search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்: ராயப்பேட்டை போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
    X

    இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும்: ராயப்பேட்டை போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

    முன்விரோதம் காரணமாக இளம்பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என ராயப்பேட்டை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் யாஸ்மீன் (வயது 23) சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எம்.தயா என்பவரிடம் இருந்து கடந்த 2016ம் ஆண்டு கடன் வாங்கினேன். வட்டியுடன் கடன் தொகையை கடந்த மே மாதம் திருப்பிச் செலுத்தி விட்டேன். ஆனால், தயா என்னிடம் போனில் ஆபாசமாக பேசினார். இதுபற்றி ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தேன்.

    அப்போது போலீஸ் விசாரணைக்கு வந்த தயா, இனி இதுபோல ஆபாசமாக பேச மாட்டேன் என்று எழுதிக் கொடுத்து சென்றார். ஆனால், என் மீது கடும் கோபத்தில் இருந்தார்.

    கடந்த ஜூன் 11-ந்தேதி 3 பேருடன் வந்த தயா, என்னை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். மயக்கமடைந்த நான் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்.

    இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஜூன் 13-ந்தேதிக்கு எனக்கு எதிராக தயாவின் தோழி ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனே வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்து, சிறையில் அடைத்து விட்டனர்.

    ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் என் புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் என்னை கைது செய்தார்.

    நான் அளித்த புகாரின் அடிப்படையில் தயா மற்றும் அவரது ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயப்பேட்டை இன்ஸ்பெக்டருக்கு உத்தர விட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘லலிதா குமாரி வழக்கில், புகார் கொடுக்கப்பட்டதால், அது குறித்து விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் மனுதாரர் கொடுத்த புகாரை கிடப்பில் போட்டு விட்டார். எனவே, மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால், அந்த வழக்கை உரிய காரணத்தை தெரிவித்து, முடித்து வைக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
    Next Story
    ×