search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ள அறை
    X
    வாக்கு எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ள அறை

    வாக்கு எண்ணும் மையத்திற்கு கட்சி முகவர்கள் 7 மணிக்குள் வரவேண்டும் - செல்போன் கொண்டுவர தடை

    வேலூர் பாராளுமன்ற வேட்பாளர்களின் வாக்கு எண்ணும் முகவர்கள் காலை 7 மணிக்குள் வரவேண்டும் எனவும் வாக்கு எண்ணும் மையத்தினுள் தங்களுடைய செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பதிவாக உள்ள வாக்குகளை எண்ணும் மையத்தில் பணிபுரிய உள்ள 324 மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாக்கு எண்ணும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த ரெண்டாம் கட்ட இறுதி பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடந்தது.

    வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் நாளை காலை 6 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும்.

    ஒவ்வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாளரின் சார்பிலும் வாக்குகள் எண்ணும் முகவர் ஒருவர் நியமிக்கப்படுவார். இது தவிர உதவி தேர்தல் அலுவலர் மேஜையில் கூடுதலாக ஒரு முகவர் இருப்பார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்றுவாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை காலை 7.30 மணியளவில் வேட்பாளர்கள், முகவர்கள் பொது தேர்தல் பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும். அதன்பின் 8 மணியளவில் தபால் வாக்குகளும் 8.30 மணிக்கு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும்.

    வேட்பாளர்களின் வாக்கு எண்ணும் முகவர்கள் காலை 7 மணிக்குள் வரவேண்டும். வாக்கு எண்ணும் மையத்தினுள் தங்களுடைய செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. அப்படி கொண்டு வருபவர்களின் செல்போன் வைத்திட தனி மையம் அமைக்கப்பட்டு அதில் பாதுகாப்பாக வைத்துவிட்டு மையத்திற்கு சென்று பார்வையிடலாம்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தாசில்தார்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரிய உள்ள அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
    Next Story
    ×