிக்கெட், ஓட்டம் என பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் பதக்கங்கள், சான்றிதழ், கோப்பைகளை வழங்கினார்.

    • தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக ரேஷன்கார்டு தொடர்பாக குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த குறைதீர் முகாம் செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(சனிக்கிழமை) வட்ட அளவில் கீழ்கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது.

    செங்கல்பட்டு-கடம்பூர், செய்யூர் -மடயம்பாக்கம், மதுராந்தகம் -செம்பூண்டி, திருக்கழுக்குன்றம் - நெம்மேலி, திருப்போரூர்-அகரம் வண்டலூர்-போலச்சேரி மேற்படி நடைபெறவுள்ள குறைதீர் முகாம்களில், ரேஷன்கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம். முகவரி மாற்றம். புதிய ரேஷன்கார்டு நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் போன்ற சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாசிமக இருளர்களின் குலதெய்வ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
    • கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் கலந்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டபோது மாணவி திடீரென மாயமானார்.

    மாமல்லபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி கடந்த 6-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாசிமக இருளர்களின் குலதெய்வ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

    கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற திருவிழாவில் கலந்துவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டபோது மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • சாலைகள் சேதமடைந்து, அதில் நடந்து செல்லும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் சிறமப்பட்டு வந்தனர்.
    • தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 1.31கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஒத்தவாடை குறுக்கு தெரு, வேதாசலம் நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து, அதில் நடந்து செல்லும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் சிறமப்பட்டு வந்தனர். இதையடுத்து பழைய சாலையை பெயர்த்து எடுத்து விட்டு, புதிய சாலை அமைக்க, தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு 1.31கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

    மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு, பழைய சாலைகளை பொக்லைன் வைத்து பெயத்தெடுக்கும் பணி துவங்கியது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன்குமார், பூபதி, சீனிவாசன், மற்றும் கட்சி பிரமுகர்கள் ரமேஸ், முருகன், கண்ணதாசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • 7 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தங்க வளையல்கள் மற்றும் மரக்கன்றுகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 100 துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள், பிரியாணி வழங்கப்பட்டது.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட வண்டலூர் ஊராட்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குணா என்ற குணசேகரன் தலைமையில் மகளிர் தின விழா நடைபெற்றது.

    முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜெகன் தேவேந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வரலட்சுமிமதுசூதனன் எம்.எல்.ஏ, காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வி.எஸ்.ஆரா முதன் ஆகியோர் கலந்து கொண்டு உலக மகளிர் தின விழாவை கேக் வெட்டி கொண்டாடினர். 7 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களுக்கு தங்க வளையல்கள் மற்றும் மரக்கன்றுகளை வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    100 துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள், பிரியாணி வழங்கப்பட்டது. இதில் தி. மு.க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வண்டலூர் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு குழு தலைவி வசந்தா தேவேந்திரன் நன்றி கூறினார்.

    • வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.
    • புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இங்கு ஒரே நேரத்தில் 2,285 பஸ்களை நிறுத்த முடியும். இந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த மாத இறுதியில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படும். மேலும் சென்னையின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் இங்கிருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளன.

    எனவே மின்சார ரெயிலில் வரும் பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

    எனவே பயணிகளின் சிரமத்தை போக்க கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே அமைகிறது.

    மேலும் புதிதாக அமைய உள்ள ரெயில் நிலையத்துக்கும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கும் இடையே தண்டவாளம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை உள்ளது. எனவே புதிய ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக செல்ல ஆகாய நடைபாதை அமைக்கப்படுகிறது.

    இந்த ஆகாய நடைபாதை மூலம் பயணிகள் ரெயில் நிலையத்தில் இருந்து தண்ட வாளம், ஜி.எஸ்.டி. சாலை ஆகியவற்றை எளிதாக கடந்து பஸ் நிலையத்தை அடையலாம்.

    புதிய ரெயில் நிலையம் மற்றும் ஆகாய நடைபாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உள்ள அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ரெயில் நிலையம், ஆகாய நடைபாதை அமைப்பதற்காக 5.3 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தொடங்கி உள்ளது. மேலும் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறுவதற்கு இடையூறு இல்லாத வகையிலும், அதே நேரத்தில் பயணிகளுக்கு வசதியாகவும் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    இதன் மூலம் மின்சார ரெயில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தை அடைய முடியும்.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • ஆய்வின்போது ஊராட்சி தலைவர் செங்கேணி, அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அங்குள்ள பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் இன்று அங்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். ஊராட்சி தலைவர் செங்கேணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குன்றத்தூர், வெங்கம்பாக்கம் பகுதிகளுக்கு சென்று மத்திய, மாநில அரசு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.

    ×