search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுராந்தகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- ரூ.2.26 லட்சம் பறிமுதல்
    X

    மதுராந்தகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- ரூ.2.26 லட்சம் பறிமுதல்

    • திருமண பதிவிற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
    • லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சந்திரகுமார் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு, திருமணம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலுவலகத்தில் பொதுமக்களிடையே பத்திரப்பதிவு மற்றும் திருமணத்திற்கு பதிவு செய்வதற்காக அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் சென்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமானுவேல் சேகர் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு 7.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் உள்ளூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என 23 திருமணங்கள் நடைபெற்று பதிவு செய்துள்ளனர். இந்த திருமண பதிவிற்காக லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக வந்த புகாரின் பேரில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து லஞ்சம் பெற்றதாக சார்பதிவாளர் சந்திரகுமார் மற்றும் ஊழியர்களிடம் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், சார் பதிவாளர் சந்திரகுமார் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான நகரமான மதுராந்தகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தியது. அரசு அலுவலக வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×