search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் இளைஞர் கொலை: விடுதலைச்சிறுத்தைகள் மீது பழியை சுமத்துவதா?: பா.ம.க.வுக்கு திருமாவளவன் கண்டனம்
    X

    கடலூர் இளைஞர் கொலை: விடுதலைச்சிறுத்தைகள் மீது பழியை சுமத்துவதா?: பா.ம.க.வுக்கு திருமாவளவன் கண்டனம்

    கடலூர் மாவட்ட இளைஞர் கொலை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மீது குற்றம் சுமத்துவதை திருமாவளவன் வன்மையாக கண்டித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், சாத்தாவட்டம் கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் என்கிற இளைஞர் நேற்று காலமாகி விட்டார். அவர் சில நாட்களுக்கு முன்னர் தனது உறவினர்கள் சிலரின் முன்னிலையிலேயே, அவர்கள் தடுத்தையும் மீறி, தனக்குத் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக்கொண்டார்.

    இதனால் அவர் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினருக்கு    எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    அவரது இறப்பானது வெளிப்படையாக நிகழ்ந்த ஒரு தற்கொலை தான் என்பது அக்கிராமத்தைச் சார்ந்த அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரின் தற்கொலையையும் பா.ம.க தமது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முயற்சிப்பது, திசை திருப்புவது, மிகவும் ஆபத்தான, அநாகரிகமான போக்காகும்.

    தலித் மக்களுக்கு எதிராகவும் குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராகவும் வெறுப்பை விதைக்கும் வகையிலும் வன்முறை வெறியாட்டத்தைத் தூண்டும் வகயிலும் பா.ம.க தரப்பிலிருந்து அப்பட்டமானதொரு அவதூறு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    இதில் துளியும் உண்மை இல்லை. திட்டமிட்டு விடுதலைச்சிறுத்தைகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புவதையே தமது தொழிலாகக் கொண்டு தரம்தாழ்ந்த அரசியல் செய்வதே பா.ம.க.வின் வாடிக்கையாக உள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

    ஆனந்தன் மணல் கொள்ளையை எதிர்த்தும் அநீதிகளை எதிர்த்தும் தட்டிக்கேட்ட ஒரு போராளி தானா? உள்ளூரிலேயே அவருக்கு ஏதேனும் காதல் பிரச்சினை இருந்ததா? அவர் காதலித்த பெண்ணால் அவர் மனமுடைந்தாரா, இல்லையா? அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் அவரது சமூகத்தைச் சார்ந்த, குறிப்பாக பா.ம.க.வைச் சார்ந்த இளைஞர்கள் அவரைக் கேவலமாகப் பேசினார்களா, இல்லையா? தற்கொலை செய்ய முயற்சித்தபோது அங்கிருந்த சிலர் அவரைத் தடுத்தார்களா, இல்லையா?

    இந்நிலையில், பா.ம.க.வின் உருட்டல் மிரட்டல் அரசியலுக்கு அஞ்சாமல் தமிழக அரசு நேர்மைத்திறத்தோடு இவ்வழக்கை விசாரிக்க வேண்டுகிறோம். எனவே, இவ்வழக்கை மையப் புலனாய்வு (சி.பி.ஐ.) விசாரணைக்கு அல்லது சிபிசிஐடி விராரணைக்கு உட்படுத்துமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    அத்துடன், ஆனந்தனின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
    Next Story
    ×