என் மலர்
செய்திகள்

அதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி
நெல்லை:
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.ம.மு.க. வளர்ச்சி பெற்று வருகிறது. வருகிற தேர்தல்களில் அ.தி.மு.க.- அ.ம.மு.க. இணையாமல் ஜெயிக்க முடியாது என எண்ணி இரு கட்சிகளையும் இணைய வைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக அறிகிறோம்.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் அழிக்க நாங்கள் வரவில்லை. எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வும் இருக்க வேண்டும், இரட்டை இலையும் இருக்க வேண்டும். தி.மு.க. தான் எங்களுக்கு முதல் எதிரி. முதல்வரையும், சில அமைச்சர்களையும், நிர்வாகிகளையும் மாற்றி ஜெயலலிதா ஆட்சியை அமைத்தால் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. இணைய தயார்.
அ.தி.மு.க., தி.மு.க. பா.ஜனதா மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய தலைமயை மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது உண்மைதான். அதை சசிகலா, டி.டி.வி. தினகரனால் தான் கொடுக்க முடியும். முன்கூட்டியே இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
மதசார்பற்ற அணிகளுடன் தான் கூட்டணி என்று டி.டி.வி. தினகரன் தெளிவுப்படுத்தி விட்டார். எனவே பா.ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டோம். அ.தி.மு.க.வை பொறுத்த வரை தவறு செய்தது ஓ.பன்னீர்செல்வம் தான். கட்சியை பிளவுப்படுத்தி இரட்டை இலையை முடக்க காரணமாக இருந்த ஓ.பி.எஸ்.ஐ. மீண்டும் கட்சியில் சேர்த்ததை மக்கள் விரும்பவில்லை. அ.தி.மு.க. வில் 90 சதவீத தொண்டர்கள் எங்களுடன் உள்ளனர். இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிடும். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம்.
தமிழக அரசு உள்ளாட்சி, இடைத்தேர்தலை நடத்தாமல் உள்ளது. எனினும் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். கஜா புயல் நிவாரணத்திற்கு முதல்வர் 15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டார். அதுவே தவறு. 40 ஆயிரம் கோடி கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் வெறும் 350 கோடியை மட்டும் வழங்கி மத்திய அரசு தமிழகத்தை அவமானப்படுத்தி விட்டது. தமிழக அமைச்சர்களோ, முதல்வரோ மக்கள் பிரச்சினைக்காக டெல்லி செல்வ தில்லை. தங்களை பாதுகாத்து கொள்ளவே டெல்லி செல்கின்றனர். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுவிப்பு துணிச்சலான முடிவு.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #ammk #admk #dmk