என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வைர கம்மலை குப்பையுடன் சேர்த்து வீசிய மூதாட்டி- 1 மணி நேரம் போராடி கண்டுபிடித்த துப்புரவு தொழிலாளிகள்
- மேற்பார்வையாளர் கம்மல் கிடைக்கிறதா என துப்புரவு ஊழியர்களை வண்டியை நிறுத்தி தேட சொல்லி உள்ளார்.
- ஒரு மணி நேரம் தேடலுக்கு பின்பு குப்பைகளின் மத்தியில் இருந்து ஊழியர்கள் வைர கம்மலை மீட்டனர்.
தாம்பரம்:
தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட ராஜகீழ்பாக்கம் ராதே ஷியாம் அவென் யூ பகுதியை சேர்ந்ததவர் ஜானகி (வயது 65). இவர் இன்று காலை தனது வீட்டை சுத்தப்படுத்தி விட்டு குப்பைகளை அள்ளி தனியாக வைத்துள்ளார் .
பின்னர் காலையில் தாம்பரம் மாநகராட்சி குப்பைகளை அள்ளும் வாகனம் தனது வீட்டின் அருகே வந்தவுடன் குப்பைகளை அள்ளி குப்பை வண்டியில் போட்டுள்ளார்.
குப்பைகளை அள்ளி கொண்டு சென்ற பின் தனது வீட்டிற்கு வந்த போது தனது காதில் மாட்டியிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பு உள்ள ஒரு வைர கம்மல் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் தேடியும் அது கிடைக்கவில்லை.
இதையடுத்து கீழே விழுந்த வைர கம்மலை குப்பைகளுடன் சேர்த்து குப்பை வாகனத்தில் வீசி இருக்கலாம் என கருதி உடனடியாக அப்பகுதியில் குப்பை அள்ளி சென்ற வாகனத்தை கண்டுபிடித்து அதன் மேற்பார்வையாளர் கார்மேகம் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.
கார்மேகம் கம்மல் கிடைக்கிறதா என துப்புரவு ஊழியர்களை வண்டியை நிறுத்தி தேட சொல்லி உள்ளார். ஒரு மணி நேரம் தேடலுக்கு பின்பு குப்பைகளின் மத்தியில் இருந்து ஊழியர்கள் வைர கம்மலை மீட்டனர்.
பின்பு சுகாதார ஆய்வாளர் சிவகுமார், மேலாளர் கார்மேகம் மற்றும் பணியாளர்கள் இணைந்து அந்த வைர கம்மலை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
குப்பையில் இருந்து தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த துப்புரவு ஊழியர்களுக்கு பொதுமக்களும் அதிகாரிகளும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.






