என் மலர்tooltip icon

    மணிப்பூர்

    • மணிப்பூரில் வன்முறையை தொடர்ந்து 127 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது
    • வன்முறை தொடர்பாக 1047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

    மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபுர் மாவட்டத்தில் இரண்டு பாதுகாப்பு செக்போஸ்ட்-ஐ சூறையாடிய கும்பல் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.

    கெய்ரென்பாபி, தங்கலாவை போலீஸ் செக்போஸ்ட்-ஐ ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய கும்பல் சூறையாடி, ஆயுதங்களை கொள்ளையடித்துள்ளனர்.

    மேலும், ஹெயிங்கங் மற்றும சிங்ஜமெய் காவல் நிலையத்தில் புகுந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், வீரர்கள் அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

    கவுட்ருக், ஹராயேதெல், சென்ஜம் சிராங் பகுதியில் ஆயுதம் ஏந்தியவர்களுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும், அதில் வீரர் ஒருவர் உள்பட இருவர் காயம் அடைந்துள்ளனர்.

    மேற்கு இம்பாலில் உள்ள சென்ஜாம் சிராங் பகுதியில் போலீஸ் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். பிஷ்னுபுர்- சுரசந்த்புர் மாவட்ட எல்லையில் 500 முதல் 600 பேர் கூடியதால், போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். அப்போது 25 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை கும்பல் ஒன்று கூடுவது போன்ற ஆங்காங்கே சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், பதட்டமான நிலை தொடர்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மணிப்பூரில் வன்முறையை தொடர்ந்து 127 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வன்முறை தொடர்பாக 1047 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • நண்பருடன் காரில் சென்ற பத்திரிகையாளர் வீடு திரும்பவில்லை
    • இம்பாலில் ஆண் நண்பருடன் சென்ற மாணவி மாயம்

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வன்முறையில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் 3 மாதங்களில் 30 பேர் மாயமானது தெரியவந்துள்ளது. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது.

    வன்முறை தொடங்கிய நேரத்தில் மே மாதம் 6-ந்தேதி சிங் என்பவர் (பத்திரிகையாளர், ஆராய்ச்சியாளர், சமூக சேவகர்) மாயமாகியுள்ளார். அவருடன் யும்கைபாம் கிரண்குமார் சிங் என்பவரும் மாயமாகியுள்ளார். இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை. இருவரும் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஒலிம்பிக் பார்க்கை ஒட்டியுள்ள சாஹெய்பங் பகுதியில் இருவரும் காரில் சென்றுள்ளனர். அதன்பின் அவர்களின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதேபோல் மே மாதத்தில் சுமார் 30 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது. மாயமானவர்களை தேடிவருகிறோம். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    மாயமான சிங் தனது மகனை விஞ்ஞானியாக்க விரும்பினார். அவர்கள் குடும்பம் மே மாதம் ஷில்லாங் செல்ல இருந்தது. அந்த நிலையில்தான் காணாமல் போகியுள்ளார்.

    அவரது மகன் இதுகுறித்து கூறுகையில் ''எனது தந்தை கடின உழைப்பாளி, என்னை ஷில்லாங்கில் உள்ள இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி நிகழ்ச்சியில் என்னை சேர்க்க விரும்பினார்.'' என்றார.

    அவரது மனைவி ''நாங்கள் எனது மகனை டெல்லியில் படிக்க வைக்க விரும்பினோம். எனது கணவர் மட்டும்தான் சம்பாதித்து வந்தார். தற்போது அவர் மாயமாகி உள்ள நிலையில், எப்படி குடும்பத்தை நிர்வகிப்பது எனத் தெரியவில்லை'' என்றார்.

    பத்திரிகையாளர் ஒருவர் காணாமல் போன நிலையில், இம்பாலில் ஜூலை 6-ந்தேதி ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ஜூலை 6-ந்தேதி ஊடரங்கு தளர்த்தப்பட்டதால், ஹிஜாம் லுவாங்பி என்ற 17 வயது மாணவி நீட் பயிற்சிக்காக வெளியில் சென்றுள்ளார். அவரை அவருடைய ஆண் நண்பன் அழைத்துச் சென்றுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், மோட்டார் சைக்கிளில் நீண்ட தூரம் சென்றுள்ளனர். அவர்கள் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இம்பால் பள்ளத்தாக்கில் இருவரும் நம்போல் நோக்கி சென்றுள்ளதாக சிசிடிவி கேமரா மூலம் உறுதிப்படுத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    சைபர்கிரைம் போலீசார் தரப்பில் கடைசியாக அந்த மாணவியின் செல்போன் குவாக்டா பகுதியிலும், அவரின் நண்பர் செல்போன் லம்டான் பகுதியிலும் சுவிட்ச் ஆஃப் ஆனதாக கூறப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு பகுதியாகும். குவாக்டா பிஷ்ன்புர் மாவட்டத்தில் உள்ள பகுதியாகும், லம்டான் சுரசந்த்புரில் உள்ளது. இரண்டு இடங்களுக்கும் இடையிலான இடைவெளி 18 கி.மீ. ஆகும். வன்முறை நடைபெற்ற முக்கியமான இடமாக இந்த இரண்டு இடமும் பார்க்கப்படுகிறது.

    அவள் வீட்டிற்கு திரும்பாத நிலையில், நான் போன் செய்தபோது, அவள் பேசினாள். நம்போலில் இருப்பதாக தெரிவித்த அவள், பயந்துபோய் இருந்தாள். இடம் தெரிந்தால், அவளது தந்தையை அனுப்பி வீட்டிற்கு அழைத்து வர முடியும் என்பதால் அவள் இருக்கும் இடத்தை தெரிவிக்குமாறு கேட்டேன். அதன்பின் அவளது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது'' என அந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

    அவர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் அச்சப்படுகிறார்கள். மாணவியின் ஆண் நண்பர் செல்வோன் தற்போது உபயோகத்தில் உள்ளதாகவும், அவரது போனில் புதிய நம்பர் பயன்படுத்தப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ''போனில் சிக்னல் கிடைத்த இடம் மெயின் ரோட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், போலீசார் அங்கு செல்ல தயங்குகிறார்கள்'' என அந்த பையனின் தந்தை தெரிவித்துள்ளார்.

    பழங்குடியின தலைவர்கள் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர், ''காணாமல் போனவர்களின் 44 உடல்கள் இம்பால் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அந்த உடல்களை அடக்கம் செய்வதற்காக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
    • மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

    வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் ஆய்வு செய்த அவர்கள் இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

    பின்னர் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்தில் பேசுவதற்கு விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அப்போது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, மக்கள் எழுப்பும் பிரச்சனைகளையும், மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகளையும் முன்வைப்போம். காலதாமதம் செய்யாமல், எங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்று, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்துமாறு இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், இது தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்புகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
    • பயோமெட்ரிக் தரவுகளை சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    இம்பால்:

    மணிப்பூரில் இரு சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மே 3ம் தேதி ஆரம்பித்த வன்முறையின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. இந்த வன்முறையுடன் போதைப்பொருள் பயங்கரவாதம், மியான்மரில் இருந்து மணிப்பூருக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், காடுகளில் நடக்கும் போதைப்பொருள் சாகுபடி, கடத்தல் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.

    இந்நிலையில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை மணிப்பூர் அரசு சேகரிக்கத் தொடங்கி உள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத மியான்மர் குடியேறிகளின் பயோமெட்ரிக் தரவுகள் முழுமையாக பெறப்படும்வரை அனைத்து மாவட்டங்களிலும் பயோமெட்ரிக் இயக்கம் தொடரும். இப்பணிகளை செப்டம்பர்  மாதத்திற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத மியான்மர் குடியேறிகளை அடையாளம் கண்டு அவர்களின் பயோமெட்ரிக் தரவுகளை பெறுவது குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் குழுவை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்று உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கும் பணிகளை செப்டம்பருக்குள் முடிக்கும்படி மணிப்பூர் மற்றும் மிசோரம் அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    குகி சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கும் மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் கலவரத்தின்போது 7 மியான்மர் நாட்டவர், தோட்டா மற்றும் வெடிமருந்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

    காடுகள் அழிப்பு, போதைப்பொருள் சாகுபடி மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு மியான்மர் குடியேறிகளே காரணம் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளன.
    • குகி மற்றும் மைதேயி இன மக்கள் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்று அந்த பெண் கூறினார்.

    மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் இழுத்து வந்தனர். அவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளது.

    இந்த சூழ்நிலையில், மணிப்பூரில் உள்ள கள நிலவரம் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (ஐ.என்.டி.ஐ.ஏ.) கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்னர். இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் கவுரவ் கோகாய், திரிணாமுல் சார்பில் சுஷ்மிதா தேவ், திமுகவின் கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் குமார் ஜா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    கலவர கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரை, எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள் கனிமொழி மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அந்த பெண் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். கலவரத்தின்போது கொல்லப்பட்ட தனது மகன் மற்றும் கணவரின் உடல்களைப் பார்க்க எனக்கு உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மோதலில் ஈடுபடும் இரண்டு சமூகங்களான குகி மற்றும் மைதேயி இன மக்கள் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் அந்த பெண் கூறினார்.

    • போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது
    • அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறைய இன்னும் கட்டுக்குள் வரவில்லை. வன்முறை தொடர்வதால் அண்டை மாநிலங்களில் மணிப்பூர் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரின் அண்டை மாநிலமான மிசோரமில் 13 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மிசோரமில் குகி-ஜோ பழங்குடியினர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக ஒற்றுமை பேரணி நடத்தினர். இதில் அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா கலந்து கொண்டார். இந்த பேரணியின் போது மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் குறித்து அவதூறாக பேசப்பட்டுள்ளது.

    மிசோ பழங்குடியினருக்கு குகி-ஜோ பழங்குடியினர் மற்றும் மியான்மரின் சின் மக்களுடன் நல்ல தொடர்பு உள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சின் மக்கள் அகதிகளாக மிசோரம் மாநிலத்தில் உள்ள முகாமில் உள்ளனர்.

    மிசோரம் மாநில முதல்வர் பேரணியில் கலந்து கொண்ட நிலையில், அடுத்த மாநில உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுறித்து பிரேன் சிங் கூறியதாவது:-

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை அரசு மேற்கொள்ள தொடங்கியபோது, பதற்றம் உருவானது. மணிப்பூர் மாநிலத்தில் வாழும் குகி சமுதாயத்தினருக்கு எதிராக மணிப்பூர் அரசு செயல்படவில்லை.

    அனைத்து சம்பவங்களையும் மணிப்பூர் அரசு கண்காணித்து வருகிறது. மணிப்பூர் ஒருமைப்பாட்டை அழிக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் வகையில் ஆயுதமேந்தியவர்களுக்கும் அரசுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. எனக்கு எதிராக மிசோரம் பேரணியில் அவதூறு குரல் எழுப்பியது காட்டுமிராண்டி தனமானது.

    மற்றொரு மாநிலத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மிசோரம் மாநில முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் கள நிலவரம் தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றி, அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்தார்.

    • திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.
    • உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53% மானியர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே சமயம் நாகாக்கள் மற்றும் குக்கிகளை உள்ளடக்கிய பழங்குடியினர் 40% மற்றும் முக்கியமாக மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

    இந்நிலையில், கடந்த மே மாதம் மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.

    இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையால் அங்கு வசித்து வந்த மக்கள் பலர் வீட்டைவிட்டு வெளியேறினர். இதனால் அங்கு ஏராளமான வீடுகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளன.

    இந்நிலையில், மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள மோரே மாவட்டத்தில் இன்று ஒரு கும்பல் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்தது.

    காங்போக்பி மாவட்டத்தில் ஒரு கும்பல் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் நடந்த மறுநாளில் ஆளில்லா வீடுகளுக்கு தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திமாபூரில் இருந்து நேற்று பேருந்துகள் வந்து கொண்டிருந்தபோது சபோர்மீனாவில் பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்தது.

    உள்ளூர்வாசிகள் மணிப்பூர் பதிவு எண்களைக் கொண்ட பேருந்துகளை சபோர்மேனாவில் நிறுத்தி, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சரிபார்த்தனர். அப்போது சிலர் பேருந்துகளுக்கு தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • என்னை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வெள்ளை நிற காரில் தூக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
    • படுகாயங்களுடன் சாலையில் நின்றபோது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது.

    இம்பால்:

    மணிப்பூரில் 2 மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த மே மாதம் வன்முறை தொடங்கியபோது நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    என்னை 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வெள்ளை நிற காரில் தூக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கார் டிரைவரை தவிர மற்ற 3 பேரும் என்னை சித்ரவதை செய்து தாக்கினர்.

    பின்னர் 3 பேரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இரவு முழுவதும் சாப்பிட எதுவும் தரவில்லை. தண்ணீர் கூட கொடுக்கவில்லை. ஒரு இடத்தில் அடைத்து வைத்தனர்.

    12 மணி நேரத்திற்கும் மேலாக கயிற்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தேன்.

    இதனால் மயக்கமடைந்த நான் திடீரென விழித்து பார்த்தபோது அந்த கும்பல் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததையும், கைகள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருப்பதையும் அறிந்தேன். அவர்கள் நான் தப்பி செல்லாமல் இருப்பதற்காக காவலுக்கு சிலரை நிறுத்தி இருந்தனர்.

    அதில் ஒருவரை அழைத்து நான் கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறி கயிற்றை அவிழ்க்குமாறு தெரிவித்தேன். முதலில் அவர் மறுத்தார். பின்னர் கயிற்றை அவிழ்த்து விட்டார்.

    உடனே கழிவறைக்கு சென்ற நான் அங்கிருந்து கட்டிடத்தின் பின்புறமாக தப்பி சென்று சிறிய மலை குன்றிலிருந்து உருண்டு மெயின் ரோட்டுக்கு வந்தேன்.

    படுகாயங்களுடன் சாலையில் நின்றபோது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்தது. அந்த முஸ்லிம் ஆட்டோ டிரைவர் நிலைமையை உணர்ந்து என்னை காய்கறிகளுக்குள் மறைத்து வைத்து பிஸ்னுபூர் காவல் நிலையம் நோக்கி சென்றார்.

    அப்போது அந்த கும்பல் காரில் விரட்டி வந்தது. ஒரு வழியாக நான் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
    • சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இம்பால் :

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதல்-மந்திரி பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மியான்மரில் இருந்து ஆவணங்கள் இன்றி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே வலியுறுத்தல்
    • 718 பேர் நுழைந்த நிலையில் அசாம் ரைபிள் படையிடம் விளக்கம் கேட்டுள்ளது மணிப்பூர் அரசு

    மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறன்றன. ஒருபக்கம் வன்முறை நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் மியான்மரில் இருந்து எந்தவித ஆவணங்களும் இன்றி 700-க்கும் மேற்பட்டோர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளது அம்மாநில அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்திய-மியான்மர் எல்லையில் அசாம் ரைபிள் படை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 22 மற்றும் 23-ந்தேதியில் 718 பேர் மியான்மருக்குள் வந்துள்ளனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்று அசாம் ரைபிள் மியான்மருக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே, கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்ட நிலையில், தற்போது மணிப்பூரில் அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில், எப்படி அனுமதித்தீர்கள் என்று விளக்கம் கேட்டுள்ளது.

    இதுதொடர்பாக மணிப்பூர் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக நடைபெற்றபோது, மியான்மரில் இருந்து மணிப்பூருக்கும் வருவோரிடம் முறையான விசா, தெளிவான ஆவணங்கள் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு சார்பில் அசாம் ரைபிள் படைக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மணிப்பூரில் நடைபெற்று வரும் அசாதாரண சூழ்நிலையில், 718 பேர் நுழைந்துள்ளது மிகவும் தீவிரமான விசயமாக பார்க்கப்படுகிறது.

    மணிப்பூர் எல்லைக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்று அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அத்துடன் மியான்மரில் இருந்து வந்தவர்களை உடனடியான வெளியேற்றும்படி அசாம் ரைபிள் படையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    வந்துள்ளவர்களின் பயோமெட்ரிக் பதிவு செய்ய வேண்டும். புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை.

    மணிப்பூர் மாநிலம், இம்பால் நகரில் குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர். அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

    மே 4ம் தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.

    இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது. பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரத்தில், பெண்களை வீடியோ எடுத்த நபரை கைது செய்து விசாரணை அமைப்புகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளன.

    மேலும், வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்த அமைப்புகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    • பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
    • மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.

    இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

    மறுநாள் (அதாவது மே 4-ந்தேதி) குகி இனத்தவர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர். குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர்.

    அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

    அதோடு இம்பால் நகரில் மே 4-ந்தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது.

    நேற்று இரவு பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாரார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அந்த பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்து வருகிறார்கள். நேற்றுவரை சுமார் 300 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

    சூரச்சந்த்பூரில் தீ வைத்து பள்ளி எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் இன்னும் தணியவில்லை. அங்கு பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

    மணிப்பூரில் கலவரம் செய்து இன குழுக்கள் போலீசாரிடம் இருந்து சுமார் 5 ஆயிரம் ஆயுதங்களை பறித்து சென்று விட்டனர். அவற்றில் 3,400 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,500 துப்பாக்கிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மணிப்பூரில் சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் வதந்தி பரவுகிறது. எனவே தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×