என் மலர்
அரியலூர்
- பழங்குடி, இருளர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று தமிழர் நீதி கட்சி நிறுவனர் தெரிவித்துள்ளார்.
- 76 ஆண்டுகளாகியும் இதுவரை எந்த வசதியும் செய்து தர வில்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள குண்டவெளி(கி),முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடி, இருளர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கலெக்டர் பெ.ரமணசரஸ்வதியிடம், தமிழர் நீதி கட்சி நிறுவனர் சுபா.இளவரசன் கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் மீன்சுருட்டி அடுத்த குண்டவெளி(கி), முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடி மற்றும் இருளர் மக்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளாகியும் இதுவரை இப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த வாரம் குண்டவெளியில் இருளர் மக்களுடன் இணைந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகளுக்கு பரிசு வழங்கினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 278 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார். பிறகு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களை தேர்வு செய்யும் வகையில்
மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் மூலம் சம்மந்தப்பட்ட நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட
தாமரைக்குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கும் மற்றும் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கும் அரசின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளைகலெக்டர் வழங்கினார்.
- அரியலூரில் புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- அலுவலக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூர்:
அரியலூர் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ஏழுமலை பணி மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கன்னியாக்குமாரி துணை ஆட்சியராக பதவி வகித்து வந்த
பா.சரவணன் அரியலூர் வருவாய் கோட்டாட்சியராக பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சரவணன் அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, அலுவலக பணியாளர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதைலை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- தகவல் அறிந்து அங்கு வந்த, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்தி நகரை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து திருமானூர் போலீசார் ஒரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை, காந்தி நகரை சேர்ந்த விநாயகமூர்த்தி, குமரவேல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில், திருமானூர் சன்னிதி கீழவீதியில் சென்றனர்.
அப்போது, இவர்களுக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், குமரவேல், விநாயகமூர்த்தி ஆகிய இருவரும் காயம் அடைந்தனர்.
இதனையறிந்த காந்தி நகரை சேர்ந்த மக்கள் திருமானூர் பேருந்து நிறுத்தம் அருகே அரியலூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த, அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தாக்கியவர்களை உடன் கைது செய்ய வேண்டும் என் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்திரவாதம் கொடுத்த பின்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- ஜெயங்கொண்டம் அருகே கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கலந்துகொண்டார்.
- பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகிறார்கள்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் சுத்தமல்லி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகிறார்கள்.
இந்த கோவிலில் குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்பது குறித்து எந்தவித வரலாற்றுச் சுவடுகளும் இல்லை நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்வதாக ஊர் பொதுமக்கள் தீர்மானித்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்றன.
கடந்த பதினோரு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தற்போது கோவில் திருப்பணிகள் முற்றிலும் முடிவுற்று கும்பாபிஷேகம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி நடைபெற்ற கணபதி கோமம் மற்றும் யாகசாலை நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஊர் நாட்டாமைகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- அகழ்வாராய்ச்சியில் சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவரின் தொடர்ச்சி பாகம் கண்டறியப்பட்டுள்ளது.
- 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கை கொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சோழர் கால அரண்மனையின் செங்கல் சுவரின் தொடர்ச்சி பாகம் கண்டறியப்பட்டது.
தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு உட்பட 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாளிகை மேடு அகழ்வாய்வில் தொழிலாளர்கள், அலுவலர்கள், பயிற்சி மாணவர்கள் என 40 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வரும் அகழ்வாய்வில் ஏற்கனவே பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக்காசு, கெண்டி மூக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் அரண்மனையின் மேல்பகுதி சுவரின் 2 அடுக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனை சுவரின் தொடர்ச்சி பாகம் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமார் 22 அடுக்குகள் கொண்ட செங்கல் சுவராகும். அதே போல சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீங்கானின் உடைந்த அடிப்பாகமும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாயில் மேலும் அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் கருதுகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில், காங்கிரஸ் கட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.
மேலிடப் பார்வையாளரும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நோகாகிரண்யாதவ் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டார்.
மேலும் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாவட்ட அளவில் வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை கட்சியினர் தொடங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், பூண்டி சந்தானம்,
வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன், சீனிவாசன், சரவணன், திருநாவுக்கரசு, கங்காதுரை, முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சிறப்புக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர் நோகா கிரண்யாதவ் பேசிய காட்சி.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த மாதம் 27-ம் தேதி சக்தி கரகம் எடுத்தலுடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன்,
முருகன், கருப்புசாமி, அய்யனார், செல்லியம்மன், பெரியசாமி ஆகிய கோயில்களுக்கு தினந்தோறும் மாலை பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து, தினந்தோறும் இரவு மாரியம்மன், விநாயகர், கருப்பு சாமிகளின் வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நாளான இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி திருமானூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் 17,388 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
- குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையம் மற்றும் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மேற்பார்வையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியின் மாதிரி செயல்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு உயரம், எடை அளக்கப்பட்டது, வயதிற்கேற்ற உயரம், வயதிற்கேற்ற எடை, உயரத்திற்கேற்ற எடை குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து மூன்று வகையான சோதனை செய்யப்பட்டது.
இச்சோதனையின் மூலம் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 37 இலட்சம் குழந்தைகளில் 2.50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 17,388 குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சத்துணவு மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதே போன்று வீட்டில் குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு சத்தான உணவுகள் வழங்குவதை பெற்றோர்கள் உறுதிபடுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு காய்கறிகள், பால், பருப்பு, கீரைகள், நெய் உள்ளிட்ட சத்தான உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும். இது குறித்து பெற்றோர்கள் தங்களது உறவினர்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவினை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமாகும்.
எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.






