search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணத்துக்கு திமுகதான் காரணம் என்று வாக்குமூலம் கொடுக்க தயாரா?- தம்பிதுரைக்கு ஆர்எஸ் பாரதி சவால்
    X

    ஜெயலலிதா மரணத்துக்கு திமுகதான் காரணம் என்று வாக்குமூலம் கொடுக்க தயாரா?- தம்பிதுரைக்கு ஆர்எஸ் பாரதி சவால்

    நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம் என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? என்று தம்பிதுரைக்கு ஆர்எஸ் பாரதி சவால் விடுத்துள்ளார். #RSBharathi #ThambiDurai
    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழினத்தலைவர் கலைஞரின் மறைவின்போது, கழகத் தலைவர் தளபதி மெரீனாவில் நல்லடக்கம் செய்திட இடம் ஒதுக்கித்தருமாறு தமிழக முதலமைச்சரை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வேண்டுகோள் வைத்தபோதும்; கொஞ்சமும் நெஞ்சில் ஈவுஇரக்கமின்றி, ‘இடம்தர முடியாது’ என்று மறுத்தார்.

    என்றாலும், எங்கள் தலைவர் தளபதியின் ஆலோசனையின்பேரில், நீதிமன்றம் சென்று, தமிழினத் தலைவர் கலைஞரை மெரீனாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறப்பட்டதிலிருந்து தொடர்ந்து, இதுவரையில் இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் நடைபெறாத வகையில் தலைவர் கலைஞருக்கு புகழஞ்சலிக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தலைவர் தளபதி.

    இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் தலைவர் கலைஞரும், தமிழகத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகளை தமிழக மக்கள் திரும்பி பார்க்கச் செய்தது தலைவர் தளபதியின் பெரு முயற்சி.

    அதனைத் தொடர்ந்து, நூறே நாட்களில் தலைவர் கலைஞருடைய திருவுருவச் சிலையினை தத்ரூபமாக, தலைவர் கலைஞர் நேரில் நிற்பதைப் போன்ற வடிவத்துடன் அமைந்திட அவ்வப்போது சிலை உருவாவதை நேரில் பார்வையிட்டு, அனைவரும் பாராட்டிடும் வண்ணம் ஒரு அற்புதமான சிலையினை வடித்திட பெருமுயற்சி மேற்கொண்டவர் தலைவர் தளபதி.

    தமிழினத் தலைவர் கலைஞரின் மறைவிற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகள் காரணமாக, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தமிழக மக்கள் மனதில் மாபெரும் எழுச்சியையும் வரவேற்பையும் பெற்று, அதன் காரணமாக கழகம் அடைந்து வரும் மாபெரும் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. முன்னணியினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உளறல்களை நித்தம் நித்தம் அறிக்கையாகவும், பேட்டியாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.


    ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, “அம்மா” என்றும்; “தாயே” என்றும் நடித்து, அவரை ஏமாற்றி பிழைத்து வந்தவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க சார்பில் அவருக்கு ஒரு சிலை அமைத்தனர். ஆனால், அச்சிலை ஜெயலலிதா உருவமாக இல்லாமல், முதல்வர் எடப்பாடியின் உறவினர் மாதிரி இருந்ததாக, ஊடகங்கள் பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் கேலி செய்தன.

    மேலும், ஒவ்வொரு நாளும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஒவ்வொரு விசித்திரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 75 நாட்களில் அப்பல்லோ மருத்துவமனையில் கோடிக்கணக்கான ரூபாயில் இட்லி, தோசை சாப்பிட்டதாக செய்தி உலா வருகிறது. நிலைமை இப்படியிருக்க, தமிழினத் தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின்னர், தலைவர் தளபதி கலந்து கொள்ளுகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் மாநாடுகளில் கூடுவதைப் போல மக்கள் கூட்டம் கூடுகிறது.

    அண்மையில், திருச்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிலும் செஞ்சியில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவிலும் மாநாடுகளைப் போல மக்கள் திரண்ட கூட்டத்தை கண்டும் நாளை (27-12-2018) கரூரில் நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தலைவர் தளபதி வருகைபுரிவதை கண்டு, மிரண்டு, கரூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி., தம்பிதுரை பித்தனைப் போல பிதற்ற ஆரம்பித்திருக்கிறார்.


    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமி‌ஷன் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது. தம்பிதுரைக்கு தெம்பும் திராணியும் இருக்குமேயானால், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனில், ‘ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம்’ என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா? அவ்வாறு அவர் தாக்கல் செய்தால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பத்திரிகையாளர் ஊடகத்தினருக்கு தம்பிதுரை அளித்த பேட்டி குறித்து தி.மு.க சார்பில் குறுக்கு விசாரணை செய்து, பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #RSBharathi #Jayalalithaa #ThambiDurai
    Next Story
    ×