என் மலர்
செங்கல்பட்டு
- மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் உள்ளது.
- நெம்மேலி குடிநீர் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் உள்ளது. இங்கிருந்து சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலங்களில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்த 2 மண்டலங்களுக்கும் ஒரு நாளைக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 38 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.
இதில் 28 மில்லியன் லிட்டர் நெம்மேலியில் இருந்தும், 10 மில்லியன் லிட்டர் வீராணம் தண்ணீரும் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நெம்மேலி குடிநீர் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக சோழிங்கநல்லூர், பெருங்குடி மண்டலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளையை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக பொது மக்கள் கூறும்போது, "கடந்த 6 வாரமாகவே நெம்மேலி குடிநீர் ஆலை பராமரிப்புக்காக அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் தண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமான நாட்களில் கூட தண்ணீர் அழுத்தம் மற்றும் வினியோகம் மோசமாக உள்ளது. மெட்ரோ வாட்டர் டேங்கர் லாரிகளை முன்பதிவு செய்தாலும் தண்ணீர் வழங்க 2 நாட்கள் ஆகிறது. தற்போது தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகளையே நம்பி உள்ளோம்" என்றனர்.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, "இந்த ஆலையில் தற்போது கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யும் ஆலை கட்டப்படுகிறது. இது தயாரானதும் குடிநீர் விநியோகம் அதிகரிக்கும். தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தற்போதைக்கு தற்காலிக நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறோம்" என்றார்.
- நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்றது.
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது.
இந்தப் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டில் சிறந்த உயிரியல் பூங்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்று நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.
- பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியத்திற்கு சென்று வண்ண மீன்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
வண்டலூர்:
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் பார்த்து ரசித்து வந்த மீன் வடிவில் இருக்கும் மீன் அருங்காட்சியகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியத்திற்கு சென்று வண்ண மீன்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வடிவில் இருந்த மீன் அருங்காட்சியகம் ரூ.23 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு இந்த அருங்காட்சியகத்திற்குள் 28 வகையான வண்ண மீன்கள் கண்ணாடி தொட்டிக்குள் விடப்பட்டு வண்ண ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீன் வடிவில் உள்ள மீன் அருங்காட்சியகம் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் பார்க்க வசதியாக திறக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று பூங்காவுக்கு வந்த பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியகத்திற்குள் சென்று அங்கு உள்ள கண்ணாடி தொட்டிகளில் பராமரிக்கப்பட்ட வரும் விதவிதமான வண்ண மீன்களை பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.
- புதிய கல்விக் கொள்கை உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
- தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை உருவாக்க வேண்டும்.
மேலக்கோட்டையூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, எனவே பெற்றோர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது.

மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும்.அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்ட ஜெய் விஞ்ஞான், ஜெய் கிசான் மற்றும் ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றை நமது குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகளும் அவர்களின் ஆராய்ச்சிகளும் நாட்டின் அடுத்த 25 வருட வளர்ச்சிக்கு அவசியம்.
2047 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.
2028 ஆண்டு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும். 2026ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே நமது நாடு 2047ல் பொருளாதாரத்தில் முன்னேறிய சக்தியாக விளங்கும்.
2014-2015 ஆண்டில் 42,000 என்ற எண்ணிக்கையில் இருந்த காப்பீட்டு ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, இந்த வருடம் 66,000 ஆக அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
- ஹரிஹரனிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (வயது 23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறுமியிடம் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
- சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் அமணம்பாக்கம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 26). பட்டதாரியான இவர், ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆன்லைன் விளையாட்டு மூலம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்தார். மேலும் இதுபற்றி சிறுமியின் தாயிடம் கூறி ரூ.50 ஆயிரம் கேட்டும் மிரட்டினார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான விக்னேஷ்வரன் மீது ஏற்கனவே சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் 4 குற்ற வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
- திருமண பதிவிற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
- லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சந்திரகுமார் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலுவலகத்தில் பொதுமக்களிடையே பத்திரப்பதிவு மற்றும் திருமணத்திற்கு பதிவு செய்வதற்காக அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் சென்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் சேகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை இரவு 7.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 23 திருமணங்கள் நடைபெற்று பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவிற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சந்திரகுமார் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சார் பதிவாளர் சந்திரகுமார் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான நகரமான மதுராந்தகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியது. அரசு அலுவலக வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
- வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் மற்றும் கூடுதல் பிளாட்பாரம் கட்ட 9 மாதங்கள் ஆகும்.
சென்னை கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. இதையடுத்து வருகிற டிசம்பர் மாத இறுதியில் இந்த புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஸ்நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட உள்ளன. மேலும் இங்கு மாநகர பஸ்கள் வந்து செல்லவும் தனியாக பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்லும் பயணிகள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து பஸ்நிலையத்துக்கு செல்ல மாநகர பஸ்களை மட்டும் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை வண்டலூர் ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.
டிசம்பர் மாத இறுதியில் பஸ் நிலையத்தை திறக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ரெயில் நிலையத்துடன் இணைக்க பல்வேறு மாற்று வழிகளையும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோ ரெயிலை நீட்டிக்கும் திட்டமும் உள்ளது.
ஆனால் இந்த மெட்ரோ ரெயில் விரிவாக்கம் அடுத்த 2 ஆண்டுகளில் நிறைவேற வாய்ப்பு இல்லை. மேலும் இந்த நீட்டிப்பு நிதி பிரச்சினை காரணமாக 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் சேர்க்கப்பட வில்லை. இதனால் இந்த திட்டம் தாமதமாகிறது.
மேலும் மாதவரம்-சிறுசேரி இடையே 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அதை கேளம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை இணைக்கும் சாத்தியக் கூறுகளையும் அரசு ஆய்வு செய்து வருகிறது.
கிளாம்பாக்கம் அடுத்த போக்குவரத்து மையமாக மாறும் நிலையில் அதனுடன் ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் இணைக்கப்படுகிறது. இதற்கிடையே வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு நடை மேம்பாலம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை இந்திய ரெயில்வேயும் ஆய்வு செய்து வருகிறது.
வண்டலூர் ரெயில் நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் மற்றும் கூடுதல் பிளாட்பாரம் கட்ட 9 மாதங்கள் ஆகும். மேலும் இந்த பிளாட்பாரம் புறநகர் மின்சார ரெயில்களில் வந்து செல்ல மட்டுமே பயன்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
- பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
செங்கல்பட்டு:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கான தேர்வு இன்று நடந்தது.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வர வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
செங்கல்பட்டில் உள்ள புனித கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு இன்று தேர்வு எழுதுவதற்காக ஏராளமானோர் வந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தேர்வு மையத்தின் வெளிப்புற கேட் பூட்டப்பட்டது.
இதற்கிடையே காலை 9 மணிக்கு மேல் 10 பேர் தேர்வு எழுத வந்தனர். ஆனால் கேட் பூட்டப்பட்டதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை. தேர்வு எழுதவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் பள்ளி வாசலில் காத்து கிடந்தனர். பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- அண்மையில் பெய்த மழையால் வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
- வார்டுகளின் ஜன்னல் பகுதியில் செடி, கொடிகள் சூழ்ந்து புதராக கிடக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், வெண்புருஷம், கொக்கிலமேடு, பூஞ்சேரி, தேவநேரி, காரணை, மணமை, கடம்பாடி, பெருமாளேரி, வடகடம்பாடி, குழிப்பாந்தண்டலம் உள்ளிட்ட பகுதி மக்கள் பொது மருத்துவம், மகப்பேறு, விபத்து, காயம், காய்ச்சல், சர்க்கரை என அனைத்து நோய்க்கும் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் தினமும் சிகிச்சைக்கு வருகிறார்கள். உள் நோயாளியாக 10 பேர் தங்கியும் உள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. வார்டுகளின் ஜன்னல் பகுதியில் செடி, கொடிகள் சூழ்ந்து புதராக கிடக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் வார்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் நோயாளிகள் உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்ற போது, மருத்துவமனை அருகில் உள்ள குளத்தை சீரமைத்தனர். அப்போது கழிவு நீர் வடிகால் அடைக்கப்பட்டதால் அந்த நீரும் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. சிகிச்சைக்கு மருத்துவமனை வரும் நோயாளிகள் கழிவுநீர் தேங்கி கிடப்பதை பார்த்து வேறு தொற்று நோய் வந்து விடுமோ என்ற அச்சத்தில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் பரவி கிடக்கும் புதர்களை அகற்றி, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க, வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பூஞ்சேரியில் 2008ல் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 20 படுக்கைகள் மட்டுமே உள்ளது. நோயாளிகள் தற்போது அதிகரிப்பதால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற கூடுதல் கட்டிடம் தேவைப்பட்டது.
இதையடுத்து உள்நோயாளிகள் மற்றும் உடன் இருப்போர் என 80பேர் தங்கும் வகையில், சுத்திகரிப்பு குடிநீர், காற்றோட்டம், சி.சி.டி.வி கேமராக்கள் போன்ற நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. 1கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.
புதிய கட்டிடம் கட்டும் பகுதி பாறை, சரிவு மண் அடங்கிய நிலம் என்பதால் மண்ணின் தரம், தண்ணீர் மற்றும் பூமிக்குள் பாறை இருக்கும் அளவு, இவைகளை பரிசோதனை செய்ய மதுரையில் இருந்து அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் 5பேர் மாமல்லபுரம் வந்துள்ளனர். இவர்கள் கட்டுமானம் நடைபெறும் பகுதியில் "பைலிங்" மிஷின் உதவியுடன் மண் பரிசோதனை செய்து வருகின்றனர்.
- சின்ன பாப்பா சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
- மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்ன பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கூடலூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 60). இவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்ன பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






