என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினரும், போலீசாரும் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
- காஷ்மீர் மக்கள் விரும்புவது வேலைவாய்ப்பு, சிறப்பான வர்த்தக சூழ்நிலை.
- பல ஆண்டுகளாக மக்கள் பாடுபட்டு வளர்த்த நிலம், அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது.
புதுடெல்லி :
காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு நிலங்களில் வசிக்கும் மக்கள், வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆக்கிரமிப்பு அகற்றுவதை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளன.
இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இதுதொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காஷ்மீர் மக்கள் விரும்புவது வேலைவாய்ப்பு, சிறப்பான வர்த்தக சூழ்நிலை, அன்பு ஆகியவைதான். ஆனால் அவர்களுக்கு என்ன கிடைத்தது? பா.ஜனதாவின் புல்டோசர்.
பல ஆண்டுகளாக மக்கள் பாடுபட்டு வளர்த்த நிலம், அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. அமைதியையும், காஷ்மீரையும் மக்களை ஒன்றுபடுத்தித்தான் பாதுகாக்க வேண்டுமே தவிர, மக்களை பிரித்து பாதுகாக்க நினைக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.
- அவருக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது.
ஸ்ரீநகர் :
காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தொலைதூர கிராமமான கெரன் பகுதி பனிப்பொழிவால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருந்ததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது.
எனவே கிரால்போராவில் உள்ள மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமோ அங்கு செல்ல முடியாத நிலை.
இதனால் செய்வதறியாது திகைத்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், இது குறித்து கிரால்போரா ஆஸ்பத்திரி மகப்பேறு டாக்டர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் வாட்ஸ்அப் 'வீடியோ கால்' மூலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அர்சாத் சோபிக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்மூலம் டாக்டர் அர்சாத் சோபியும் செயல்பட, கர்ப்பிணிக்கு சுகபிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
'வீடியோ கால்' மூலம் சுக பிரசவத்துக்கு வழி செய்த டாக்டர் பர்வைசின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூல பொருளாக உள்ளது.
- பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்கள் அவசியம்.
புதுடெல்லி:
நாட்டில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் தாதுப்பொருள் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் புவியியல் ஆய்வை தொடங்கியது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரிலும் தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களிலும் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உள்பட 51 வகை கனிம தொகுதிகளை கண்டறிந்து உள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டு பிடிக்கப்படுவது இதுேவ முதல்முறை.
மொபைல் போன், லேப் டாப், உள்ளிட்ட மின்சாதங்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயன்பேட்டரி தான். மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூல பொருளாக உள்ளது. இதனால் கச்சா எண்ணை போல, லித்தியம் சர்வதேச முக்கியத்துவம் பெற்று உள்ளது.
பெட்ரோல், டீசல், நிலக்கரி உள்ளிட்ட புதை படிவ எரி பொருள்கள் கரியமில வாயு வெளியேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிலையில் கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த புதை படிவ எரிசக்தியை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் இறங்கி உள்ளன.
இதன் ஒரு பகுதியாக மின் வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன. வரும் 2035-ம் ஆண்டில் உலக அளவில் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை மின் வாகனங்களாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தியாவில் 2030ம் ஆண்டில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் 30 சதவீதம் மின் வாகனங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் உலக நாடுகள் சவால்களை எதிர் கொண்டு வருகின்றன. பேட்டரி தயாரிப்புக்கு லித்தியம், நிக்கல், கோபால்ட் உள்ளிட்ட கனிமங்கள் அவசியம். இவை போதுமான அளவில் கண்டு பிடிக்கப்படவில்லை.
சிலி, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதிக அளவில் லித்தியம் இருப்பைக் கொண்டிருக்கின்றன. மின் வாகனத் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கும் நோக்கில் உலக நாடுகள் லித்தியம் இருப்பை கண்டறிய தீவிர முயற்சி மேற் கொண்டு வருகின்றன. இந்த சூழலில் இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ததாக உள்ளது.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக மின் வாகன விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் லித்தியம் இருப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் வெளி நாடுகளில் இருந்து லித்தியம் அயன்பேட்டரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மின் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உள் நாட்டில்யே லித்தியம் அயன்பேட்டரி தயாரிப்பை மேற் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
- மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
- அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஸ்ரீநகர்:
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் காஷ்மீரில் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி 10-ந்தேதி வரை கடும் பனிப்பொழிவு நிலவும் குல்பர்கில் நடைபெறுகிறது.
இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 600 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக போட்டிகளை முன்னிட்டு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கொட்டும் பனியில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார்.
அனுராக் தாகூர் விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
- இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார்.
ஆனால் வாகனங்கள் வராததால் அவரால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் தவித்தார்.
இதையறிந்த இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.
பின்னர் அங்குள்ள பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகே உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர், கர்ப்பிணியை தோளில் சுமந்து வந்து உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே குப்புவாராவில் உள்ள தாங்கர் என்ற பகுதியில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட கர்ப்பிணியை கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்றி மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- பாரமுல்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
- மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.
- காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை மாறாக மிகுந்த அன்புடன் இதயத்தை கொடுத்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 3 ஆயிரத்து 3500 கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 'நான் எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை... நாட்டு மக்களுக்காக மேற்கொண்டேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.
தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ராகுல்காந்தி, அந்த வலி வன்முறை தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது என்றார். வன்முறையை தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. ராணுவ வீரனின் குடும்பத்தினருக்கு அந்த வலி புரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும்.
ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வரும்போது ஏற்படும் வலியை காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள். இந்த யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் ஒருவரின் அன்பானவனரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிப்பதற்கு முடிவு கட்டுவதேயாகும். அது ராணுவ வீரராக இருந்தாலும், சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும் அல்லது எந்த ஒரு காஷ்மீரியாக இருந்தாலும் சரி. ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்து வர முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள், இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல மாறாக அவர்கள் பயப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை சென்றால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எனக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. நான் இது குறித்து யோசித்தேன். பின்னர், எனது வீடான ஜம்மு காஷ்மீரில் எனது மக்களுடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது வெள்ளை சட்டையை சிவப்பு நிறமாக மாற்ற அவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நினைத்தேன். காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை, மாறாக மிகுந்த அன்புடன் அவர் இதயத்தை கொடுத்துள்ளனர்' என்றார்.
- ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4080 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.
- ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ பாத யாத்திரை நிறைவு விழா ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட பிறகு அவர் இறுதிகட்டமாக ஜம்மு காஷ்மீரில் முகாமிட்டு உள்ளார்.
ராகுல்காந்தி ஸ்ரீநகரின் பாந்தா சவுக் பகுதியில் நேற்று பாதயாத்திரையை தொடங்கினார். கோன்வார் வரை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு வழி நெடுகிலும் உள்ளூர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஸ்ரீநகரில் இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. இறுதி நாளில் லால்சவுக் பகுதியில் தேசிய கொடியேற்ற அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் ஒரு நாள் முன்கூட்டியே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி நேற்று பாத யாத்திரையை நிறைவு செய்தார். லால் சவுக் மணிக்கோபுரத்தில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். அதோடு அவரது பாத யாத்திரையும் நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மக்கள் ஜனநாயக கட்சி யின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி இது தொடர்பாக டுவிட்டர் பதிவில் கூறும் போது, "1948-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசிய கொடியேற்றினார். தற்போது ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4080 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். அவர் 400 இடங்களில் மக்களுடன் கலந்துரையாடினார். 12 பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்த பாதயாத்திரையின்போது நிருபர்கள் சந்திப்பு 13 முறை நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பிலும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ பாத யாத்திரை நிறைவு விழா ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது. அங்குள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விழா நடந்தது. அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்டேடியத்துக்கு பேரணியாக சென்றார்.
- 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.
- நடைபயணம் நிறைவு பிறகு எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி அவர் கன்னியாகுமரியில் பாத யாத்திரையை தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சலபிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் செய்த பிறகு ராகுல்காந்தி கடந்த 19-ந்தேதி காஷ்மீர் சென்று அடைந்தார்.
அவரது நடைபயணத்தின்போது ஏராளமானவர்கள் உடன் சென்றனர். சோனியாகாந்தி, பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடைபயணத்தின்போது உடன் சென்றனர். முக்கிய பிரமுகர்களும் அவருடன் சென்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், ராகுல்காந்தியின் பாத யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஸ்ரீநகரின் எம்.ஏ. சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அவர் நடைபயணத்தை இன்று நிறைவு செய்கிறார். அதன் பின்னர் எஸ்.கே.மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
- பல்வேறு மாநிலங்களை கடந்து வந்த பாத யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
- காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டரை கடந்த ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை நிறைவடைகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்துடன் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவடைகிறது.
இந்நிலையில், பாத யாத்திரையின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல் காந்தி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும், அன்பு எப்போதும் வெற்றி பெறும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.
- ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர்.
- ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய உத்தரவு.
காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் நயீம் கான் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே தீவிரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள அனைத்து கட்சி ஹூரியத் மாநாட்டின் அலுவலகத்தை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய டெல்லி கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஹூரியத் மாநாட்டு அலுவலகத்துக்கு இன்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சென்றனர். அங்கு அலுவலகத்தை சீல் வைத்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.






