search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் கட்சியுடன் பாஜகவுக்கு ரகசிய உடன்பாடு இல்லை- தமிழிசை
    X

    கமல் கட்சியுடன் பாஜகவுக்கு ரகசிய உடன்பாடு இல்லை- தமிழிசை

    நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது .தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி நிலையாக இருக்க வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தொடர வேண்டும். 23-ந்தேதி தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்கிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்காது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

    மத்தியில் தாமரை மீண்டும் மலரும். தமிழ்நாட்டில் தி.மு.க. பல முறை ஆண்டு இருக்கிறது. ஆனால் அப்போது எல்லாம் தமிழகத்திற்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார். அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது அவற்றை எல்லாம் செய்து இருக்கலாம். குறிப்பாக குடிநீர் பிரச்சனையில் தி.மு.க. ஆட்சி காலத்தில் தொலைநோக்கு எண்ணத்தில் செயல்படாததால் இப்போது பிரச்சனை இருக்கிறது.

    காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது மோடி ஆட்சிதான். காங்கிரஸ், தி.மு.க. பலமுறை ஆட்சியில் இருந்த போதும் இதில் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.


    நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாத கருத்துக்களை கூறுகிறார். சினிமாவில் பேசினாலே எதிர்ப்புகள் ஏற்படும். இந்நிலையில் யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும். நாம் பிரபலமாக இருப்பதால் பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார். இப்படி பேசினால் சிறுபான்மை ஓட்டு கிடைக்கும் என்று நினைக்கிறார். நம்முடைய பேச்சுக்கு எதிர் விளைவுகள் வரும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.

    அரசியலில் கமலுக்கு இன்னும் பக்குவம் தேவை. இப்படி பேசினால் இந்துக்கள் மனம் புண்படும் என்று இவர் உணரவில்லை. கமல் பிரசாரத்தில் ஏற்பட்ட சலசலப்பை நாங்கள் வரவேற்கவில்லை . யார் தாக்கப்படுவதையும் நாங்கள் ஆதரிப்பது இல்லை. தேர்தல் பிரசாரத்தில் பல தரப்பட்ட மக்கள் கூடுவார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்தது போல இங்கு நடைபெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு எந்த ரகசிய உடன்பாடும் இல்லை, எங்கள் உறவுகள் வெளிப்படையானது. தி.மு.க. உறவுதான் ரகசியமானது. தி.மு.க., தினகரனும் ரகசிய உறவு வைத்து உள்ளனர். கோட்சேவை தேசப்பக்தர் என்று எங்கள் கட்சிக்காரர் கூறியதற்கு அவரை கட்சி கண்டித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×