search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: பா.ஜனதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
    X

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: பா.ஜனதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

    வருமானவரி சோதனைக்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று பா.ஜனதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சென்னை:

    மே-1 தொழிலாளர் தினத்தையொட்டி சிந்தா திரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற் சங்கங்கள் மட்டும் பாடுபடுகின்றனர். விவசாய உழைப்பாளர்களை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் கலைஞர். மே தின பூங்காவில் உழைப்பாளர்களின் நினைவு சின்னம் கலைஞர் ஆட்சியில் தான் நிறுவப்பட்டது.

    விவசாய தொழிலாளர்களுக்காக 25-ந் தேதி நாங்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினோம். அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதற்காக தொழிற் சங்கங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண் காணித்து கொண்டிருக்கிறார்கள்.

    எனவே மருத்துவர்களின் அனுமதி கிடைத்தால் பிறந்த நாளன்று நிச்சயம் கலைஞர் தொண்டர்களை சந்திப்பார்.

    கே:- நீங்கள் அ.தி.மு.க. வின் ஒரு பிரிவுக்கு ஆதரவாக பேசுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டுகிறாரே?

    ப:- எங்கே அப்படி பேசினேன்? நான் சொல்வதில் ஒரு பகுதியை மட்டும் அவர்கள் படிக்கிறார்கள். அதற்கு மட்டும் பதில் சொல்கிறார்கள். அதை வைத்து நீங்களும், கேள்வி கேட்கிறீர்கள். அது தான் எனக்கு வருத்தமாக உள்ளது.

    நான் கேட்பதெல்லாம் பாரதீய ஜனதா அரசு, மாநில சுயாட்சி என்ற கொள்கைக்கு எதிராக மாநிலத்தில் ஏன்? தேவையில்லாமல் தலையிடுகிறது என்பதும் ஒன்று.


    அதே நேரத்தில் ஏற்கனவே தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீடு- அலுவலகத்தில் நடந்த வருமானவரி சோதனை, அதே போல் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை இவற்றை ஒழுங்குபடுத்தி விட்டு அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பா.ஜனதா அரசு தெரிவிக்க வேண்டும். இது வரை சோதனை விவரம் முழுமையாக வெளியிடப்படவில்லை. எனவே இப்போது மற்றவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை வேண்டாம் என்று சொல்லவில்லை. இதுவும் ஒரு கண்துடைப்பாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இதை கூறுகிறேன்.


    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. மாவட்ட கழக செயலாளர்கள் ஜெ. அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம், தொழிலாளர் அணி செயலாளர் சிங்கார ரத்தின சபாபதி, தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், கி. நடராஜன், பூச்சி முருகன், ஐ. கென்னடி,கு.க.செல்வம் எம்.எல்.ஏ, ரகுமான்கான், ஆர்.டி.சேகர், மருதுகணேஷ், சிம்லா முத்துசோழன், பகுதிசெயலாளர் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், ஐ.சி.எப். முரளி, தமிழ்வேந்தன், சேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ.எம்.வி, பிரபாகர்ராஜா, சேப்பாக்கம் பகுதி துணை செயலாளர் பா.சிதம்பரம், பிரபா, உள்பட ஏராளமான பிரமுகர்களும் எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகிகளும் திரளாக வந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார்கள்.

    இதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், தொழிற்சங்க செயலாளர் சைதை சிவராமன், தலைவர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் மே தின பூங்காநினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×