என் மலர்tooltip icon

    குஜராத்

    • டெல்லியில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் கலந்துகொண்டார்
    • வதோதராவில் கெஜ்ரிவாலின் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை பாஜகவினர் கிழித்து எறிந்தனர்.

    வதோதரா:

    விஜயதசமி தினத்தில் டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பவனில் நடந்த மதமாற்ற நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இந்துக்கள் புத்த மதத்துக்கு மாறினர். இந்த நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதமும் கலந்துகொண்டார். அப்போது அவர் இந்து கடவுள்களுக்கு எதிராக உறுதிமொழி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாஜகவினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினர். அத்துடன், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் கவுதமை நீக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெறும் மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பான பேனர்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் திட்டமிட்டபடி மூவர்ணக் கொடி யாத்திரையை தொடங்கிய அரவிந்த கெஜ்ரிவால், ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். இதன்மூலம், தான் இந்து மதத்திற்கு எதிரானவன் இல்லை என்று கூறியிருக்கிறார்.

    மேலும் பாஜகவை சாடிய கெஜ்ரிவால், "அவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள். கடவுளைக்கூட அவர்கள் அவமதிக்கிறார்கள்." என்றார்.

    • பேனர்களை கிழித்தது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
    • பாஜகவின் தோல்வி பயத்தை இந்த அராஜகம் காட்டுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குறிப்பிட்டார்.

    வதோதரா:

    குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தலைமையில் வதோதராவில் மூவர்ணக்கொடி யாத்திரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கட்சியினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், கெஜ்ரிவாலின் இந்த யாத்திரைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் இந்து விரோத கருத்துக்களை கூறியதாக கூறி பாஜகவினர் இன்று வதோதராவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மூவர்ணக்கொடி யாத்திரை தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் படம் அச்சிடப்பட்டிருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இந்த அத்துமீறல் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக பாஜகவினருக்கும் ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் ஊழல் உருவானது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் துர்கேஷ் பதக் கூறுகையில், குஜராத்தில் பாஜகவின் தோல்வி பயத்தை இந்த அராஜகம் காட்டுகிறது என்றார்.

    • பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட்டது.
    • ஹெராயினும், படகையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடலோர காவல்படை மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு படகை தடுத்து சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் படகில் இருந்த 6 பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த படகு பாகிஸ்தானை சேர்ந்த அல்சாகர் படகு என்பதும் அங்கிருந்து ஹெராயினை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 50 கிலோ ஹெராயினும், படகையும் பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ஊழியர்களையும் விசாரணைக்காக ஜாகாவ் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.360 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து என்ஜினில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்தனர்
    • கால்நடைகளை தண்டவாளத்திற்கு அருகில் விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    அகமதாபாத்:

    மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத்தின் காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரெயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.15 மணியளவில் வத்வா மற்றும் மணிநகர் இடையே சென்றபோது, குறுக்கே எருமை மாடுகள் கூட்டமாக வந்துள்ளன. எருமை மாடுகள் மீது ரெயில் மோதியது. இதையடுத்து டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். எருமை மாடுகள் மீது மோதியதில் ரெயில் எஞ்சினின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. அதை அதிகாரிகள் சரி செய்தனர்.

    உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ரெயில் மோதியதில் 3-4 எருமை மாடுகள் பலியாகியிருக்கலாம் என தெரிகிறது. இறந்த மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்திய பிறகு ரெயில் மெதுவாக புறப்பட்டுச் சென்று காந்தி நகர் ரெயில் நிலையத்தை அடைந்தது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க, கால்நடைகளை தண்டவாளத்திற்கு அருகில் விட வேண்டாம் என, அருகிலுள்ள கிராம மக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது

    • குஜராத் மாநிலத்தில் கார்பா நடனம் ஆடிக் கொண்டிருந்த 21 வயது இளைஞர், மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அகமதாபாத், குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு பாரம்பரிய கார்பா நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், விரேந்திர சிங் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அங்கு, விரேந்திர சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • 2014-ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட சாதனையை 8 ஆண்டு காலத்திற்கு பிறகு முறியடித்தார்.
    • தமிழக வீராங்கனைகள், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய பகுதிகளில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) போட்டியில் தமிழக வீராங்கனை ரோசி மீனா பால்ராஜ், 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தையும் அவர் தட்டிச் சென்றார்.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. 8 ஆண்டு காலத்திற்கு பிறகு இந்த சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டிய தமிழக வீராங்கனைகள் பவித்ரா வெள்ளிப்பதக்கமும், 3.90 மீட்டர் உயரம் தாண்டிய பாரனிகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். 


    ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். தூத்துக்குடியை சேர்ந்த அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கும் (தகுதி இலக்கு 8.25 மீட்டர்) தகுதி பெற்றார். 

    • குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    • கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்குவங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், கர்நாடக வீராங்கனை திலோத்தமாவை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

    இதில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்கு வங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.

    • குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி கட்டப்படும்.
    • மேலும், அரசு மருத்துவமனையும் கட்டித்தரப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

    வரப்போகும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் குஜராத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரசு பள்ளி, அரசு மருத்துவமனைகளை கட்டித்தருவேன்.

    டெல்லியில் கொண்டு வந்துள்ள கல்வித் திட்டத்தை இங்கு அமல்படுத்துவேன். உங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என தெரிவித்தார்.

    • பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.
    • சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது மீராபாய் சானுவின் இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் எதிர்பார்த்தபடியே தங்கம் வென்று அசத்தினார். பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார்.

    இந்த பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும் (187 கிலோ), ஒடிசாவின் ஸ்னேகா சோரன் வெண்கலப் பதக்கமும் (169 கிலோ) வென்றனர்.

    சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது தனது இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மேலும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டதாகவும் மீராபாய் சானு கூறினார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பிரதிநிதியாக பங்கேற்றது பெருமையான தருணம். தொடக்க விழாவில் மணிப்பூர் குழுவை வழிநடத்தும்படி என்னைக் கேட்டபோது உற்சாகம் இரட்டிப்பானது என்றும் மீராபாய் சானு கூறினார்.

    • பொதுமக்களுடன் பிரதமர் ரெயிலில் பயணம் செய்தார்.
    • அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 2வது நாளாக இன்று காலை மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரெயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். காந்திநகர்-மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில், ரெயில்வே ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுடன் அகமதாபாத் வரை பிரதமர் பயணம் செய்தார். 

    நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ரெயில் நாட்டின் இயக்கப்படும் 3-வது வந்தே பாரத் விரைவு ரெயில் ஆகும். 

    இதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர்  அசைத்து தொடங்கி வைத்தார். மாலையில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.

    • 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு திருவிழா அரங்கேறுகிறது.
    • மொத்தம் 36 விளையாட்டுகளில் இரு பாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அகமதாபாத்:

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்படுகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    விழாவில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தேசிய விளையாட்டு போட்டியில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள். இன்று முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை போட்டி நடக்கிறது. குஜராத் மாநிலம் இந்த போட்டியை நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

    கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டியை நடத்த போதிய வசதியின்றி கோவா ஒதுங்கியது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு தேசிய விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறுகிறது.

    • சூரத்தில் இருந்து பாவ் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிமிதமாக முன்னேறியுள்ளது.

    பிரதமர் மோடி இன்று 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். சூரத் விமான நிலையத்தில் மோடியை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் வரவேற்றார்.

    பின்னர் மோடி, சூரத்தில் ரோடுஷோ நடத்தினார். கோதாதர பகுதியில் இருந்து லிம்பயத் வரை காரில் இருந்தபடி சாலையின் இரு புறமும் திரண்டிருந்த மக்களுக்கு கையசைத்து சென்றார். அப்போது மோடியை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதையடுத்து, குஜராத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த பல திட்டங்களை தொடக்கிவைத்த பின்னர் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர், கடந்த 20 ஆண்டுகளில் சூரத் அபரிமிதமாக முன்னேறியுள்ளது என்றார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    வைர ஆராய்ச்சி மற்றும் வணிக (டிரீம்) நகரத் திட்டம் முடிந்ததும், சூரத் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக உருவெடுக்கும்.

    நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, இங்கு விமான நிலையத்தின் அவசியத்தை அப்போதைய மத்திய அரசிடம் விளக்கி அலுத்துவிட்டோம். இப்போது, ​​இங்குள்ள விமான நிலையத்திலிருந்து பலர் வந்து செல்வது நகரத்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. இது இரட்டை இயந்திர அரசாங்கத்தின் பலன்.

    சூரத்தின் வைரம் மற்றும் ஜவுளித் தொழிலை நம்பி பல குடும்பங்கள் உள்ளன. டிரீம் சிட்டி திட்டம் நிறைவடைந்தவுடன் உலகின் பாதுகாப்பான மற்றும் வசதியான வைர வர்த்தக மையமாக சூரத் உருவெடுக்கும்.

    நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நான்கு கோடிக்கும் அதிகமான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 32 லட்சம் பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சூரத்தில் இருந்து 1.25 லட்சம் பேர் உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து, இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் நவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார்.

    நாளை காலை காந்திநகர்- மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை காந்திநகர் ரெயில் நிலையத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    ×