search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வன்முறை தொடர்வதால் மத்திய அரசு நடவடிக்கை- மணிப்பூருக்கு கூடுதல் ராணுவம் விரைந்தது
    X

    வன்முறை தொடர்வதால் மத்திய அரசு நடவடிக்கை- மணிப்பூருக்கு கூடுதல் ராணுவம் விரைந்தது

    • 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
    • மணிப்பூரில் கலவர கும்பலை சேர்ந்த ஒருவரை ஆயுதத்துடன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும் பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இதனையடுத்து சுமார் 3 மாதங்களாக தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதனிடையே இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். மேலும் கோரிக்கை மனுவை மணிப்பூர் கவர்னர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர்.

    அதோடு இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தை முடக்கிய எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதோடு கலவரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் வலியுறுத்தலாக உள்ளது.

    இந்த நிலையில் மணிப்பூரில் கலவர கும்பலை சேர்ந்த ஒருவரை ஆயுதத்துடன் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. சுராசந்த்பூரில் பாதுகாப்பு கிடங்கில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கலவர கும்பலால் எடுத்து செல்லப்பட்ட ஆயுதங்களை மீட்கும் பணிகளில் மணிப்பூர் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர். இதுவரை பள்ளத்தாக்கில் 1057 ஆயுதங்களும், 14 ஆயிரத்து 201 தோட்டாக்களும், மலை மாவட்டங்களில் 138 ஆயுதங்களும், 121 தோட்டாக்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    பிஷ்னுபூர் 2-வது ராணுவ ஆயுத கிடங்கில் இருந்து எடுத்து செல்லப்பட்ட 15 ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் போலீசாரிடம் இருந்து கும்பல் பறித்து சென்ற 4 ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    மாநிலம் முழுவதும் இதுவரை 1,195 கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் 14,322 பல்வேறு வகையான வெடி மருந்துகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே மணிப்பூர் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர 10 ஆயிரம் வீரர்களை கொண்ட மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் தொடர்ந்து வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் தொடர்வதால் 800 வீரர்களை கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சனிக்கிழமை இரவு மாநிலத் தலைநகர் இம்பாலுக்கு வந்த அவர்கள் வடகிழக்கு மாநிலத்தின் பல மாவட்டங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    வன்முறை சம்பவத்தின் போது 3 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நடந்த தவுபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் போலீஸ் நிலைய பகுதியில் இதுவரை 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×