என் மலர்

  செய்திகள்

  நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்கள்- பராமரிப்பு இல்லாததால் கூட்டம் குறைந்தது
  X

  நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்கள்- பராமரிப்பு இல்லாததால் கூட்டம் குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்ததால் தினசரி வருமானமும் கணிசமாக குறைந்து வருவதால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. #AmmaUnavagam
  சென்னை:

  சென்னையில் அரசு மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

  கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமான்ய மக்கள் மலிவு விலையில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் உணவு சாப்பிட்டு வருகின்றனர்.

  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த இத்திட்டம் சென்னை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  முதலில் 200 வார்டுகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதற்கு பொது மக்கள் இடையே  அதிக வரவேற்பு கிடைத்ததால் சென்னையின் விரிவாக்கப் பகுதியிலும் அடுத்தடுத்து தொடங்கப்பட்டது. தற்போது 407 இடங்களில் உணவகம் நடைபெற்று வருகிறது.

  ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5-க்கு சாம்பார் சாதம், லெமன் சாதம், கொத்தமல்லி சாதம், ரூ.3க்கு தயிர்சாதம், இரவு ரூ.3க்கு 2 சப்பாத்தி என குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் வயதானவர்கள், சாலையோரங்களில் தங்கி இருப்பவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது.

  அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புற நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட அம்மா உணவகங்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அம்மா உணவகத்தை யாரும் கண்டு கொள்வது கிடையாது. வருவாய் இல்லாத அது ஒரு செலவினமாக இருப்பதால் மாநகராட்சி அதிக கவனம் செலுத்துவது இல்லை. வருடத்திற்கு ரூ.140 கோடி இதற்காக செலவிடப்படுகிறது. ஆனால் இதில் இருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக  உள்ளது.


  அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாத நிலை உள்ளது. மேலும் அம்மா உணவகங்களில் முன்பு இருந்த தரம் கூட இப்போது இல்லை என்று வழக்கமாக சாப்பிடக்கூடியவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறைவாக இருப்பதால் சுவை இருப்பதில்லை. அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததாலும், அலட்சியத்தாலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் “ஏனோ தானோ” என உணவை தயாரித்து வழங்குகிறார்கள்.

  இதனால் அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்தது. தினசரி வருமானமும் கணிசமாக குறைந்து வருவதால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

  39 அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்து விற்பனை மிகவும் சரிந்துள்ளது. ஒரு சில நாட்கள் வருவாய் கூடுதலாகவும் சில நாட்கள் மோசமான நிலையிலும் விற்பனை இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர்.

  அம்மா உணவகம் ஒரு வருடமாக மோசமான நிலைக்கு செல்வதற்கு என்ன காரணம்? விற்பனை எதனால் குறைந்தது? என்பதை கண்டறிய 39 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள 39 உணவகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அதனை பற்றி முழுமையாக ஆய்வு செய்கின்றனர்.

  ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது. காலை, மதியம், இரவு 3 வேளையிலும் நடந்த விற்பனை எவ்வளவு என்ற விவரங்களை மாதம் வாரியாக கணக்கெடுக்கிறார்கள்.

  ஜெயலலிதா தொடங்கி வைத்த இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், நிறுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி இதனால் கூடுதல் செலவாவதால் நிதி பற்றாக்குறையால் தடுமாறுகிறது.

  ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள அரசு மோசமான நிலைக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.

  சிறப்பு அதிகாரிகள், மோசமான அம்மா உணவகங்களில் தினமும் கள ஆய்வு செய்த பிறகு மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

  அதனைத் தொடர்ந்து அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்து அம்மா உணவகங்களின் தரம் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
  Next Story
  ×