என் மலர்
நீங்கள் தேடியது "Morbi bridge mishap"
- பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
- தற்போதைய உடனடித் தேவை, பாலம் விபத்து தொடர்பாக விரிவான விசாரணை.
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த கேபிள் பாலம் இடிந்த விழுந்த இடத்தை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலும் உடன் இருந்தார். மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் அவர்களது துணிச்சலான சேவையைப் பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து மோர்பியில் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சாங்க்வி, மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா, குஜராத் மாநில அரசின் தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மீட்பு பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து பிரதமருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். அப்போது பேசிய பிரதமர், இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் அனைத்து உதவிகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

தற்போதைய உடனடித் தேவை, விபத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் கண்டறிய பரந்த மற்றும் விரிவான விசாரணை என பிரதமர் கூறினார். விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்களிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவற்றை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னதாக விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உள்ளூர் மருத்துவமனைக்கும் சென்று பிரதமர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.






